முன்கதை சுருக்கம்:
புவனா நேசிக்கும் பையனுடன் திருமணம் செய்து வைக்க போவதாக, குருமூர்த்தி சிவாச்சாரியாரிடம் கூறினான், ராஜாராமன். பையன் யார் என கேட்க, கார்த்திகேயன் பெயரை சொன்னதும், புவனாவுடன் கோவிலுக்கு வந்த இளைஞன் கண் முன் வந்து நின்றான் -
அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தார், குருமூர்த்தி சிவாச்சாரியார். உடல் ரத்தம் முழுவதும், தலைக்கு ஏறின மாதிரி இருந்தது.
புவனாவின் நம்பிக்கை துரோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அன்று, கோவிலில் பார்த்தபோதே அவருக்கு மனசு இடறத்தான் செய்தது. அதுவும், கூட வந்த அந்தப் பெண், அர்ச்சனை தட்டை கொடுத்து, புவனேஸ்வரி - கார்த்திகேயன் என, பெயர் சொன்னபோது, பகீரென்றது.
ஆனால், புவனேஸ்வரி என்ற பெயர், நம் பெண் ஒருத்திக்குதானா இருக்கும். அந்த பெயரில் எத்தனை பேர் இருப்பர் என்று, தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாரே தவிர, தொண்டையில் சிக்கிய முள்ளாக வலி ஏற்படுத்த தான் செய்தது.
வீடு வரும் வரை கஷ்டப்பட்டுக் கொண்டே தான் வந்தார். ஆனால், பெண் பார்க்க வருவதற்கு சம்மதித்த பின், புவனா நடந்து கொண்ட விதத்தில், அவரது சந்தேகம் முற்றிலும் மறைந்தது.
'தங்கமான பெண். இத்தனை நல்ல பெண்ணை போய் அனாவசியமாக சந்தேகப்பட்டு விட்டோமே...' என்று உள்ளூர வருத்தப்பட்டார்; தன்னைத் தானே நொந்து கொள்ளவும் செய்தார்; ரகசியமாக தனக்குள்ளேயே மன்னிப்பும் கேட்டார்.
ஆனால், இன்று எல்லாம் நிஜமாகி, அவர் தலையில் இடி விழுந்தது. கரகரவென்று கண்ணீர் விட்டார்.
அதைக் கண்ட ராஜாராமன், அவர் கையை பற்றினான். ஓடி வந்து அருகில் நின்றாள், பர்வதம்.
குரல் தழுதழுக்க, ''எனக்கு, உங்களால ஒரு உபகாரம் பண்ண முடியுமா?'' என்றார்.
''என்ன செய்யணும்ன்னு, சொல்லுங்கோ.''
''தயவுசெய்து, இனிமே, அவளை என் மூஞ்சில முழிக்க சொல்லாதீங்கோ. இந்த ஆத்துக்கு வரச்சொல்லாதீங்கோ. இனி, என் மனசுலயோ, இந்த வீட்லயோ அவளுக்கு இடமில்ல...''
''என்ன சொல்றீங்க... இப்படி சொன்னா எப்படி?''
''வேற எப்படி சொல்ல முடியும். நீங்களே சொல்லுங்கோ, முகத்துக்கு முன்னால சிரிச்சு, முதுகுல குத்திட்டா அவ...''
பேசாமல் இருந்தான், ராஜாராமன்.
முகத்தை மூடி அழுதாள், பர்வதம். மேலும், அவரே பேச்சை தொடர்ந்தார்...
''இதோ மூஞ்சிய மூடிண்டு அழறாளே... இவ, மகா அப்பாவி. யார் என்ன சொன்னாலும் நம்புவா. கோவில் தவிர, வேற எங்கேயும் போகாதவள். இவளையும் ஏமாற்றி, என்னையும் ஏமாத்தியிருக்கா.''
அவர் முகத்தையே மவுனமாய் பார்த்துக் கொண்டிருந்தான், ராஜாராமன்.
''அவ, நேரிடையா என்கிட்ட உண்மையை சொல்லியிருந்தான்னா, அந்த நேர்மையை நான் மதிச்சிருப்பேன். நீ போய் கல்யாணம் பண்ணிக்கோன்னு, மனசார வாழ்த்தி அனுப்பியிருப்பேன்.
''ஆனா, அவ அப்படி செய்யல. என் பொண்ணா நடந்துக்கல. பெண் பார்க்க வரச்சொல்லி நடிச்சு, எங்களை ஏமாத்திட்டா... அதை என்னால தாங்க முடியல.''
''இல்ல, சொல்ல பயந்திருப்பா.''
''என்ன பயம்... இத்தனை செய்ய தைரியம் இருந்தவளுக்கு, இதுக்கா பயம்... போகட்டும், என் மத்த பொண்ணுங்களுக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணணும். அவாளையாவது ஒழுங்கா வளர்க்கணும்.
''அதனால, தயவுசெய்து அவ இந்த வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைக்க வேண்டாம். அவனையே கல்யாணம் பண்ணிண்டு நன்னா வாழச் சொல்லுங்கோ.''
அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசாதிருந்தான், ராஜாராமன்.
''நேரமாயிடுத்து, தலைக்கு தண்ணி விட்டுண்டு கோவிலுக்கு கிளம்பறேன். சாயரட்சை தீபாராதனை இருக்கு.''
''அப்ப நான் கிளம்பட்டுமா?'' என்று எழுந்தான், ராஜாராமன்.
அவரும் எழுந்து, இரு கை கூப்பி தழுதழுக்க, ''என்னை மன்னிச்சுடுங்கோ, எங்களால உங்களுக்கு ரொம்ப சிரமம்...''
மனம் கலங்க வெளியேறினான், ராஜாராமன்.
''இத்னுாண்டு சென்னை பட்டிணம். அதுல அந்த பொண்ணு புவனேஸ்வரியை உங்களால தேடி கண்டுபிடிக்க முடியல... என்ன ஆளுங்கடா நீங்க?''
பொன்னப்பருக்கு பெருங்குரல். அவரால் எப்போதுமே மெலிதாக பேச முடியாது. ரகசியமாக சொல்கிற ஜாதியெல்லாம் இல்லை.
கழனிக் காட்டில் நின்று ஒரு அதட்டல் போட்டால், வீடு வரை கேட்கும். அதுபோல், அன்பை கூட அவரால் உறுமலாகத் தான் காட்ட தெரியும். ஆகவே, அப்போதும் அவர் குரல் பெரிதாகத் தான் ஒலித்தது.
யதேச்சையாக கீழண்டை வீட்டுப் பக்கம் வந்த ஜோதியின் காதுகளில், அவர் சொன்னது விழுந்தது. 'மாமா, இன்னும் புவனாவை தேடுகிற வேட்டையை கைவிடவில்லை...' என, புரிந்து கொண்டாள். புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம் என்பதை உணர்ந்து, மறைந்து நின்று கேட்கலானாள்.
''இல்லீங்கய்யா... நாங்களும் ஒரு கோவில் விடாம போய் விசாரிச்சுட்டோம். எல்லா அய்யிருங்க வீட்லயும் புவனேஸ்வரின்னு பொண்ணு இருக்குது. எந்த கோவிலு, எந்த அய்யிரு, எந்த புவனேஸ்வரின்னு தெரியாம எப்படி ஐயா துாக்குறது?''
''ஆமா, வாய் கிழியுது... இது ஒரு கஷ்டம் பாரு... நம்ம தம்பி தான் ஏதோ ஆபீசு வச்சிருக்குதில்ல, அதும் வாசல்ல நின்னு கண்காணிச்சீங்கன்னா தானா தெரியுது.
''எந்த பொண்ணு அவனை தேடி அடிக்கடி வருதோ, பார்க்க நெறமா, லட்சணமா இருக்குதோ, தம்பி கூட ஒண்ணா வெளிய போகுதோ அந்த பொண்ணு தான்... இதக் கூட நான் சொல்லித் தரணுமா?''
''ஆமால்ல... இது, தெரியாம போயிடுச்சுங்கய்யா... இன்னும் ஒரே வாரத்துல காரியத்த முடிச்சுடறோம்.''
''சொல்லாதீங்க, செய்ங்க... முடிச்சுட்டு எம் மொகத்துல முழிங்க...''
அவர்கள் வெளியே வருவதை கண்ட ஜோதி, குதிருக்கு பின்னால் மறைந்துக் கொண்டாள். துண்டை உதறி தோள் மீது போட்டபடி, பொன்னப்பர் வருவதை பார்த்தாள். அவர்
தலை மறைகிற வரை காத்திருந்து, பின்னர் தன் அறைக்கு போய் கதவை சாத்தி மொபைலை எடுத்தாள்.
''மாமா.''
''சொல்லு, ஜோதி... எப்படி இருக்க?''
''எனக்கென்ன மாமா, நல்லாயிருக்கேன். ஒரு முக்கியமான விஷயம் மாமா.''
''சொல்லு ஜோதி?''
''அக்காவை கண்டுபிடிச்சு, துாக்கச் சொல்லி அடியாட்களை அனுப்பியிருக்காக, பெரிய மாமா.''
''இந்த கண்ணாம் பூச்சியாட்டம் அவரு எப்பவும் ஆடுறதுதானே?''
''இல்ல மாமா... உங்க ஆபீஸ் வாசல்ல ஆள் போடச் சொல்லியிருக்காரு. எந்த பொண்ணு, உங்களை தேடி அடிக்கடி வருதோ, உங்க கூட வெளியே போவுதோ அதைத் துாக்க சொல்லியிருக்காரு.''
''கவலைப் படாதே ஜோதி... நீ வந்து அன்னிக்கு சொல்லிட்டு போனதிலிருந்து, புவனா, ஆபீசுக்கே வர்றதே இல்ல... வெளியதான் சந்திக்கிறோம்.''
''அது கூட வாணாம் மாமா... எப்படியும் கண்டு பிடிச்சுடுவாரு... கொஞ்ச நாளைக்கு மெட்ராஸ விட்டு, ரெண்டு பேரும் வெளிய எங்கியாச்சும் போய் இருங்க.''
''எப்படி ஜோதி போவுறது... புவனா ஆபீஸ், என் ஆபீஸ் ரெண்டும் சென்னையில தானே இருக்கு.''
''உசுரா, ஆபீசான்னா... உசுருதா மாமா முக்கியம்.''
''அதில்ல... இத்தன பெரிய ஊர்ல அப்படியெல்லாம் செய்ய முடியாது, ஜோதி.''
''ஊர் எத்தினி பெரிசா இருந்தா என்ன... மாமாவோட வன்மம், அதைவிட பெரிசால்ல இருக்குது.''
''அப்பா, அப்படி செய்துடுவாருன்னா நினைக்கிற?''
''நா நெனைக்கிறதில்ல. செய்ய, ஆளுங்களை அனுப்பி வச்சிருக்காரு... உங்கப்பாவை பத்தி ஒங்கள விட எனக்குத்தா நல்லா தெரியும்.''
''இப்ப என்ன செய்யணும்ன்ற?''
''முதல்ல அந்த எடத்த விட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க...''
''சரி... எல்லா ஏற்பாடும் செய்துட்டு, திரும்ப போன் பண்றேன்.''
''வேற நம்பர்லேர்ந்து பண்ணுங்க.''
போனை, 'ஆப்' செய்து கட்டிலின் மீது வைத்து விட்டு, கதவு வரை போனாள். ஏதோ நினைவு வந்தவளாக திரும்பி வந்தாள்.
மொபைலை எடுத்து, ஏதோ செய்து வைத்து கதவை திறந்தவள், அறை வாசலில் பொன்னப்பர் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.
''என்ன மாமா?''
''பொழுது போவல... ஏதாச்சும் பொஸ்தகம் இருக்கான்னு பார்க்க வந்தேன்.''
''என் அறையில என்ன பொஸ்தகம் மாமா இருக்கப் போவுது... சின்ன மாமா அறையிலயாச்சும் இருக்கும்.''
''நீ போயி, ஏதாச்சும் ஒரு பொஸ்தகத்த எடுத்துக்கிட்டு வா... நா இங்கேயே இருக்கேன்.''
''சரி மாமா...'' என்றவள், மெல்ல நகர்ந்து ஜன்னல் வழியாக கவனித்தாள்.
அவர் உள்ளே போய், அவளது மொபைலை எடுத்து, எண்களை ஆராய்வதை பார்த்தாள்.
'மாமா... நான் மட்டும் யாரு... ஒங்க ரத்தம் தானே... நீங்க கோலத்துல நுழைஞ்சா, நா தடுக்குல நுழைய மாட்டேனா?'
கார்த்திகேயனுடன் பேசியதை அழித்து, போனை வைத்த தன் சாமர்த்தியத்தை நினைத்து, புன்னகைத்தவாறே நகர்ந்தாள், ஜோதி.
— தொடரும்
இந்துமதி