ஜன., 23, நேதாஜி பிறந்த நாள்
குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' நுாலிலிருந்து: இத்தாலி நாட்டை சேர்ந்த, முசோலினியை, 1935ல், ரோமில், ஒருமுறை சந்தித்தார், போஸ்.
அப்போது, 'இந்தியா, விரைவில் சுதந்திரமடையும் என்று நம்புகிறீர்களா...' என்று, போசிடம் கேட்டார், முசோலினி.
'கண்டிப்பாக...' என்றார், போஸ்.
'நீங்கள், அகிம்சை வழி போராளியா அல்லது புரட்சி வழியா...'
'புரட்சி வழியை நம்புகிறவன்...' என்றார், போஸ்.
'அப்படியென்றால், உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்...' என்றார், முசோலினி.
அடுத்து இரண்டாவது முறையாக, மே 4, 1942ல், முசோலினியை சந்தித்தார், போஸ்.
அப்போது, போஸ் மீது முன்பைக் காட்டிலும் அவருக்கு அதிக நம்பிக்கை பிறந்தது. காரணம், போசிடம், இந்திய விடுதலைக்கான விரிவான திட்டம் இருந்தது. அவருடைய பேச்சு, முசோலினியை கவர்ந்தது.
'நாம் இந்தியாவைப் பற்றி வைத்திருந்த முந்தைய கருத்தை ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது...' என்று, ஹிட்லருக்கு, ஒரு செய்தி அனுப்பினார், முசோலினி.
ஹிட்லரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. 1942, மே மாத இறுதியில், போசுக்கு, ஹிட்லரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.
முன்னதாக, ஹிட்லர் எழுதிய, 'எனது போராட்டம்' புத்தகத்தை, போஸ் படித்திருக்கிறார். அவரைப் பற்றிய ஒரு மதிப்பீடு இருந்தது. அதேபோல், இந்தியாவைப் பற்றிய தவறான புரிதல் கொண்டவர், ஹிட்லர் என்பதும் போசுக்கு தெரியும்.
பலர், ஹிட்லரிடம் இப்படி பேச வேண்டும், அப்படி பேசக் கூடாது என்று, சில ஆலோசனைகள் வழங்கினர். இறுதியாக ஹிட்லரை சந்தித்தார், போஸ்.
'ஆயுத புரட்சி செய்து, இந்தியாவை விடுதலை பெறச் செய்ய வேண்டும் என்ற, உங்கள் நோக்கத்தை நான் வரவேற்கிறேன். வருங்கால இந்தியாவின் சர்வாதிகாரியை வரவேற்பதில், நான் பெருமைப்படுகிறேன்...' என்று, போசுடன் கை குலுக்கினார், ஹிட்லர்.
ஹிட்லரின் வார்த்தைகளை எதிர்பார்த்திருக்கவில்லை, போஸ்.
என்றாலும், 'வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க மட்டுமே, உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன். இந்திய தலைவரை, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுப்போம். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்பதே, எங்கள் லட்சியக் கனவு...' என்றார்.
நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ., படை வீரர்கள், இந்திய நாட்டுக்காக போராடுகின்றனர் என்றாலும், அவர்களுக்கான ஆயுதங்களை ஜப்பானே வழங்கியது.
நிபந்தனையற்ற ஆதரவு மற்றும் ஆயுத உதவி ஆகியவற்றை வழங்கியதற்கு, ஜப்பானியர்கள் பிரதிபலன் ஏதுமின்றியா செய்திருப்பர்!
சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய ஆட்சியில், ஜப்பானியர்களுக்கும் பங்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். அதற்காகத்தான், பிரிட்டிஷாருக்கு எதிராக, அத்தனை உதவிகளையும் செய்தனர்.
'தோழர்களே... மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். நாங்கள் தவறு செய்து விட்டோம், தவறாக முடிவு எடுத்து விட்டோம் என்று, உங்களில் எவர் நினைத்தாலும், அவர்கள் இப்போதே வெளியேறி விடலாம்.
'நீங்கள் மேற்கொள்ளப் போகும் முயற்சியில், ஒரு துளி சந்தேகம் கூட வரக்கூடாது. என்னுடன் வந்தால், பசி, தாகம், மரணம் தான் கிடைக்கும். உங்கள் வழியை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்...' என, ஐ.என்.ஏ., வீரர்களிடம், போருக்கு புறப்படுவதற்கு முன், இப்படித்தான் பேசினார், போஸ்.
ஆனாலும், எந்த ஒரு வீரரும் பின்வாங்கவில்லை. நாட்டுக்காக போரிடும் முடிவில் உறுதியாக நின்றனர்.
'சலோ டில்லி...' என்றார் போஸ். அவரை பின் தொடர்ந்தனர், ஐ.என்.ஏ., வீரர்கள்.
தம் படைப் பிரிவுகளுக்கு, காந்தி, நேரு, ஆசாத் போன்றவர்களின் பெயர்களை வைத்தார். அவர்கள் மீது போஸ் வைத்திருந்த மதிப்புக்கு அதுவே சாட்சி!
எல்லா ஆயுத ஆதரவுகளை தந்தாலும், ஒரு கட்டத்தில், ஜப்பான் வாக்களித்தபடி உதவவில்லை என்பது, போசை கொந்தளிக்கச் செய்தது.
'என் வீரர்கள், எதிரியின் குண்டுகளால் மாண்டதை விட, பசியாலும், மலேரியாவாலும் தான் அதிகம் இறக்கின்றனர். நீங்கள் வழங்குவதாக சொன்ன உதவிகளை ஏன் வழங்கவில்லை...' என்று கேட்டார், போஸ்.
ஜப்பான் ஜெனரலிடமிருந்து மவுனமே பதிலாக வந்தது.
'ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நாடு பிடிக்கும் ஆசையில் போர் புரியவில்லை. நாட்டின் சுதந்திரத்திற்காக போர் புரிகிறோம். இதுவரை, தாங்கள் வழங்கிய உதவிக்கு நன்றி...' என்று, ஜப்பான் ஜெனரலுடன் கை குலுக்கி, விருட்டென வெளியேறினார், போஸ்.
நடுத்தெரு நாராயணன்