எட்டு வீடுகளை வரிசையாக கொண்டது, சிவானந்தம் பிள்ளை, 'காம்பவுண்ட்!' கடைசி வீடு ரொம்ப நாட்களாக பூட்டியே கிடந்தது. அதன் எதிரில் தான் தண்ணீர் குழாய்.
சைக்கிள் மணி சத்தம் கேட்டு, பால்காரன் என நினைத்து பாத்திரத்தோடு வெளியே வந்தாள், தங்கம். பேப்பர் போடுபவன் வந்திருப்பான் என, வெற்றிலையை குதப்பியபடியே வந்தார், ராமானுஜம்.
'காம்பவுண்ட்' அருகே, ஆட்டோ நின்றது. அதிலிருந்து இறங்கியவனை கண்டதும், இருவருமே திகைத்தனர்.
அவனுக்கு, ஆஜானுபாகுவான தேகக் கட்டமைப்பு. உள்ளே போட்டிருந்த பனியன் தெரியும்படியாக மெல்லிய ஜிப்பா. பட்டையான பச்சை கலர் பெல்ட். அதில் கத்தி, பீடி, தீப்பெட்டி, பெரிய சாவிக்கொத்து இத்யாதிகள். பீடியை புகைத்துக்கொண்டே பெரிய செருப்பு, 'சரக் சரக்' என்று ஒலி எழுப்ப, ஒரு பெட்டியுடன் வந்து கொண்டிருந்தான்.
தங்களை தாண்டிச் சென்றதும், ராமானுஜத்திடம், ''அய்யரே... யாரு தெரியுதா,'' என்றாள், தங்கம்.
''ம்... ம்... கொஞ்ச நாள் முன்ன, 'காம்பவுண்ட்' முன் ரோடில் போன பெண்ணின் கழுத்து சங்கிலியை அறுத்தவன்தானே, அவன். நாமதானே பிடித்து இந்த புளிய மரத்தில் கட்டி வச்சு, தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைச்சோம்,'' என்றார்.
இவர்களை சட்டை செய்யாமல், ஒண்ணு, ரெண்டு, மூணு என, எண்ணியபடியே கடைசி வீட்டு கதவைத் திறந்தான். பொத்தாம் பொதுவாக, ''இந்த வீட்டிற்கு குடி வரேன்,'' என்றவன், உள்ளே நுழைந்தான்.
விடிய ஆரம்பிக்கவே, ஒவ்வொரு வீட்டிலும் கதவு திறக்கப்பட்டு, வாசல் தெளிக்க வந்தனர், பெண்கள்.
முன்னாள் திருடன், அங்கு குடி வந்த கதையை, ரகசிய குரலில் சொன்னாள், தங்கம்.
''இந்த பிள்ளைவாளுக்கு ஏன் இப்படி புத்தி போச்சு... திருடனை, 'காம்பவுண்டுல' குடி வச்சா, நாமெல்லாம் ஆபீஸ் போனப்புறம் வீட்டு பெண்கள் எப்படி தனியே பயமில்லாம இருக்க முடியும்,'' என்றார், கோனார்.
''எல்லாரும், பிள்ளைக்கு போன் பண்ணி, உடனே அவனை வீட்டை விட்டு போகச் சொல்லணும்,'' என்றார், ராமானுஜம்.
பெண்கள் தண்ணீர் பிடிக்க, குடத்துடன் அச்சத்தோடு எட்டாம் நம்பர் வீட்டு வாசலில் இருந்த, 'பைப்'புக்கு வந்தனர். வீடு சாத்தியிருக்கவே, அவசர அவசரமாய் தண்ணீர் பிடித்தனர். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், அப்படியே குடத்தை போட்டு தன் வீட்டுக்கு போனாள், தங்கம்.
வேப்பங் குச்சியை உடைத்து பல் தேய்த்தான். குழாயடியில் நீர் நிறைந்த குடத்தை தள்ளி வைத்து, வாய் கொப்பளித்து, டீ சாப்பிட வெளியே சென்றான், மைனர்.
குடத்தை எடுத்து, தன் வீட்டிற்கு சென்றாள், தங்கம். 11:00 மணியளவில், குழாயடியில் யாரும் இல்லாததால், குளித்து, தன் துணிகளை துவைத்து காயப் போட்டான், மைனர். அசதியில் வீட்டின் கதவை திறந்து வைத்தபடியே துாங்கி விட்டான்.
மாலை, 5:00 மணியை தாண்டியதும், ஒவ்வொருவராக வீடு திரும்பினர். திண்ணையில் அமர்ந்திருந்த ராமானுஜம், ''யாராவது பிள்ளைவாளுக்கு போன் பண்ணீங்களா,'' என்று கேட்டார்.
'போனை எடுத்தாதானே...' என்றனர், மற்றவர்கள்.
ஊரில் இல்லையோ என்று சந்தேகப்பட்டனர்.
''அவர், வர வரைக்கும் காத்திருப்பானேன். நாமளே அவனை வெளியே வரச்சொல்லி, நாக்கை புடுங்கிற மாதிரி கேட்போம்,'' என்று ஒருவர் சொல்ல, அனைவரும், 'சரி...' என்றனர்.
''யோவ், வெளியே வாய்யா...'' என்று ராமானுஜம் கத்தினார்.
கொட்டாவி விட்டபடியே வெளியே வந்தான், மைனர்.
'கொஞ்ச நாள் முன்னாடி, பொம்பளையோட செயினை அறுத்துட்டு, மாட்டினவன் தானேடா நீ... குடித்தனம் இருக்கிற வீடுகளுக்கு நடுவே, திருடன் எப்படிடா குடித்தனம் வருவே... நாங்க இல்லாதப்ப, பொண்ணுங்களை கத்தியை காட்டி மிரட்ட மாட்டேங்கிறது என்ன நிச்சயம்?' என்று, சரமாரியாக கேட்டனர்.
''நான், இப்போ திருந்திட்டேங்க. நல்லபடியா உழைச்சு வாழணும்ன்னு தான் இருக்கேன்,'' என்றான்.
அந்த பக்கமாக காரில் வந்த பிள்ளைவாள், தன், 'காம்பவுண்டில்' கூட்டமாக இருப்பதை கண்டு, உள்ளே வந்தார். அவரை பார்த்ததும், எல்லாரும் உரத்த குரலில், 'பிள்ளைவாள், இது நியாயமா... இப்படி ஒரு திருடனை, நல்ல குடும்பங்க இருக்கிற, 'காம்பவுண்டில்' குடி வைக்கலாமா... உங்களுக்கு பணந்தான் பிரதானமா?' என்றனர்.
எல்லாருடைய பேச்சையும் கேட்ட பிள்ளைவாள், ''எனக்கு, இவனை பத்தி நல்லாத் தெரியும். திருடன்தான், ஆறு மாசம் தண்டனை முடிஞ்சு திரும்பி இருக்கான். அங்க நல்லொழுக்க போதனை வகுப்புகளுக்கு போய், மனம் மாறியிருக்கான். அவனிருந்த ஜெயில் வார்டன், என் மச்சான்.
''இவனை பத்தி எல்லாம் சொல்லி,
திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் தருவோமேன்னு, அவன் குடுத்த, 'கியாரண்டி'யில தான், இங்க குடி வச்சிருக்கேன். ஏதாவது தாறுமாறா நடந்தா, மச்சானே அவனை கையோடு இழுத்துட்டு போயிடுவான். அதனால, எல்லாரும் பயப்படாம, அவங்கவங்க வேலையை பாருங்க,'' என்றார்.
'எப்டி... எப்டி... நல்ல குடும்பங்க இருக்கிற இடம்... ம்...' என, ஆளாளுக்கு கூறினர்.
''ஏன் நீங்க தப்பே செய்யாதவங்களா... தங்கம்மா, உங்க பொண்ணு வேற ஜாதிக்காரனை இழுத்துட்டு, நகைகளோடு ஓடிப் போனப்ப, மண்ணை வாரி துாத்துனீங்க... பேரக் குழந்தை பிறந்த பிறகு மன்னிச்சு ஏத்துக்கலையா...
''அய்யா கோனாரே, பால்ல தண்ணி அதிகமா கலந்து, போலீஸ் வாசல்ல நின்னது மறந்து போச்சா...
''ராமானுஜம் சார், உங்க பையன், தில்லுமுல்லு பண்ணி ஆபீசில், 'சஸ்பென்ஷன்' ஆகி நின்னப்ப, 'வாடகை குடுக்க முடியல பிள்ளைவாள், காலி பண்ணிடச் சொல்லாதீங்க'ன்னு, சொன்னீங்களே... நான் அப்படி மனிதாபிமானம் இல்லாதவன் இல்லீங்கன்னு சொன்னேனே... மறந்து போச்சா?
''இன்னும் நிறைய பேசுவேன்; இதோடு நிறுத்திப்போம். திருடனுக்கும் திருந்தி வாழ வழி பண்ணுவோம்,'' என்று சொல்லி, வெளியேறினார்.
எட்டாம் நம்பர் வீட்டிலேயே இருந்தான், மைனர். நாயர் கடை டீயும், 'பன்'னுமே, அவனது மூன்று வேளை ஆகாரம். யாரிடமும் பேச மாட்டான். மரங்களிலிருந்து விழும் இலை, தழைகளை பெருக்கி சுத்தம் செய்து, பளிச்சென்று, 'காம்பவுண்டை' வைத்திருந்தான்.
அவன் வீட்டுக்கு அந்தப்புறம் முள் செடிகள் வளர்ந்து, புதராய் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டி சமதளமாய் ஆக்கியதால், பிள்ளைகள் மாலை வேளையில் விளையாட ஆரம்பித்தனர். பெரியவர்களும், அவனை, கனிவாய் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒருநாள் மதியவேளை -
ராமானுஜத்தின் வயதான அக்கா, திடீரென மயக்கமாகி விழுந்து, கதவில் மோதி ரத்தம் கொட்டியது. ராமானுஜத்தால் அவளை துாக்க முடியவில்லை. பயத்தில் அவர் கத்தினார்.
அந்த பக்கம் வந்த மைனர், அவளை துாக்கி, ரத்தத்தை துடைத்து, முதல் உதவி செய்து, ஆஸ்பத்திரிக்கு போகவும் உதவினான்.
மைனரை தேடி வந்தார், ஜெயில் வார்டன்.
அனைத்து குடித்தனக்காரர்களும் பதற்றத்துடன் வெளியே வந்து, 'மைனரால் ஒரு தொல்லையுமில்லை. அவனுக்கு எந்த தண்டனையும் தராதீங்க...' என்றனர்.
''அவனை, 'அரெஸ்ட்' பண்ண நான் வரலை... அவன் திருந்திட்டான்னு எனக்கு தெரியும். அவன் குடும்பத்தாரிடம் பேசினேன். அவன் மனைவி, மைனரை, தன் குடும்பத்தில் ஏத்துக்கிறேன்னுட்டா. அதை சொல்லி, அவனை ஊருக்கு அனுப்ப வந்தேன்,'' என்றார்.
மைனரை ஊருக்கு அனுப்பி வைக்க முதலில் தயங்கிய, 'காம்பவுண்ட்' குடித்தனக்காரர்கள், அவன், குடும்பத்தோடு சேரணும் என்ற எண்ணத்தால், பிரியாவிடை கொடுத்தனர்.
மு. சிவகாமசுந்தரி