தேடி வந்த வாய்ப்பு!
மகளை பெரிய பாடகி ஆக்காமல் ஓய்வதில்லை என்றிருந்த, வெங்கட சுப்பையா, நோய்வாய் பட்டு, படுத்த படுக்கையானார். தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது. தான் கண் மூடுவதற்குள், மகளை மணக்கோலத்தில் பார்த்து விட நினைத்தார்.
'உங்க அவசரத்தாலே நம் பெண்ணோட வாழ்வை பாழாக்கிடாதீங்க...' என்று, மனைவி கடிந்து கொண்டதும், தன் முடிவை கை விட்டார்.
உடல் நலம் பெற்றதும், மகளின் ஜாதகத்துடன், தன் நம்பிக்கைக்குரிய ஜோதிடர் ராமையாவை சென்று பார்த்தார்.
ஜாதக ஏட்டைப் பார்த்து, மகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். பெரிய பாடகி ஆவாளா... திருமண யோகம் எப்படி இருக்கிறது என, சொல்லும்படி, வேண்டிக் கொண்டார், வெங்கட சுப்பையா.
கட்டம் போட்டு பார்த்தவர், 'உங்க மகளோட ஜாதகம் அமோகமா இருக்கு. இவள், கலையுலகில் மிகப்பெரிய இடத்தையும், அந்தஸ்தையும் அடைவாள். இவளோட விவாகம், 18 வயதில் தான் நடக்கும். அவள் விரும்பியபடியே எல்லாம் நடக்கும்...' என்று, ஜோதிடர் நல்வாக்கு சொன்னார்.
அப்பாவான அவருக்கு, ஏக சந்தோஷம்.
'கலையுலகில் உயர்ந்த அந்தஸ்து பெறுவாள், சரி; திருமணம், அவள் விருப்பப்படி நடக்குமா... அது தான் கொஞ்சம் இடிக்கிறது. நம் பேச்சை மீறாதவள், நம் சொல்லுக்கு மரியாதை தரும் பெண், நம்மை மீறி நடக்க மாட்டாள்...' என்று, தனக்குள் சொல்லிக் கொண்டார்.
வீட்டுக்கு வந்ததும், 'ஜோசியர் என்ன சொன்னார்...' என்றார், மனைவி.
'நம் பானு, பெரிய பாடகி ஆக போறா. கலையுலகில் கொடி கட்டிப் பறக்க போறா. அடுத்த வாரம், நான் மெட்ராஸ் போறேன். சினிமா சினேகிதரைப் பார்த்து, 'பெண்ண பாட வைக்க வாய்ப்பு இருக்கா'ன்னு, கேட்க போறேன்...' என்றார், மகிழ்ச்சி பொங்க.
தயாரிப்பாளர் நண்பரைப் பார்க்க, மகளுடன் சென்றார், வெங்கட சுப்பையா.
மகளின் குரல் வளத்தை, இனிமையை சிலாகித்தார்.
'ரொம்ப சந்தோஷம்... நல்ல வாய்ப்பு அமையும்போது பாட வெச்சுடலாம்...' என்றார், நண்பர்.
தன் சொல்லுக்கு மரியாதை கிடைத்த மகிழ்ச்சியில், 'ஒரு பாட்டு பாடிக் காட்டும்மா...' என்றார், மகளிடம்.
புது இடம், புது மனிதர்கள் முன் எப்படி பாடுவது... சற்று கூச்சத்துடனே பாடினார், குட்டிப் பெண், பானுமதி.
அங்கு அமர்ந்திருந்த பிரபல தெலுங்கு இயக்குனர், சி.புல்லையா, கை தட்டி, 'அருமையாக பாடுகிறாள். இப்படி பாடி நடிக்கிற வேஷத்துக்கு தான், ஒரு புதுமுகத்தை தேடிக் கொண்டிருந்தேன். இதோ கிடைத்து விட்டாள். என் படத்தின், இரண்டாவது கதாநாயகி, இவள் தான்... உங்க மகளை, நடிக்க வைக்கிறீங்களா?' என்று கேட்டார்.
'நடிப்பா... என் மகளை, பாடகியாக பார்க்க தான் விரும்புகிறேன்...'
'மிஸ்டர் வெங்கட சுப்பையா... உங்க மகள் பாடினால், எத்தனை பேர் கேட்பர். ஒரு கச்சேரியில் பாடினால், அந்த ஊருக்கு மட்டும் தெரியும். சினிமாவில் பாடி நடித்தால், இந்தியாவுக்கே தெரியுமே... உங்க மகளின் பாட்டை இந்தியாவே கேட்க வேண்டாமா...' என்ற, இயக்குனரின் பேச்சு, பானுமதியின் அப்பாவை யோசிக்க வைத்தது.
அவரது தயாரிப்பாள நண்பரும் பரிந்துரைக்க, சம்மதம் கொடுத்தார்.
சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லாத போதும், அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, தலையாட்டினார், இளம் பெண் பானுமதி.
'கோல்கட்டாவுக்கு புறப்பட்டு வந்திருங்க... அங்கே தான் படப்பிடிப்பு. பிரபல நடிகை புஷ்பவல்லியின் தங்கை வேஷம், உங்க மகளுக்கு... மாதம், 150 ரூபாய் சம்பளம்...' என்றார், இயக்குனர் புல்லையா.
'சம்பளம் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. என் மகளை நிறைய பாட்டு பாட வைங்க...' என்று கேட்டுக் கொண்டார், வெங்கட சுப்பையா.
கோல்கட்டாவில், வரவிக்ரேயம் தெலுங்கு பட, படப்பிடிப்பு துவங்கியது.
13 வயது பானுமதி, அறியாத பெண் காளிந்தியாக, தியாகராஜரின், 'பலுகவேமி நாதெய்வமா' கீர்த்தனையை பாடி, நடித்தார்.
படத்தில் ஒரு சோகமான கட்டம். அதில் அழுது கொண்டே நடிக்க வேண்டும். அழுது பழக்கமில்லாத செல்வச் சிறுமி, நடிப்பது எப்படி என, விழித்தார்.
எப்படியெல்லாமோ சொல்லி காட்டியும், அழுவது போல் அவரால் செய்ய தெரியவில்லை என்றதும், கோபத்தில் கண் சிவக்க, கத்தினார், இயக்குனர். அதைப் பார்த்த பானுமதி, அழ ஆரம்பித்து விட்டார். அவரது நிஜ அழுகை, அப்படியே படமானது.
'உன்னை அழ வைக்கத்தாம்மா அப்படிக் கத்தினேன். உன் மேலே கோபமோ, வருத்தமோ இல்லே...' என்று, 13 வயது நட்சத்திரம் பானுமதியை, சமாதானப்படுத்தினார், இயக்குனர்.
கடந்த, 1939ல் படம் வெளியானது. 'பானுமதியின் பாட்டும் பிரமாதம், நடிப்பும் பிரமாதம்...' என, பத்திரிகைகள் பாராட்டின. படத்தின் மாபெரும் வெற்றியால், அடுத்து, நான்கு படங்களின் வாய்ப்புகள் தேடி வந்தன.
புது நிபந்தனை போட்டார், வெங்கட சுப்பையா.
சென்னை, சாலிகிராமத்தில், டாக்டர் பி.பானுமதி ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் என்ற பெயரில், பள்ளியை நிறுவி, அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு, இலவசமாக கல்வியை வழங்கினார். இப்படி, பல நற்பணிகளை செய்துள்ளார், பானுமதி.
— தொடரும்
சபீதா ஜோசப்