திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஊட்டச்சத்து உதவி பேராசிரியை ரேவதி விவசாயியாக மாறி மண்புழு உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார். 3வது பேட்ஜில் மண்புழு உர உற்பத்தி செய்து வரும் தனது அனுபவங்களை விளக்குகிறார் ரேவதி. எம்.எஸ்சி., எம்.பில் ஊட்டச்சத்து முடித்தபின் மதுரையில் தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக சேர்ந்தேன். திருமணம், குழந்தைகள் என்றான பின் கணவருக்கு திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் ஏற்பட்டதால் கல்லுாரி வேலையை விட்டேன்.
மதுரையில் சி.இ.டி. மையம் நடத்திய 45 நாட்கள் விவசாய பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அங்கே கறவை மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரத் தயாரிப்பு உட்பட பல்வேறு பயிற்சி அளித்தனர். நிலக்கோட்டையில் கொஞ்சம் நிலமும் ஒரு மாடும் உள்ளதால் மண்புழு உரத் தயாரிப்பை தேர்ந்தெடுத்தேன். 23 சென்டில் முல்லைப் பூ செடிகளின் நடுவே 5 படுக்கைகளில் மாட்டின் சாணத்தை கொண்டு மண்புழு படுக்கை தயாரித்தேன். சாணம் மட்டுமின்றி களைகள், சோளத் தட்டை, வேப்பமர இலை கழிவுகள் அனைத்தையும் உலரவைத்து உரப் படுக்கைக்கு சேர்த்தேன்.
தரையில் படுக்கை அமைத்தபோது தண்ணீர் கூடுதலாக தேவைப் பட்டது. இதனால் 8 அடி நீளம், 4 அடி அகலத்திலும் 12 அடி நீளம் நீளம், 4 அடி அகலத்தில் பாலித்தீன் பைகள் வாங்கி அதில் படுக்கை அமைத்தேன்.
இதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றினால் போதும். முதல் முறை ஆயிரம் கிலோ சாணத்தில் கழிவு போக 700 கிலோ உரம் கிடைத்தது. 2வது முறை 3 டன் வரை உரம் எடுத்தேன். விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு மூலம் விற்பனை செய்கிறேன். தற்போது 500 கிலோ இருப்பில் உள்ளது.
விடுமுறை நாட்களில் கணவர் நாகராஜூடன் சேர்ந்து உரப்படுக்கைகள் தயாரிப்பேன். மற்ற நாட்களில் அவ்வப்போது தண்ணீர் தெளிப்பதோடு சரி. அறுவடையின் போது மட்டும் வேலைக்கு ஆட்கள் வருவர். இப்போது தான் லாபம் கிடைக்கிறது. இன்னும் கூடுதலாக மண்புழு உரம் தயாரிக்க வெளியில் இருந்தும் சாணம் வாங்க ஆரம்பித்துள்ளேன். சுயமாக தொழில் செய்வதால் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடிகிறது, என்றார்.
இவரிடம் பேச : 90422 12077.
- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை