மருங்காபுரி காட்டில், புத்திசாலி நரி ஒன்று இருந்தது. தனித்து, அடையாளம் தெரிந்தது. எந்த செயலையும் எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்து முடித்து விடும். கூட்டத்தைச் சேர்க்காமல், தனியாகவே முடிக்கும் திறன் கொண்டது.
வேலையில் குறிக்கீடு ஏற்பட்டு, தாமதமாகும் என்பதால் தான் யாரையும் சேர்ப்பதில்லை. ஆனால், கிடைக்கும் உணவை பகிர்ந்து கொடுக்கும். அதனால், எல்லா மிருகங்களிடமும், அதற்கு நல்ல பெயர். அதன் வாழ்க்கை துன்பம் இன்றி, ஆனந்தமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் இரவு -
காட்டின் பக்கத்தில், மனிதர்கள் வசிக்கிற ஊர்களைப் பார்த்த வண்ணம் சென்றது. அதன் கண்ணில், மாந்தோப்பு ஒன்று தென்பட்டது. கொத்துக் கொத்தாக, காய்களும், பழங்களும் தொங்கிக் கொண்டிருந்தன. சுற்றிலும், வேலி போடப்பட்டிருந்தது.
அதில், நுழைந்து செல்ல ஒரு வழியைக் கண்டுபிடித்தது. அதன் வழியாக, எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் சென்று வர முடியும்.
அந்த வழியாக, தோப்பினுள் சென்றது நரி!
நிலவு வெளிச்சம் காய்ந்தது. காவலுக்கு யாருமில்லை. மாம்பழங்கள் உதிர்ந்து கிடந்தன. அவை வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தன.
ஒன்றை எடுத்து தின்று பார்த்தது; மிகவும் ருசியாக இருந்தது. நல்லப் பழங்களை பொறுக்கி எடுத்தது.
மறுநாள் -
எடுத்து வந்த பழங்களை, மற்ற மிருகங்களுக்கு கொடுத்தது நரி.
மாம்பழத்தை தின்ற முயல், மான், ஒட்டகச்சிவிங்கி எல்லாம் பாராட்டின. கரடியும், ஒரு பழத்தை வாங்கி சாப்பிட்டது. அதன் ருசியில் மயங்கியது.
நரி கொடுத்த பழம் போதவில்லை. என்ன செய்யலாம் என யோசித்தது கரடி.
ஒரு முடிவுடன் காத்திருந்தது.
அன்று இரவு மீண்டும் மாந்தோப்பிற்கு சென்றது நரி! காத்திருந்த கரடியும் பின் தொடர்ந்தது. சுற்றும், முற்றும் நோட்டம் பார்த்த நரி, நுழைந்து சென்றது. தொடர்ந்து வந்தக் கரடியும் அதே வழியில் சென்றது.
இதை பார்த்தும் அமைதியானது நரி.
பின் தொடர்ந்து வந்த கரடி, 'தவறாக நினைக்காதே தம்பி! நீ கொடுத்த மாம்பழம் போதவில்லை; அதன் ருசியால் சொக்கிவிட்டேன். நாக்கு அதிகமாக சாப்பிட துாண்டியது. அதனால் தான் உன்னை பின் தொடர்ந்து வந்தேன்...' என்றது.
'அதனால் என்ன... கொட்டிக் கிடக்கின்றன பழங்கள்... எவ்வளவு வேண்டுமோ சாப்பிடுங்கள்...'
வயிறு முட்டச் சாப்பிட்டது கரடி.
'போகலாமா...' என்றது நரி.
'இரு வர்றேன்...' என்றபடி, சுற்றும் முற்றும் பார்த்தது கரடி. அதன் கண்களில், ஒரு சாக்குப்பை தென்பட்டது. மாம்பழங்களை பறித்து, சாக்குப்பையில் நிரப்பி துாக்கி வந்தது கரடி.
மறுநாள் -
காட்டில் எல்லா மிருகங்களையும் அழைத்து, பறித்து வந்த பழங்களைக் கொடுத்தது கரடி.
விருந்தோம்பலால் நரியை விட, நல்ல பெயர் வாங்கி விட்டதாக மகிழ்ந்தது.
அன்று இரவு, சாக்குப்பையுடன் மீண்டும் தோட்டத்தில் புகுந்தது கரடி.
மரத்தில் ஏறி, பழங்களை பறித்தபோது, 'பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான்...' என உரக்கப் பாடியது.
இதை கவனித்ததும், 'விழும் பழங்களை எடுத்தால், 'ஏதோ மிருகம் தின்று விட்டு போகட்டும்' என்று தோட்டக்காரர் விட்டு விடுவார். ஆனால், மரத்தில் ஏறி பறிப்பது ஆபத்தை தரும்... உழைத்து உருவாக்கியவருக்கு நஷ்டம் ஏற்படுத்தக்கூடாது...' என எச்சரித்தது நரி.
அது பற்றி கவலைப்படவில்லை கரடி.
மரத்தில், பழங்கள் குறைவதைப் பார்த்தார் தோட்டக்காரர்.
பழம் திருடு போவதாக சந்தேகம் வந்தது. அதைக் கண்டுபிடிக்க, காவலர்களை நியமித்தார்.
அன்று இரவும் வழக்கம் போல், தோட்டத்தில் நுழைந்தது கரடி. மரத்தில் ஏறியபோது சுற்றி வளைத்தனர். செம்மையாக அடி வாங்கியது கரடி. வலி தாங்க முடியாமல், எப்படியோ ஓடித் தப்பியது. இனி, திருடக்கூடாது என சபதம் ஏற்றது.
குழந்தைகளே... உழைப்பில் உருவான செல்வத்தை தானம் செய்வது தான் சிறந்தது. திருடுவது தவறு... திருடி தானம் செய்வது அதைவிட தவறு.
த.விஜயபால்