திருமண வீட்டில், சுற்றி சுற்றி வந்தாள் காஞ்சனா. கவர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தாள். மணப்பெண் என்று பலரும் மயங்கினர். அனைத்து கண்களும் அவள் மீது நிலைத்து மீண்டன.
அவளது ஒரே மகள் கனிமொழி. தாயை மிஞ்சி அலங்காரம் செய்வாள்.
பள்ளியில், 10ம் வகுப்பு சேர்ந்திருந்தாள். புதிய பள்ளி என்பதால் தோழியரும் புதுசு. முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வகுப்புகள் நடந்தன.
முதல், மூன்று மாதங்களும், வகுப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. பருத்தியிலான எளிய சீருடை அணிந்து சென்று வந்தாள். பின், சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
அந்த வகுப்புகளுக்கு வண்ண வண்ணமாக உடை உடுத்துவாள் கனிமொழி. பார்த்துப் பார்த்து ஒப்பனை செய்வாள்.
எந்த வண்ணத்தில் உடையிருந்தாலும், பொருத்தமாக காலணி, வளையல், கழுத்தணி என ஆடம்பரமாக அணிந்து கொள்வாள். எல்லாரும் திரும்பிப் பார்ப்பர்.
சில நாட்களாக கனிமொழியின் அலங்காரம் குறைந்திருந்தது.
வண்ண மய ஆடைகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பள்ளிச் சீருடைகள் மட்டுமே அணிந்து சிறப்பு வகுப்புகளுக்கும் சென்று வந்தாள்.
மகளின் மாற்றத்தால் குழம்பினாள் காஞ்சனா.
அதற்கான காரணம் அறிய தவித்தாள். நேரடியாகக் கேட்டு விட துணிந்தாள்.
சனிக்கிழமை சிறப்பு வகுப்பிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் கனிமொழி.
''இன்னும் இரண்டு இட்லி வெச்சுக்கோம்மா...''
மகள் தலையை வருடியபடி கனிவு காட்டினாள் காஞ்சனா.
''போதும்மா... இதுவே அதிகம்; இன்னும் சாப்பிட்டால் நடக்க முடியாது...''
புன்னகையுடன் கையை அலம்பினாள் கனிமொழி.
''இன்னிக்கு சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வர்றியாம்மா... ரெண்டு பேரும் கடைக்கு போயி, புது துணியும், அதுக்கு பொருத்தமா வேண்டியதையும் வாங்கி வரலாம்...''
''இப்போ எதுக்கும்மா புது துணி... ஏற்கனவே இருக்குறத போட்டாலே... மூணு வருஷத்துக்கு வரும்; வேண்டாம்மா...''
வியப்புடன் பார்த்தாள் காஞ்சனா. அந்த பதில் வருத்தம் தந்தது.
''ஏன்டா கண்ணா... இப்பல்லாம் நீ அழகா அலங்காரம் பண்ணிக்கிறது இல்ல... ஏதாவது பிரச்னையா...''
''ஒண்ணுமே இல்லம்மா... எளிய சீருடையே போதுன்னு நினைக்குறேன்...''
''என்னம்மா... திடீர் மாற்றம்...''
''என்னோட தோழி புவனாவை உனக்கு தெரியுமில்லையா...''
''ஆமா... கொஞ்சம் மங்கலான நிறமா இருப்பாளே...''
''ஆமா அவதான்... நான் புது துணி அணியும் போதெல்லாம் மலைப்புடன் பார்த்துட்டே இருப்பா. அன்னைக்கு பூரா, அவ முகத்துல சிரிப்ப காண முடியாது; வாட்டமாவே இருக்கும்...''
''அவ்வளவு பொறாமையா படுறா...''
''இல்லம்மா... ஒருநாள் அவ வீட்டுக்கு போயிருந்தேன்; அவளது கிழிசலான சீருடையை தைச்சுட்டு இருந்தாங்க அவ அம்மா... அததான் அவ அடிக்கடி போடுவா...''
''குடும்பத்தில கஷ்டமா...''
''அவளுக்கு அப்பா இல்லை. அம்மா தான் எல்லாமே; கூலி வேலை செஞ்சு தான் படிக்க வைக்கிறாங்க...''
''பாவம்... அவளுக்கும் புதுத்துணி வாங்கி கொடுக்கலாமே...''
''நானும் அதைத் தான் சொன்னேன். ஏத்துக்க மறுத்துட்டா... அதனால, என் அலங்காரத்த மாத்திக்கிட்டேன்... என்னால செய்ய முடிஞ்ச உதவி இது தான்...''
மகள் கூற்றுக் கேட்டு, சிலையென நின்றாள் காஞ்சனா.
கனிமொழி தொடர்ந்தாள்.
''பள்ளிக்கு படிக்கதானே போறேன்... ஆடை அலங்காரப் போட்டிக்கு போகலியே... சிறப்பு வகுப்புகளில் அவள் இப்போ வாடுவது இல்ல... தோழியா நான் தர்ற பரிசு இது... நேரமாச்சு... கிளம்புறேன்...''
விடைபெற்றாள் கனிமொழி.
மகளின் பதில், வீண் பெருமை மீது ஊசியாக தைத்தது.
எளிமையின் பொருளை உணர்ந்து தெளிந்தாள் காஞ்சனா.
குழந்தைகளே... உடுத்தும் உடை உடலை மறைக்க தானே தவிர, பிறர் மனதில் ஆசையை துாண்டிவிட அல்ல என்பதை உணருங்கள்.
அமிர்தம் ரமேஷ்