அனுமன், அங்கதன் முதலான வானர வீரர்கள் பலரும், சீதாதேவியைத் தேடியபடி, பல இடங்களிலும் சுற்றித் திரிந்தனர். அனைவரும், நர்மதை ஆற்றின் வடக்கே, ஒரு குளத்தங்கரையில் படுத்து, உறங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில், துமிரன் எனும் அசுரன் அங்கு வந்து, உறங்கிக் கொண்டிருந்த அனைவரையும் பார்த்தான்; கோபம் தாங்கவில்லை.
நல்ல இடமாகப் பார்த்து, அதைத் தன்வசப்படுத்தி, அப்பகுதியையே தன் உரிமையாக தீர்மானித்து கொள்வான். மேலும், அப்பகுதி வழியாக போவோர், வருவோரை எல்லாம் ஆட்டிப்படைத்து அழிப்பான்.
'அட... என் இடத்தில் வந்து படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் யார்... எழுப்பிக் கேட்டு, இவர்களை அழித்துவிட வேண்டியது தான்...' எனத் தீர்மானித்தான், அசுரன்.
அசுரனின் எண்ணமல்லவா, உடனே செயல்பாட்டிற்கு வந்து விட்டது. செயல்பாட்டிற்கு வந்தவனுக்கு முடிவு காலமும் வந்து விட்டது போலும்.
உறங்கிக் கொண்டிருந்த அங்கதனை ஓங்கி ஓர் அறை விட்டான்.
அடி வாங்கிய அங்கதன் விழித்து, எதிரே நின்ற அசுரனைப் பார்த்தான். அடி வாங்கிய வேகம், அவனை ஆட்டிப் படைத்தது; வாங்கிய அடிக்கு மாற்றாக, ஓங்கி, அசுரனை ஓர் அடி அடித்தான், அங்கதன்.
அடி தாங்காத அசுரன், மாண்டு விழுந்தான்.
ஓசை கேட்டு, மற்றவர்கள் விழித்தனர்.
'யாரிவன்...' என, அனுமன் கேட்க, 'எனக்கும் தெரியாது...' என, பதில் சொன்னான், அங்கதன்.
அப்போது, ஜாம்பவான் குறுக்கிட்டு, அசுரனைப் பற்றிய தகவல்களை சொல்லி, அமைதிப்படுத்தினார்.
அதன்பிறகு அங்கே, வானர வீரர்கள் யாரும் உறங்கவில்லை; எச்சரிக்கையுடன் இருந்தனர்.
ராமாயணத்தில் வரும், சிறு சம்பவம் இது.
விளையும் விளைவை எண்ணாமல், தன் ஆக்கிரமிப்பில் உள்ளது இது என்ற எண்ணத்தில், துமிரன் என்ற அசுரன், அங்கதனை சீண்டி, இறந்தான். அதுபோல, தன் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் இவர்கள் என்ற எண்ணத்தில், கொடிய நோய் ஒன்று, நம்மைத் தாக்க முயற்சி செய்கிறது.
அனைவரும் ஒற்றுமையாக - உறுதியாக எதிர்ப்போம்; செயல்படுவோம். இந்த நோயும், மாயும். நாம் நலம் பெறலாம்!
ஆன்மிக தகவல்கள்!
* வழிபாடு முடிந்தவுடன், அமரும்போது, கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு முதுகை காட்டியபடி அமரக் கூடாது.
பி. என். பரசுராமன்