சாப்பிடலாம் பசலை!
ஆரோக்கிய உணவுகளில் முதன்மை வகிப்பது கீரைகள். தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
பசலைக்கீரையின் பயன் அறிவோம்.
இந்த அற்புத கீரை, உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்யும். இதில், கலோரி மற்றும் கார்போ ஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்கும். வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும். இதயத்தை பாதுகாக்கும்.
பசலைக்கீரையில் உள்ள, 'கரோட்டினாய்டு' என்னும் நிறமி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. தினமும் உணவில் சேர்த்தால், கெட்ட கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்க்கலாம்.
கண் பிரச்னைகளில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும். மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். மூட்டு வலியையும் குணப்படுத்தும்.
பெயருக்கு தண்டனை!
மனிதனை தனித்து அடையாளப் படுத்துவது பெயர்கள் தான்.
சில பெயர்களை சூடினால், சில நாடுகளில் தண்டனை உண்டு. என்னப்பா புது வம்பு என்கிறீர்களா... இதில் உள்ள சுவாரசியத்தை பார்ப்போம்...
ஹிட்லர்: ஐரோப்பிய நாடான ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். இவரது பெயரை சூட்ட, ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், 1943ல் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறினால் தண்டனை வழங்கப்பட்டது.
மேசியா: அமெரிக்காவில், 7 வயது சிறுவனுக்கு, 'மெசியா' என பெயர் சூட்டினர் பெற்றோர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அந்த பெயர் சூட்டக்கூடாது என, சிறுவனின் பெற்றோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில், 2013ல் வழக்கு தொடரப்பட்டது.
மெசியா என்பது, 'மீட்பர்' என்ற பொருளில் கடவுளைக் குறிக்கும். அந்த பெயர் சில மதங்களில் பொதுவாக உள்ளது. எனவே, யாருக்கும் சூட்ட முடியாது என நீதிமன்றம் தடை விதித்தது. ஒரு கூட்டத்தினர், 'விடுதலை அளிப்பவர்' என்ற பொருளில் இந்த பெயரை வழங்குகின்றனர்.
அகுமா: கிழக்காசிய நாடான ஜப்பானில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, அகுமா என பெயர் சூட்டினர். இதை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவித்தனர். உடனடியாக அவர்கள் மீது வழக்கு பாய்ந்தது. ஜப்பான் நீதிமன்றத்தில், இந்த பெயருக்கு தடை விதிக்க வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரித்த நீதிமன்றம், அகுமா என்ற பெயரை ஜப்பானில் யாரும் சூட்டக்கூடாது என தீர்ப்பளித்தது. அந்த குழந்தையின் பெயர் மாற்றப்பட்டது.
ஜப்பானிய கதைகளில், அகுமா என்பது ஒருவகை ராட்சத உருவத்தைக் குறிக்கும். மேலும், 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்ற விளையாட்டில் பிரசித்தி பெற்ற கதாப்பாத்திரமாகவும் இது உள்ளது.
ஹாரி பாட்டர்: புகழ் பெற்ற எழுத்தாளர் ஹாரி பாட்டர். இவரது பெயரை சூட்ட, வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நகைச்சுவை திரைப் படங்கள் மற்றும் கார்ட்டூன் பாத்திரங்களின் பெயர்களை சூட்டவும் தடை உள்ளது.
மலக்: மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில், 'மலக்' என்ற பெயர் சூட்ட தடை உள்ளது. இது, தேவதை, வானவர் என பொருளில் பயன்படுகிறது. எனவே இந்த பெயரை சூட்டினால் கடும் தண்டனை உண்டு.
முடிசூடும் பெருமாள்: இந்தியாவின் தென் பகுதியில் இருந்த நாடு திருவாங்கூர். இப்போதைய, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென்பகுதியை உள்ளடக்கியது. இங்கு, பின் தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள், சில பெயர்களை சூட தடையிருந்தது. இதை, ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர், தகழி சிவசங்கரன்பிள்ளை எழுதிய, 'தோட்டியின் மகன்' என்ற நாவலில் பதிவு செய்துள்ளார். இந்த புத்தகம் தமிழிலும் வெளியாகியுள்ளது.
இந்த நாட்டுக்கு உட்பட்டிருந்த தமிழ் பேசும் பகுதிகளில், 'முடிசூடும் பெருமாள்' என்ற பெயரை, பின் தங்கிய வகுப்பினர் சூடவும் தடை இருந்தது. இது பற்றி, வாய்மொழிகள் வழக்கில் உள்ளன.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.