பாட்டுக் குயில் மனசுக்குள்ளே!
யார் என்னவாக வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பதையெல்லாம் மேலே இருக்கிறவன் தீர்மானிக்கிறான். அவன் திரைக்கதைக்கு நாம் நடிக்கிறோம். பாட்டுக் குயிலாக வேண்டும் என்று ஆசைப்பட்டார், பானுமதி. அவரின் அம்மா, அப்பாவும் அதையே நினைத்தனர். பானுமதியின் ரத்தத்தில் கலந்திருந்தது, சங்கீதம்.
ஆந்திர மாநிலம், ஓங்கோல் நகரின் அருகிலுள்ள தெட்டாவரம் கிராமத்தில், செப்., 7, 1925ல், பானுமதி எனும் துருவ நட்சத்திரம், பொம்மராஜு வெங்கடசுப்பையா- - அம்மணி அம்மாள் தம்பதியின் மூத்த மகளாய் உதயமானார்.
பானுமதியின் அப்பா, ஜமீன்தார்; ஓங்கோல் நகரின் வருவாய் ஆய்வாளர். இதையெல்லாம் தாண்டி, இசையின் மேல் பெருங்காதல் கொண்டவர்.
தியாகராஜ சுவாமிகளின் பாரம்பரியத்தைச் சேர்ந்த, சின்னையா பந்துலுவிடம் முறைப்படி, கர்நாடக சங்கீதம் படித்தவர். தான் பெற்ற இசை இன்பத்தை, மனைவி, மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.
கணவனும் - மனைவியும், காலை, மாலை வேளைகளில், தியாகராஜ கீர்த்தனைகளை மனமுருக பாடி, சங்கீத சஞ்சாரம் செய்து கொண்டிருப்பர்.
இசை தம்பதியின் இரு மகள்களில், கண்ணுக்கு லட்சணமாக இருந்த மூத்தவளுக்கு, சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம், சங்கீதம் தான்.
எப்போதும், ஏதேனும் ஹிந்தி பாட்டு மற்றும் தெலுங்கு கீர்த்தனையை அவர் வாய் அசைப்போட்டபடி இருக்கும். மூத்தவளின் அழகும், காதில் தேனாக பாயும் குரலும் கேட்டு, அப்பாவுக்கு பெருமிதம்.
எந்த ஒரு பாடலையும், ஒருமுறை கேட்டால் போதும், தாள லயத்துடன், அதே பாவத்தோடு, பாடும் ஆற்றல் பெற்றிருந்தார், பானுமதி. மகளின் சங்கீத ஆலாபனை கேட்டு மகிழும் வெங்கடசுப்பையா, மகளை ஊக்கபடுத்த மறந்ததில்லை.
அலுவல் விஷயமாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் போதெல்லாம், அன்றைய கர்நாடக, ஹிந்துஸ்தானி சங்கீத மேதைகளின், 'கிராமபோன் ரெக்கார்டு'களை வாங்கி வந்து, மகளுக்கு கொடுப்பார்.
இப்படி நாளொரு இசையும், பொழுதொரு பாட்டுமாக பானுமதியின் இளம் பருவம், இசையை கைகோர்த்து நடந்தன.
சுடர்விடும் சுட்டித்தனம் அவரிடம் சின்ன வயது முதலே தொற்றிக் கொண்டது. அவர் ஒரு நேர்காணலில், 'சின்ன வயதிலிருந்தே, எனக்கு எதைக் கேட்டாலும், அப்படியே அச்சு அசலாக மனப்பாடம் ஆகிவிடும்.
'புராண, இதிகாசக் கதைகள் கேட்பதிலும், சுலோகங்களை சொல்வதிலும் நான் காட்டிய ஆர்வத்தை பார்த்து, பள்ளிப் படிப்பிலும் நான் சிறந்து விளங்குவேன் என்று நினைத்தார், அப்பா...' என்றார், பானுமதி.
அப்பாவின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. பாடுவதில் கெட்டிக்காரியான தன் மகள், படிப்பிலும் நன்றாக பிரகாசிப்பாள் என்று, வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த பள்ளியில் சேர்த்தார்.
அதேபோல, அடுத்த வீட்டு பண்டிதரிடம் சமஸ்கிருத ஸ்லோகங்கள் கற்றுக்கொள்ள அனுப்பினார்; அதையும் முறையாக, ஆழமாக பயின்றார்.
பானுமதிக்கு பாட்டும், படிப்பும் நன்றாக மனப்பாடமாகி வரும் காலகட்டத்தில், 12 வயதின் இறுதியில், ஒரு கண்டம்.
மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கடசுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார்.
அவரது அவசரத்துக்கு வந்த வரன்கள், இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாகவும், ஊனமுற்றவருக்கும் பெண் கேட்டு வந்தனர். இதைக் கண்டு நொந்துப் போனார்.
'கிளியை வளர்த்தது குரங்கு கையில் கொடுக்கவா...' என்று கொதித்தார்.
'முதல்ல, உங்க உடம்பு குணமாகட்டும், அப்புறம் இதெல்லாம் பார்க்கலாம்...' என்று, கடிந்து கொண்டார், மனைவி.
பானுமதி - ராமகிருஷ்ணா தம்பதிக்கு, ஒரே மகன். பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால், மகனுக்கு, பரணி என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தங்கள் படப்பிடிப்பு நிலையத்துக்கு, 'பரணி ஸ்டூடியோ' என்றும், பட நிறுவனத்துக்கு, 'பரணி பிக்சர்ஸ்' என்றும் பெயர் சூட்டினர்.
மகன் பரணியை, மருத்துவம் படிக்க வைத்தனர். சினிமா ஸ்டுடியோ, இப்போது, பரணி மருத்துவமனையாக மாறி, சேவை செய்து வருகிறது.
— தொடரும்