அன்புள்ள பிளாரன்ஸ் அக்காவுக்கு,
சென்னை உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் நான். சிறு வயது முதல், தகவல் தொழில்நுட்ப முறைகேடுடன் தொடர்புள்ள, 'சைபர் க்ரைம்' படித்து, ராணுவத்தில் சேவை ஆற்ற ஆசைப்படுகிறேன்.
இந்த பணியில் சேர, 10ம் வகுப்பு முடித்த பின், என்ன குரூப் படிக்க வேண்டும். அது குறித்து இந்த தம்பிக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்பு தம்பி...
உன் ஆர்வத்தை பாராட்டுகிறேன். அதுவே, உரிய இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும். மனந்தளராமல் முயற்சி செய்.
முதலில், சைபர் குற்றங்கள் பற்றி தெரிந்து கொள்.
இது, ஐந்து வகைப்படும். அவை...
* கணினி உபயோகிப்பாளரின் அந்தரங்க தகவல்களை திருடுதல்
* கணினி உபயோகிப்பாளரின் வங்கிக்கணக்கு தகவல்களை திருடுதல்
* இணையதள துன்புறுத்தல்
* கணினி உபயோகிப்பாளரை கண்காணித்தல்
* கணினி உபயோகிப்பாளரின் தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறுதல்.
அமெரிக்கா, ரஷ்யா, ஆசிய நாடுகளான இந்தியா, ஹாங்காங், தென் அமெரிக்க நாடான பிரேசில், ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே ஆகியவற்றில், சைபர் குற்றங்கள் அதிகம். ஆசிய நாடான சீனாவில் மிக அதிகமாகவும், ஐரோப்பிய நாடான சுவீடனில் குறைவாகவும் நடக்கின்றன.
சைபர் குற்றம் செய்து பிடிபட்ட முதல் குற்றவாளி பெயர் அயன் மர்பி. இவன், 1981ல் பிடிபட்டான்.
'சைபர் கிரைம்' என்ற சொல், 1990ல், ஜி - 8 நாடுகள் நடத்திய மாநாட்டில் உருவாக்கப்பட்டது.
தம்பி... சில விஷயங்களை மனதில் கொள்...
பிளஸ் 2 சேரும் போது, கணக்கு, கணினி அறிவியல் அடங்கிய குரூப் தேர்ந்தெடு.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்க,
பிளஸ் 2 இறுதி தேர்வில், சராசரியாக, 45- முதல் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; முதுகலைக்கு, 55 சதவீதம் மதிப்பெண்ணும் பிஎச்.டி.,க்கு முதுகலையில், 55 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
சைபர் க்ரைம் தொடர்பான பட்ட படிப்புகள், விசாகப்பட்டினம், அலகாபாத், ஹைதராபாத், புனே, டேராடூன், பெங்களூர், டில்லி, போபால் மற்றும் சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது.
சைபர் க்ரைம் தொடர்பான இளங்கலை, முதுகலை சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. மேல்நிலைக் கல்வி முடித்ததும் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.
ராணுவத்தில் சேர்வது பற்றி கேட்டிருந்தாய்...
ராணுவத்தில், சைபர் க்ரைம் என, தனி பிரிவு இல்லை. அது தொடர்பான பணிகளை, 'சிக்னல் ரெஜிமென்ட்' என்ற ராணுவப் பிரிவு கவனித்துக் கொள்கிறது. அதுவும் வெளிநிறுவன ஆட்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி கவனிக்கிறது.
ராணுவம், 'அவுட் சோர்சிங்' செய்யும் நிறுவனங்களில் பணியில் சேர்ந்தால், மறைமுகமாக இந்திய ராணுவத்துக்கு வேலை செய்யலாம்.
தம்பி... சைபர் க்ரைமில் முதுகலை முடித்தால், கீழ்க்கண்ட வேலைகளில் சேரலாம். முதலில், ஐ.எஸ். எக்சிக்யூட்டிவ் இன்ஜினியராகலாம்.
பின், முதன்மை ஐ.எஸ்., மேலாளராகலாம். பணி அனுபவம் பெற்ற பின், செக்யூரிட்டி அட்வைசராகலாம். சீப் இன்பர்மேஷன் அலுவலராகவும் பணிபுரியலாம்.
இது தொடர்பான படிப்புகளுக்கு, பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
பெண்களின் அந்தரங்கத்துக்குள் அத்து மீறலுக்கு எதிராக பணி செய்தல், இணையதள மோசடி, தகவல் திருட்டுகளுக்கு எதிராகவும், தனிமனித பாதுகாப்புக்கு ஆதரவாகவும் போர்க்கொடி உயர்த்தினாலே, நாட்டு சேவையை நிறைவேற்றலாம்.
இந்த படிப்பில் முன்னேறி, வாழ்வில் உயர வாழ்த்துகிறேன்.
-- நிறைந்த அன்புடன், பிளாரன்ஸ்.