அமெரிக்காவில், 'பிளாக் பெர்ரி' மொபைல் அறிமுகம் ஆன சமயத்தில், அதிக நேரம் கழுத்தை குனிந்தே மொபைல் பயன்படுத்தியதால், இளம் வயதினருக்கு ஏற்பட்ட, 'டெக்ஸ்ட் நெக் சிண்ட்ரோம்' இங்கு தற்போது அதிகரித்து விட்டது. 18 - 40 வயதிற்குட்பட்ட, 70 சதவீதம் பேருக்கு, இந்தப் பிரச்னை உள்ளது. ஆண்களை காட்டிலும், பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே கழுத்து, முதுகு வலி இருப்பவர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' உபயோகிக்க துவங்கிய ஓராண்டிற்குள், இந்தப் பிரச்னை வந்து விடும்; மற்றவர்களுக்கு சற்று தாமதமாக வரும்.
காரணம்
கம்ப்யூட்டரில் வேலை செய்தாலும், மொபைல் போன் பயன்படுத்தினாலும், தலை நேராக இருந்தால் பிரச்னை இல்லை. நீண்ட நேரம் குனிந்தபடியே, ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால், இந்தப் பிரச்னை வந்து விடும். தொடர்ந்து, கழுத்துப் பகுதிக்கு அழுத்தம் கொடுப்பதால், இதுபோல ஆகிறது.
இதன் ஆரம்ப அறிகுறிகள், தாடை எலும்புகள் வலிக்கும்; அடிக்கடி தலைவலி வரும்; தோள்பட்டை, கைகளில் வலி வரும். முதுகு வலியும் வரலாம். காரணம் தெரியாமல், அடிக்கடி இதுபோன்ற வலிகள் வந்தால், டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
தாங்க முடியாத வலியுடன் வருபவர்களுக்கு, வலி நிவாரணி கொடுத்து, வலி முழுதும் குறைந்தபின், தொடர்ந்து குனிந்ததால் ஏற்பட்ட, கழுத்துப் பகுதியில் உள்ள இறுகிய தசைகளை, 'ரிலாக்ஸ்' செய்ய, சில பயிற்சிகளை தருவோம். இந்த பயிற்சிகளை தொடர்ந்து இரண்டு வாரங்கள் செய்ய வேண்டும்; அதன்பின், தினசரி வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம்.
'நெக் டெக்ஸ்ட் சிண்ட்ரோம்' வரும் முன்பே எளிதாக தவிர்க்க முடியும். முடிந்த வரையிலும், கழுத்து நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பல மணி நேரம், 'ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அலுவல் விஷயமாக, அதிக நேரம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை குறைந்தது, 5 நிமிடங்களாவது, கழுத்து, தலைக்கு ஓய்வு தர வேண்டியது அவசியம்.
டாக்டர் ஸ்ரீராமலிங்கம்,
மூட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், கோவை.
ssrreerraamm@gmail.com
போன்: 0422 4055100