பா-கே
சென்னையிலுள்ள, புகழ்பெற்ற மகளிர் கல்லுாரி ஒன்றில் படிக்கும் மாணவி, அவர். சமீபத்தில், என்னை சந்திக்க வந்திருந்தார். வழக்கமான, 'கலகல' பேச்சு என, லொட லொடத்தவர், திடீரென்று சீரியசானார்.
'ஏன்... என்னாச்சு...' என்றேன்.
'அங்கிள்... உடன் படிக்கும், 'பிரண்ட்ஸ்' சேர்ந்து, 'வாட்ஸ் - ஆப்' குழு வைத்துள்ளோம். 'கொரோனா' தொற்று காரணமாக, 'லாக் - டவுண்' இருந்தபோது, தெருவோர ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை சேகரித்து தருவதற்காக ஆரம்பித்தோம்.
'அதன்பின், தெரு நாய்களுக்கு உணவு கொடுத்தோம். அதிலிருந்து ஆரம்பித்தது, எங்களது சமூக சேவை.
'இப்போது, முதியோர் இல்லங்களுக்கு வாரம் ஒருமுறை சென்று, அங்குள்ளோருக்கு, புத்தகங்களை படித்துக் காட்டுகிறோம்.
'ஆதரவற்ற குழந்தைகளுக்கு, 'டியூஷன்' எடுப்பது, கம்ப்யூட்டர் பயன்படுத்துவது எப்படி, ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்று, சொல்லிக் கொடுக்கிறோம்.
'இப்போது, புதிதாக, தெருவில் திரியும் மனநலம் குன்றியவர்களை, உரிய காப்பகத்தில் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். இதில் என்ன பிரச்னை என்றால், நிறைய காப்பகங்களில் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.
'அங்கிள்... உங்களுக்கு தெரிந்த அரசு உயர் அதிகாரிகளிடம் பேசி, எங்களுக்கு ஒரு அங்கீகார அட்டை வாங்கிக் கொடுக்க முடியுமா என்று, கேட்கத்தான் வந்தேன். அப்படி யாரையாவது சந்திக்க ஏற்பாடு செய்தால் போதும். நாங்கள் சென்று, உரிய அனுமதி பெற்றுக் கொள்கிறோம்...' என்றார்.
'நான் கேட்டுச் சொல்றேன்மா... சரி... உன் அம்மா எப்படி இருக்காங்க. முன்பெல்லாம், 'வாரமலர்' இதழை வரி விடாமல் படித்து, விமர்சனம் எழுதுவாங்களே...' என்றேன்.
'எங்க சேவையில் அவங்களோட பங்கும் இருக்கிறதே... மற்ற, 'பிரண்ட்ஸ்' பெற்றோரும், எங்களுக்காக, பணம், 'கலெக்ட்' செய்வது, உணவு சமைத்து கொடுப்பது என்று, 'பிசி'யாக உள்ளனர். ஆனா, எங்க அம்மாக்கிட்ட ஒண்ணே ஒண்ணு தான் பிடிக்கல...' என்றார்.
'அதென்ன...' என்றேன்.
'நான் சினிமா பாட்டு கேட்பது, எங்க அம்மாவுக்கு பிடிப்பதில்லை... 'இப்ப வர்ற பாட்டெல்லாம் கேட்கிறதுக்கு தகுதியே இல்லை...' என்கிறார். இப்ப இருக்கிற போட்டி உலகத்துல, ரொம்பவே போராடித்தான் நாங்க நினைத்த இலக்கை அடைய வேண்டும்.
'அதற்காக, படிப்பு மற்றும் கூடுதல் தகுதியை வளர்த்துக் கொள்ள, பல வழிகளிலும் முயற்சித்து வருகிறோம். எப்பவாவது நேரம் கிடைக்கும்போது, 'ரிலாக்ஸ்' செய்ய, பாட்டு கேட்கிறேன். சினிமா பாட்டு கேட்டு, யாராவது கெட்டுப் போவாங்களா, அங்கிள்.
'இத்தனைக்கும், பழைய சினிமா பாடல்களை விரும்பி கேட்பார், என் அம்மா. அந்த பாடல்களில் இல்லாத விரசமா, இப்போது இருக்கிறது.
'சில பழைய சினிமா பாடல்களை, மொபைலில் பதிவு செய்துள்ளேன். கேட்டுப் பாருங்களேன்...' என்று கூறி, பாடலை ஒலிக்க விட்டார்.
* பொன்மேனி தழுவாமல், பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா...
* அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்...
* அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி...
* தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்ந்தேன்...
'இது, சும்மா சாம்பிள் தான். இதெல்லாம் கேட்டு ரசித்த, அக்காலத்தினர் கெட்டா போயினர். 'நீயும் ரசித்து கேட்கறியே... கெட்டா போயிட்ட...' என்று, அம்மாவிடம் கேட்க, அடிக்க வந்தாங்க அங்கிள்...' என்று புலம்பினாள், அப்பெண்.
'இப்ப வர்ற பாட்டெல்லாம் நான் கேட்டதே இல்லை. உன் மொபைலில் போடுறியா...' என்றேன்.
'ஓ... அதற்கென்ன...' என்று, சில பாடல்களை ஒலிக்க விட்டாள்.
* அழகிய அசுரா, அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா...
* அளவான உடம்க்புகாரி, அளவில்லா கொழுப்புக்காரி... இருக்குது, இருக்குது வாடி உனக்கு ராத்திரி கச்சேரி...
* பழுத்தாச்சு... நெஞ்சாம்பழம் பழுத்தாச்சு அணில்கிட்ட குடுத்தாச்சு...
இப்பாடல்களைக் கேட்டதும், தர்மசங்கடமாகியது எனக்கு.
'போதும், நிறுத்திடும்மா... நீ கேட்ட தகவலை கூடிய சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன்...' என்று கூறி, அனுப்பி வைத்தேன்.
ஒரு காலத்தில், இலைமறை காய் மறையாக இருந்த திரைப்படப் பாடல்கள், இப்போது, இப்படி வெட்ட வெளிச்சமானது ஏன் என்று, புரியவே இல்லை.
இரண்டாவது... சினிமா பாடல்களை கேட்டால், கெட்டு விடுவரா... விளக்குங்களேன், எனக்கு.
ப
கவியரசர் கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியது:
'டபுள் மீனிங்' பாடல்கள் தான், இப்ப ரொம்ப, 'பாபுலரா' இருக்கு. வேணும் வேணும்ன்னு கேட்கறாங்க... அதைப் பற்றி கொஞ்சம் விளக்கம் தர முடியுமா?
மூடியும், மூடாமலும், திறந்தும், திறக்காமலும் சொல்ற விஷயங்கள், பல இருக்கு... ஒவ்வொண்ணையும் அர்த்தம் பிரிச்சுப் பாக்கறாங்க. 'ஓப்பனா' எழுதிட்டா, அவன் உட்கார்ந்து யோசிக்கிறதுக்கு வேலை இல்லாமப் போயிடறது.
அவன் உட்கார்ந்து யோசிக்கிறதுக்கு, வேலை கொடுக்கணும். அவன் நேரிலே பார்க்கும் போது, ஒரு அர்த்தம் வரும். உள்ளே பிரிச்சுப் பார்க்கும் போது, இன்னொரு அர்த்தம் வரும்போது, பார்க்கிறவனுக்கு, கேக்கிறவனுக்கு கொஞ்சம் மூளைக்கு வேலையும் கிடைக்கும்; 'குஷி'யாகவும் இருக்கும்.
இதனால் தான், சாதாரணப் பாடலை விட, இந்த மாதிரியான பாடல்களுக்கு ஜனங்களிடையே மவுசு இருக்கு.
பல விதத்திலும் பெண்கள் கெட்டுப் போக, சினிமா காரணமாக இருக்கிறது என்று, நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், மக்கள் அனைவருக்கும் பொதுவான பொழுதுபோக்கு சாதனமாக, சினிமா தான் இன்று இருந்து வருகிறது. அதைப் பற்றி சொல்ல முடியுமா?
ஆங்கிலப் படங்கள் வருகின்றன. அதிலே, 'கிஸ், செக்ஸ்' இப்படி எல்லாம், 'ஓவராக' வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் ஜனங்களுக்கு, அந்த, 'டேஸ்ட்' பிடித்து விடுகிறது. தமிழிலும் அம்மாதிரி கொடுக்காவிட்டால், படம் ஓடமாட்டேங்குது.
'சொசைட்டி'யிலே சினிமாவினுடைய, 'இன்புளூயன்ஸ்' ரொம்ப அதிகம்.
'சென்சார்' எல்லாம் வச்சி, இதை கட்டுப்படுத்த முடியாது. வெளிநாட்டில் இருப்பது போல், கடைசி எல்லை வரை விட்டுடணும்... நிர்வாணப் படம் அது, இதுன்னு விட்டுடணும். அந்த வெறி அடங்கியதும், கடைசியா அவனுக்கு ஞானம் வந்துடும்.
அமெரிக்காவிலே, 'செக்ஸ்'சுக்கு எல்லா, 'சோர்சும்' இருக்கு. ஆனாலும், 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா'விலே இருக்கிற சுகம், 'செக்ஸ்'ல இல்லேன்னு, அவனுக்கு தோணுது. இந்த எல்லையை எட்டும் வரைக்கும் இவங்களையும் விட்டுட்டீங்கன்னா, கடைசியா அவங்களுக்கு அதிலே வெறுப்பு ஏற்பட்டு விடும்.
- கண்ணதாசன் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா வாசகர்களே...