யோசனையுடன் படுத்திருந்தது முயல்.
அப்போது, 'என்ன யோசனையாக இருக்கிறாய்...' என்று கேட்டது நரி.
'என் முன்னோரில் ஒருவர், ஆமையிடம் தோற்ற கதையை காலம் காலமாக சொல்லி வருகின்றனர். மிகவும் வேதனையாக இருக்கிறது. அதனால், மீண்டும் ஒரு பந்தயத்தில், ஆமையை ஜெயித்து, அந்த அவப்பெயரை நீக்குவது பற்றி யோசிக்கிறேன்...'
'நல்ல யோசனை தான்; நாளையே பந்தயத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்...'
சொன்னபடியே ஏற்பாடு செய்தது நரி. பந்தய பாதையும் வகுக்கப்பட்டது.
மறுநாள், மிருகங்கள் எல்லாம் கூடின.
ஆமையும், முயலும் மிடுக்குடன் வந்தன.
பந்தயம் துவங்கியது.
வழக்கம் போல, மெதுவாக நகரத் துவங்கியது ஆமை.
துள்ளிக்குதித்தபடி, 'சோம்பேறியாய் துாங்காமல், வெற்றி இலக்கை அடைய வேண்டும்' என ஓடியது முயல்.
வழியில் ஒரு புதர் தென்பட்டது. அங்கு முனகல் சத்தம் கேட்டது.
நின்று கவனித்தது முயல்.
ஏதோ ஒரு பிராணி முனகி கொண்டிருந்தது.
'காப்பாற்றலாமா... ஓடிவிடலாமா'
சற்று நிதானித்து யோசித்தது முயல். அதன் மனம் நெகிழ்ந்தது.
முனகும் மிருகத்தைக் காப்பாற்றிய பின் ஓடலாம் என முடிவு செய்தது.
பந்தயப் பாதையை விட்டு புதருக்குள் நுழைந்தது முயல்.
முட்புதரில் சிக்கி, தவித்தபடி இருந்தது ஒரு குட்டி ஆமை.
கடும் போராட்டத்துடன் புதரை விலக்கி, பாதை ஏற்படுத்தியது. குட்டி ஆமையை கவனமாக துாக்கி, பாதுகாப்பாக வெளியே விட்டது.
குதுாகலித்து நன்றி சொன்னது குட்டி ஆமை.
பின், பந்தயப் பாதைக்கு வந்து, ஓட துவங்கியது.
நேரம் கடந்து விட்டது.
வெற்றிக் கோட்டை நெருங்கியது ஆமை.
அதிவேகம் எடுத்தும், முயலின் திறன் பயனற்று போனது.
எல்லா மிருகங்களும் கேள்வி எழுப்பின.
விவரத்தைக் கூறியது முயல்.
அந்த செயலை புகழ்ந்தன விலங்குகள். உதவிய பாங்கை பாராட்டின.
குழந்தைகளே... வெற்றி முக்கியமானது தான்; அதை விட, உதவும் கடமை மிக முக்கியம்!
பிரேமா குரு