தைப்பூசத் திருவிழா, சிவனுக்கும், முருகனுக்கும் உரியது என, கருதுகிறோம். ஆனால், அது சந்திரனுக்கும் உரிய திருவிழா. இதை, 'அம்புலி திருவிழா' என்பர். 'அம்' என்றால் அழகிய என்று பொருள். அதாவது, 'அழகிய புலி' எனப்படும். புலிக்கும், சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்?
தமிழகத்தில் விழாக்கள், பெரும்பாலும் பவுர்ணமி அன்றே நடத்தப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம் ஆகியவை, பவுர்ணமியில் நடத்தப்படுபவை. இதற்கு, முக்கியமான அறிவியல் காரணம் உண்டு.
சந்திரனின் கதிர்கள், மனிதனின் உடலில் பட்டால் தான், அவனுடைய மன வலிமை அதிகரிக்கும். ஜோதிடத்தில், சந்திரனை மனோகாரகன் என்பர்.
பவுர்ணமி அன்று, சந்திரனின் கதிர்கள் முழுமையாக ஒளி வீசும். அந்நாளில் சந்திரனுக்கு பலம் மிக அதிகமென்பதால், அதன் கதிர்கள் மூலம், மனோபலத்தைப் பெற்று, எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனை, மனிதர்கள் பெறுகின்றனர்.
காட்டிலுள்ள மிருகங்களில், அதிக சக்தி வாய்ந்தது, புலி. புலிக்குரிய தைரியத்தை சந்திரனின் கதிர்கள் மூலம், மக்கள் பெறுகின்றனர். அதேநேரம், வானத்தில் அந்தப் புலி, வெள்ளை வெளேரென அழகாக இருக்கிறது. இதனால் தான் சந்திரனை, 'அம்புலி' என்றனர்.
தைப்பூசத் திருவிழா, முருகனின் மலைக்கோவில்களில் விசேஷமாகக் கொண்டாடப்படும். மலைகளில் ஏறி மக்கள், முருகனைத் தரிசிக்கும் போது, சுத்தமான காற்றுடன், சந்திரனின் கதிர்களை தங்கு தடையின்றி முழுமையாகப் பெறுகின்றனர். இதனால் தான் மலைக்கோவில் வழிபாட்டுக்கு, சக்தி அதிகம்.
இது சக்தி மிக்க நாள் என்பதால் தான், சூரபத்மனை சம்ஹாரம் செய்ய, முருகனுக்கு, சக்தி வேலை வழங்கினாள், பார்வதிதேவி.
இது மட்டுமல்ல... அம்புலிக்கு, 'சோளக்கஞ்சி' என்ற பொருளும் உண்டு. அக்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க, பவுர்ணமியன்று இரவில், சோளக்கஞ்சியை கிண்ணத்தில் வைத்து, அம்மாக்கள் ஊட்டுவர்.
குழந்தைகளுக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது. இருப்பினும், சற்று கட்டாயப்படுத்தி ஊட்டுவர். அப்போது, அவர்களின் மனதை வேறு திசையில் திருப்ப, வானத்தில் ஒளிரும் நிலாவைக் காட்டுவர். 'அம்புலி அம்புலி வா வா...' என்று பாடுவர். குழந்தைகள் பாடலைக் கேட்டபடியே சாப்பிட்டு விடும்.
தைப்பூசத் திருநாளுக்கு, மற்றொரு சிறப்பும் இருக்கிறது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், ருத்ர தாண்டவம் ஆடுகிறார், சிவபெருமான். அப்போது அவர், 'நடராஜர்' என பெயர் பெறுகிறார்.
அவர், பார்வதி தேவியுடன் இணைந்து, ஆனந்த தாண்டவம் ஆடும் நன்னாளே, தைப்பூசத் திருநாள். பிற்காலத்தில் இது, முருகப் பெருமானுக்குரிய திருநாளாக மாறிவிட்டது.
திருமணம் நடத்த, பூசம் ஒரு உயரிய நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் தான், வள்ளியை மணம் முடித்தார், முருகன்.
வரும், 28ம் தேதி, தைப்பூச நன்னாளில், சிவன், முருகன், சந்திரனை வணங்கி, நல்லருள் பெறுவோம்.
தி. செல்லப்பா