சமையலில் பெரிதும் உதவுவது கறிவேப்பிலை. இதை, சைவ, அசைவ உணவுகளுடன் சேர்த்து சமைத்து உண்பர். கீரை வகையைச் சேர்ந்தது. மரமாக வளர்ந்து பலன் தரக்கூடியது.
இதில், 'வைட்டமின் - ஏ' என்ற உயிர்ச்சத்து பெருமளவில் உள்ளது. அத்துடன், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் உள்ளன.
இதை, வேக வைக்காமல் உண்டால் சத்துக்களை முழுமையாகப் பெறலாம். சட்னியாக அரைத்துச் சாப்பிட்டால், முழு சத்தும் கிடைக்கும்.
உடலுக்கு வெப்பம் அளிக்கவல்லது. பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை நீக்க வல்லது. பித்தக் காய்ச்சல், வாந்தி, கிறுகிறுப்பு, வயிற்றுவலி, வயிற்று இரைச்சல் போன்ற தொல்லைகளுக்கு பூரண நிவாரணம் தரும்.
தாங்க முடியாத வயிற்று வலியின் போது, சிறிதளவு கறிவேப்பிலையை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட்டால் போதும்; வலி பறந்து விடும்.
குடல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளுக்கு வலுவைத் தரும். உணவு எளிதில் ஜீரணமாக உதவும். மலச்சிக்கலையும் போக்கும். பார்வையில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி, கண்களை தெளிவடையச் செய்யும்.
சாதாரண காய்ச்சலுக்கும், இதை சாப்பிட்டு குணம் பெறலாம். இதனுடன், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, பெருங்காயம் சேர்த்து அரைத்தும் சாப்பிடலாம்.