மலைப் பாதை வழியே, ஜீப்பை செலுத்திக் கொண்டிருந்த கபிலன், லேசாக டீசல் வாசனை வரவே, வண்டியை ஓரமாக நிறுத்தி பார்த்தான். வண்டியின் அடியில், டீசல் லேசாக கசிந்து கொண்டிருந்தது.
கபிலன், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதால், 'டீசல் பைப்' தான், 'கட்' ஆகியிருக்கும் என்பதை தெரிந்து கொண்டான்.
மெக்கானிக் கடைக்கு போனால் தான் சரி செய்ய முடியும். சற்று தொலைவில் ஒரு டீக்கடை தெரியவே, அங்கு சென்று விசாரிக்கலானான்.
''ஐயா, ஒரு டீ போடுங்க... பக்கத்தில் மெக்கானிக் கடை ஏதேனும் இருக்குங்களா... நான் வந்த ஜீப் பழுதாகி விட்டது,'' என்றான்.
''இங்கே ஏதும் இல்லையே சார்,'' என கூறிய டீக்கடைக்காரர், தன் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த இளைஞனை காட்டி, ''தம்பி... இவரை கூட்டிட்டு போப்பா, இவருக்கு தெரியும்,'' என்றார்.
கபிலனை பார்த்து, ''என்ன ஆச்சு சார்?'' என்றான், அந்த இளைஞன்.
கிராமத்து சாயலில், அழுக்கேறிய பனியனும், கையில் மண் வெட்டியும் வைத்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை பார்த்தான், கபிலன்.
'இவனா நமக்கு உதவி செய்ய முடியும்...' என்று, சந்தேகப்பட்டான்.
''டீ குடிச்சுட்டு வாங்க சார் போகலாம்,'' என்றான், அந்த இளைஞன்.
''சரி, வாப்பா...'' என்று சொல்லி, இருவரும் ஜீப்பை நோக்கி சென்றனர்.
''சார், 'டூல்ஸ்' இருக்குங்களா...'' என்றான்.
''அது இருந்தா நானே சரி செய்திருக்க மாட்டேனா,'' என்றான் சலிப்புடன், கபிலன்.
சட்டென்று ஜீப்பின் கீழ் குனிந்து, படுத்தவாக்கில் உள்ளே சென்று பார்த்து, ''டீ கடைக்கு போய், ஒரு, 'காண்டம்' வாங்கிட்டு வாங்க சார்...'' என்றான், அந்த இளைஞன்.
கபிலனுக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்ன... 'காண்டமா...' அது எதுக்குப்பா?''
''அதுவா, 'டீசல் பைப்' லேசா, 'கட்' ஆயிருக்கு... நீங்க போய் வாங்கிட்டு வாங்க சார்...'' என்றான்.
''சரிப்பா... ஏதோ சொல்ற, வாங்கிட்டு வரேன்,'' என்று குழப்பத்துடனே, 'காண்டம்' வாங்கி வந்தான், கபிலன்.
''இந்தாப்பா... நீ கேட்டது,'' என்று, கபிலன் குரல் கொடுக்க, கையை நீட்டி வாங்கிய இளைஞன், சிறிது நேரத்தில் வேலையை முடித்து, வெளியே வந்தான்.
''டவுனுக்கு போய், 'டீசல் பைப்'பை மாத்திக்கோங்க... இப்போதைக்கு ஏதும் ஆகாது. சரிபண்ணிட்டேன்,'' என்றான்.
''காண்டத்திலே எப்படிப்பா சரி பண்ணினே?'' என, வியப்புடன் கேட்டான், கபிலன்.
''ஜீப்பில், 'பைப்' துண்டான இடத்திலே, 'காண்டத்தை' நல்லா இறுக்கமா சுத்தி கட்டிவிட்டா, டீசல் கசிவு நின்னுடும் சார்... அதை தான் நான் செய்தேன்,'' என்றான்.
ஆச்சரியமாக இருந்தது, கபிலனுக்கு.
''நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். எனக்கே இந்த ஐடியா வரலியே,'' எனக் கூறிய கபிலன், பர்சிலிருந்து, 200 ரூபாயை எடுத்து, ''இந்தாப்பா, இதை வச்சுக்கோ,'' என்றான்.
''சாதாரண உதவி. இதுக்கு எதுக்கு சார் காசு. வேண்டாம், நீங்க கிளம்புங்க,'' என்றான்.
''ரொம்ப தேங்ஸ்பா... சரி, நீ என்ன வேலை செய்யிற?''
''சும்மா தான் சார் இருக்கேன். இப்போதைக்கு, அப்பாவுக்கு விவசாயத்துல உதவியா இருக்கேன்.''
''என்ன படிச்சிருக்கே?''
''நானும், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தான் சார்.''
சுதாரித்த கபிலன், ''சாரி நண்பா... உங்களை பார்த்தா அப்படி தெரியல... அதான் உங்களை ஒருமையில் பேசிட்டேன்...'' என்றான்.
புன்னகையுடன், ''பரவாயில்லை சார்,'' என்றான்.
''ஏதும் வேலைக்கு முயற்சி பண்ணவில்லையா,'' என்றான், கபிலன்.
''அடுத்த வாரம், ஒரு நேர்முக தேர்விற்கு போறேன், சார்... ஆனால், எனக்கு கிடைக்கும்ன்னு நம்பிக்கையில்லை,'' என்றான், இளைஞன்.
''ஏன்?''
''என்னைப் போல, 50 - 54 சதவீதம் மதிப்பெண் எடுத்தவங்களுக்கு, எங்க சார் வேலை கொடுக்கிறாங்க,'' என்றான்.
''சரி நண்பா... உங்க பேரை சொல்லவே இல்லையே?''
''நீங்க கேட்கவே இல்லையே சார்... என் பேரு சிவரூபன். உங்க பேரு?'' மெலிதாக சிரித்தபடி கேட்டான்.
''கபிலன்... சரி, நேர்முகத் தேர்வுன்னு சொன்னீங்களே... எந்த நிறுவனத்துக்கு போறீங்க, சிவரூபன்?''
''ஹரிபிரசாத் ஆட்டோமொபைல்.''
''பெரிய நிறுவனம் தான்... என்றைக்கு போறீங்க?''
''அடுத்த சனிக்கிழமை சார்.''
''எனக்கும், அதே நிறுவனத்தில் அன்று தான் நேர்முகத் தேர்வு,'' என்றான், கபிலன்.
''சார், உங்க மதிப்பெண் சதவிகிதம்?'' என்று இழுத்தான், சிவரூபன்.
''தொண்ணுாற்றி ஏழு.''
''உங்களுக்கு கிடைக்கும் சார்... வாழ்த்துக்கள்.''
''சரி, நேர்முகத் தேர்வில் சந்திப்போம்,'' என்று கூறி, ஜீப்பில் ஏறி பறந்தான், கபிலன்.
டீ கடையில் வைத்து விட்டு வந்த மண்வெட்டியை எடுத்துப் போக நடந்தான், சிவரூபன்.
அன்று சனிக்கிழமை -
பேருந்து மூலம், காலை, 9:00 மணிக்குள் சென்னைக்கு வந்து விட்டான், சிவரூபன். தலைமுடியை கையால் கோதியபடி, நேர்முகத் தேர்வு நடக்கும் அலுவலகத்தில், வரிசையில் வந்தமர்ந்த போது, மணி, 9:30. அவன் கண்கள், கபிலனை தேடியது. நேரம் ஆக ஆக, கபிலனை நினைத்து சிவரூபனுக்கு பாவமாக இருந்தது.
'ச்சே... அவர் போன் நம்பரை வாங்க மறந்து விட்டோமே...' என்று, உள்ளுக்குள் வேதனைப்பட்டான், சிவரூபன்.
நேர்முக தேர்விற்கு அழைத்தவர்கள் பட்டியல், அலுவலக அறை முன் ஒட்டப்பட்டிருந்தது. அதில், கபிலன் பெயர் இடம்பெறவில்லை.
மணி, 10:00 ஆனதும், நேர்முக தேர்வுக்கு வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்தனர். தனக்கு முன் எட்டு பேர் காத்திருந்தனர். ஒன்பதாவது நபராக வரிசையில் காத்திருந்தான், சிவரூபன்.
ஒவ்வொருவரும் உள்ளே சென்று வர, 10 நிமிடங்கள் ஆனது. ஒரு சிலர், சென்ற வேகத்தில் தொங்கலான முகத்துடன் திரும்பினர். எட்டாவது நபர் அழைக்கப்பட்டதும், அடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டான்.
தனக்கு முன் உள்ளே சென்றவர் வெளியே வந்ததும், தன்னை அழைப்பர் என்று, அலுவலக நுழைவு வாயிலருகே காத்திருந்தான், சிவரூபன்.
வெளியே வந்த அலுவலக உதவியாளர், சிவரூபனுக்கு அடுத்திருந்த நபரை அழைத்தார்.
''சார்... நான் தான் அடுத்து,'' என்று, சிவரூபன் மெல்ல கூற, அந்த உதவியாளர், காதில் கேட்காதது போல், கதவை மூடி உள்ளே சென்று விட்டார்.
அதற்கு பின்னும், தனக்கு அடுத்துள்ளவர்களே அழைக்கப்பட்டனர். சிவரூபனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'சரி, கிடைக்காத வேலைக்கு காத்திருக்கிறோம்...' என்று மனதுள் கூறியபடியே, இருக்கையில் அமர்ந்து, எடுத்து வந்திருந்த சான்றிதழ்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
''நீங்க சிவரூபன்தானே?'' என்றார், அலுவலக உதவியாளர்.
அவசரமாக எழுந்து, ''ஆமாங்க,'' என்றான், சிவரூபன்.
''முதல் மாடியிலே, எம்.டி., அறை இருக்கு. அங்கே தான் உங்களுக்கு நேர்முக தேர்வு. நீங்க அங்க போங்க,'' என்றார்.
வேகமாக படி ஏறி, எம்.டி., அறை வாயிலில் நின்ற உதவியாளரிடம், விஷயத்தை கூறினான், சிவரூபன். அவர் உள்ளே சென்று வேகமாக திரும்பி வந்து, ''போங்க சார்,'' என்று, வாயில் கதவை திறந்து விட்டார்.
அலுவலக அறை மிகவும் விசாலமாக இருந்தது. பெரிய மேஜையில், சில கோப்புகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
எம்.டி., இருக்கையில், இருந்தவருக்கு,
58 வயது இருக்கும். கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல்வாகுடன், நெற்றியில் சின்னதாய் சந்தன பொட்டுடன் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் பக்கத்தில் ஒருவர் நின்று, ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.
முன்பே தெரிந்தவர் போல, ''வாங்க சிவரூபன்... உட்காருங்க,'' என்றார், எம்.டி.,
''வணக்கம் சார்,'' என்று கூறி உட்கார்ந்த சிவரூபனிடம், ''பைல் கொடுங்க...'' என்றார்.
பைலை புரட்டியபடியே, ''பெயர் சிவரூபன், அப்பா பெயர் ஆறுமுகம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமம். பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,'' என்றவர், ''தம்பி... நீங்க, 'பிராக்டிகலில்' நல்ல மதிப்பெண் எடுத்திருக்கீங்க... ஆனால், 'தியரி'யில ரொம்ப குறைச்சலா இருக்கே ஏன்?'' என்றார்.
''எனக்கு மனப்பாடம் பண்ண வராது... சொந்தமா எழுதுனா மதிப்பெண் குறைவாதான் போடுறாங்க, சார்,'' என்றான்.
''அதெப்படி தம்பி, சரியாக எழுதுனா, சரியான மதிப்பெண் போடுவாங்கதானே.''
''இல்லைங்க சார்... தேர்வு தாளை திருத்துறவங்களுக்கு, 'ஆன்சர் கி' கொடுத்துடுவாங்க, புத்தகத்துல என்ன இருக்கோ, அதுல இருக்கறதுபோல இருந்தா, மதிப்பெண் போடுவாங்க. என்னை போல புரிந்து, சொந்தமா எழுதுனா சராசரியா தான் மதிப்பெண் போடுவாங்க.''
''ஆக, நீங்க குறைச்சலா மதிப்பெண் எடுத்ததற்கு, திருத்துறவங்க சரியில்லைன்னு சொல்றீங்க?''
''நான் அப்படி சொல்லல சார்... மதிப்பெண்ணுக்கும், திறமைக்கும் தொடர்பு இல்லைன்னு சொல்றேன்.''
''சரி, தம்பி... இதுவரை, எங்க நிறுவனத்திலே, 80 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண் எடுத்தவங்களை நாங்க பணியமர்த்தியதில்லை. ஆனால், நீங்க முக்கிய புள்ளியின் சிபாரிசில் வந்திருக்கீங்க... அதான் யோசிக்கிறேன்,'' என்று எம்.டி., சொன்னதும், சிவரூபனுக்கு ஒன்றும் புரியவில்லை.
''சார், நான் யாருடைய சிபாரிசிலும் வரவில்லை. நீங்க தவறா சொல்றீங்க,'' என்றான், சிவரூபன்.
அவனை புன்னகையுடன் பார்த்தவர், ''ஒரு நிமிடம்...'' என்று சொல்லி, தன் கைப்பேசியில் யாரையோ அழைத்தார்.
''நீ சொன்ன ஆள், 54 சதவீதம் தான் மதிப்பெண் எடுத்திருக்கிறார். அவர், மாத்தி யோசிக்கிறவர் என்று சொன்னதால், நீ சொன்னபடி, நானும் மாத்தி யோசித்து, அவருக்கு, 'அப்பாயின்மென்ட்' கொடுக்க சொல்றேன்,'' என்று கைப்பேசி அழைப்பை துண்டித்தார்.
''சார்... அது நான் இல்ல... எனக்கு யாரும் சிபாரிசு செய்திருக்க முடியாதுங்க... அப்படி பண்ணியிருந்தா, அது யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா,'' என்று கேட்டான்.
''இன்னும் கொஞ்ச நேரத்தில், அது யாருன்னு உங்களுக்கு தெரிந்து விடும்...'' என்று கூறிய, எம்.டி., அருகில் இருந்தவரிடம், ''நீங்க, இவரை ஜி.எம்., அறைக்கு அழைத்துச் சென்று, என்ன வேலைன்னு விளக்கமா சொல்லி, 'ஆர்டர்' கொடுக்க சொல்லுங்க,'' என்றார்.
''சரிங்க சார்...'' என்று சொல்லி, சிவரூபனை, ஜி.எம்., அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஜி.எம்., இருக்கையில் புன்னகையுடன் அமர்ந்திருந்த நபரை பார்த்தவுடன், சிவரூபனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆமாம் அங்கே அமர்ந்திருந்தவர், வேறு யாருமல்ல, கபிலன் தான்.
வாயடைத்து நின்ற சிவரூபனை பார்த்து, ''என்ன அப்படி பார்க்கறீங்க... நான் தான் உங்களுக்கு சிபாரிசு பண்ணினேன். உட்காருங்க, நானும் இன்று தான், ஜி.எம்., பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டேன். இந்த நிறுவனம் எங்களுடையது தான்.
''எம்.டி., என் அப்பா... நீங்க அன்று, 'டீசல் பைப் கட்' ஆனதற்கு, 'காண்டம்' கொண்டு சரி பண்ணீங்க. 'காண்டத்தை' அதற்கும் பயன்படுத்தலாம் என்று மாத்தி யோசித்த உங்க திறமையை கண்டு வியந்து போனேன். நம் நிறுவனம் முன்னேற்றம் அடைய, உங்களைப்போல மாத்தி யோசிக்கிற திறமைசாலிகள் தான் எங்களுக்கு தேவை...
''அதனால் தான் அப்பாவிடம், 'புத்தக புழுவா இருந்து, 90 - 95 மதிப்பெண் எடுப்பவர்களை பணிக்கு தேர்வு செய்வதை விட, சராசரி மதிப்பெண் என்றாலும், அவர்களுக்கு திறமையின் அடிப்படையில் வேலை தரலாமே' என்று, மாத்தி யோசிக்க சொன்னேன்...
''அதான், நானும், அப்பாவும் மாத்தி யோசித்து, புரொடக் ஷன் மேனேஜர் பொறுப்பை, உங்களுக்கு தரும் முடிவை எடுத்தோம்,'' என்று கூறினான், கபிலன்.
இனம் புரியாத சந்தோஷத்தில், சிவரூபன் கண்ணோரம், லேசாக நீர் கசிந்து கொண்டிருந்தது.
முருகு நாகரத்தினம்