என் நாடு, என் கவுரவம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
என் நாடு, என் கவுரவம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
00:00

பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதியில், ஜிப்பாக்கார நிருபர் கேட்ட கேள்வி, புகைப்பட கலைஞர் கோபிநாத்தை சற்று தடுமாற வைத்தது. நெற்றியில் பூத்த வியர்வை மொட்டுக்களை, கைகுட்டையால் ஒத்தியெடுத்தார்.
கேமராவை பேச வைப்பதோடு மட்டுமல்லாது, ஆட, பாட, அதிர, உருக வைக்க... ஏன், அழ வைக்கக் கூட தெரிந்த வித்தகர், கோபிநாத்.
அவர் எடுத்த புகைப்படங்களில் பல கவிதைகள், பல காவியங்கள். இந்திய அளவில் தன் புகைப்பட திறமையை காட்டிவிட்டு, தற்போது, அகில உலக அளவிலும் நிமிர்ந்து நிற்கும், இந்தியாவின் இணையற்ற சொத்து அவர்.
''சார்... நீங்க உலகப் புகழ்பெற்ற, பெரிய புகைப்பட கலைஞனாக இருக்கலாம்... ஏற்கனவே பலமுறை, புகைப்பட போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கலாம்; மறுக்கலை....
''அதுக்காக, 'அடுத்த மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிற உலக அளவிலான போட்டியிலும், நான் தான் முதல் பரிசை வெல்வேன்'னு, நீங்க ஆணித்தரமா சொல்றதை, உங்க தன்னம்பிக்கைன்னு எடுத்துக்கவா... இல்லை, உங்களோட தலைக்கனம்ன்னு எடுத்துக்கவா?''
விருட்டென்று தலையை திருப்பி, அந்த நிருபரை கோபமாய் பார்த்தார், கோபிநாத்.
இறுக்கமான அந்த சூழ்நிலையை, கோபிநாத்துடன் அமர்ந்திருந்த, அவரது மகள், சவிதா உடைத்தாள்.
''அதாவது, இந்த முறை, அந்த போட்டியில் வென்று, நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என்பதை தான், ஆர்வமிகுதியால் அவர் அப்படி சொல்கிறார்,'' என, சமாளித்தாள்.
அவசரமாய் அவளை கையமர்த்திய கோபிநாத், முகத்தில் கடுமையுடன், ''யோவ்... தலைக்கனம்ன்னே எழுதிக்கய்யா... நான் கவலைப்பட மாட்டேன். நான் தான் ஜெயிக்கறேன்... ஜெயிச்சுக் காட்டறேன்... பார்க்கிறாயா?''
கோபிநாத்தின் கோபப் பேச்சு, ஜிப்பா நிருபர் முகத்தில் குறுஞ்சிரிப்பை உற்பத்தி செய்ய, அவரது மனதில் ஏகமாய் எரிச்சலை உண்டாக்கியது.
''யோவ்... நீ எந்த பத்திரிகை?'' ஆள் காட்டி விரலை நீட்டி கேட்டார்.
''பிற்பகல்.''
''உன் பத்திரிகையில, இதை, 'முதல் பரிசை வென்றே தீருவதாய் கோபிநாத் சவால்'ன்னே போடு,'' என்றவாறே, சட்டை காலரை உயர்த்திக் காட்டினார்.
''வாழ்த்துக்கள் சார்... நீங்க ஜெயிக்க, எங்களோட வாழ்த்துக்கள். அதே நேரம் இன்னொரு விஷயத்தையும் கேட்டு விடுவது நல்லதல்லவா?'' என்று, கொக்கி போட்டார், அந்த நிருபர்.
''என்ன விஷயம்?'' என்றார்.
''ஒருவேளை, நீங்க ஜெயிக்கலேன்னா?'' ஜிப்பா நிருபரின் கிண்டலான கேள்வியில், ஒரு எள்ளல் தெரிந்தது.
''யோவ்... ஜெயிக்கலேன்னா, நான் தற்கொலை செஞ்சுக்கப் போறதா போடுய்யா,'' என, ஆவேசத்தில் வார்த்தைகளை கொட்டினார், கோபிநாத்.
''டாட்...'' அலறினாள், சவிதா.
கோபிநாத்தின் அந்த அதிரடி பதிலில், மொத்த பத்திரிகையாளர்களும் ஆடிப் போயினர்.
''எதுக்கு சார், இப்படி, 'எமோஷன்' ஆகறீங்க?'' யாரோ ஒரு நிருபர், சமாதானமாக பேசினார்.
''இது, 'எமோஷன்' இல்ல... என்னை நானே உரசிக்கிற உரை கல். அவருக்கு மட்டுமல்ல, எல்லா பத்திரிகைகாரங்களுக்கும் சொல்றேன்... எல்லாரும் அவங்கவங்க பத்திரிகையில, கொட்டை எழுத்துல, 'முதல் பரிசு வாங்கலைன்னா கோபிநாத் தற்கொலை செய்து கொள்வார்'ன்னு போடுங்க...'' என சொல்லி, விருட்டென எழுந்து சென்றார்.
கலவர முகத்துடன், அவரை பின் தொடர்ந்து ஓடினாள், சவிதா.
தங்கள் பத்திரிகைக்கு செய்தி கிடைத்த மகிழ்ச்சியில், 'கச கச'வென்று பேசியபடி வெளியேறினர், நிருபர்கள்.
அன்றிலிருந்து தன் கேமரா கண்களால், வெளி உலகை ஒவ்வொரு அங்குலமாக அளக்க ஆரம்பித்தார், கோபிநாத்.
காணும் ஒவ்வொரு காட்சியையும், மனிதரையும், இடத்தையும் வித்தியாசமான கோணத்தில் கேமராவிற்குள் அடைத்து வைத்தார்.
உணவு மற்றும் உறக்கத்தை மறந்து, பரிசுப் போட்டிக்கான புகைப்படத்தை தேடி, கன்னித்தீவு சிந்துபாத் மாதிரி அவர் அலைவது, சவிதாவிற்கு அதீத வருத்தத்தை கொடுத்தது.
''இப்படி, ராத்திரி பகல்ன்னு பார்க்காம அலைஞ்சு, திரிஞ்சு உடம்பைக் கெடுத்துக்கறீங்களே... இது, தேவையா டாடி?''
''என்ன இப்படிக் கேட்டுட்டே... இது ஒரு சவால். நான் ஜெயிக்கணும்... ஏன்னா, இது, என் கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை... என் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.''
''அப்படின்னா, அன்னிக்கு நீங்க விட்ட சவால், சீரியசான சவாலா டாடி?'' பய முலாம் பூசின, அவள் வார்த்தைகள்.
''நோ பேபி... பயப்படாதே... நான் ஜெயிச்சுடுவேன்,'' கட்டை விரலை காட்டி புன்னகைத்தார்.
அவரது புன்னகையும், தன்னம்பிக்கை பேச்சும், அவளுக்கு பெருமிதத்தைக் கொடுத்தாலும், இன்னதென்று புரியாத அச்சப் பந்து, அடி வயிற்றில் அசைந்தபடி இருந்தது.
பதினைந்து நாட்களுக்கு பிறகு -
மெலிதான தங்க பிரேமிட்ட, 2க்கு 2 அடி அளவிலான அந்த புகைப்படத்தை சுவரில் சாய்த்து, சற்று தள்ளி நின்று, ஊன்றி ரசித்தார், கோபிநாத்.
'வாவ்... எக்சலண்ட்... நிச்சயம், இது முதல் பரிசை தட்டிடும்...' என, தனக்குத்தானே கூறிக்கொண்டார்.
''என்ன டாடி... மொபைல் போனை, 'சைலன்ட்'ல போட்டு வெச்சிருக்கீங்களா... ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன்,'' என்றபடியே அறைக்குள் நுழைந்த சவிதா, அந்த புகைப்படத்தை கூர்ந்து பார்த்து, முகத்தைச் சுளித்தாள்.
''என்னம்மா பார்க்கிற... இதுதான் அமெரிக்காவுல நடக்கற உலக புகைப்பட போட்டியில் முதல் பரிசை வெல்லப் போறது,'' என்றார்.
''அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க... எனக்கென்னமோ அப்படி தெரியலையே,'' என்றாள்.
''நோ... உனக்கு புரியலைன்னு சொல்லு, ஒத்துக்கறேன்... இந்த புகைப்படத்தில் உள்ள தொழில் நுட்பம்... இதனுாடே இழையோடித் தெரியும் கலை நுணுக்கம்... வித்தியாசமான, 'லைட்டிங் எபெக்ட்' மற்றும் அரிதான கோணம், எதுவுமே உன் புத்திக்கு எட்டலை... அதான் வெறுமனே மேலோட்டமா பார்த்துட்டு சொல்ற...''
இட வலமாய் தலையை ஆட்டியபடியே, அப்படத்தை மறுபடியும் பார்த்தாள்.
''ஓ.கே., நானே சொல்றேன் கேட்டுக்க... இதுல இருக்குற இந்த சிறுவன், இந்தியாவோட மிக மோசமான ஒரு சேரி பகுதியில், சாக்கடைக்கு நடுவில், குப்பை தொட்டிகளின் நெருக்கத்தில் பன்றிகளோடு வாழ்ந்துகிட்டு இருக்கிறவன்...
''வறுமையின் ஒட்டுமொத்த வாரிசு. அவனோட டிரவுசரின் பின்பக்க கிழிசலை நல்லா பாரு... அது என்ன தோற்றத்துல இருக்கு?'' என்றார்.
அவள் விழித்தாள்.
''அடடே... என்னம்மா இது கூட புரியலையா உனக்கு... அந்த கிழிசல், இந்திய வரைபடம் வடிவத்துல இருப்பது, உனக்கு நிஜமா தெரியலையா?''
புகைப்படத்தை நெருங்கி பார்த்துவிட்டு, ''அட... ஆமாம்!'' என்றாள்.
''அதுவே என்ன ஒரு நுட்பம் தெரியுமா... 'கான்செப்ட்'டை அதுவே சொல்லும். அடுத்தது, இப்படியொரு கிழிசல் டிரவுசரை போட்டு, ஒட்டிப்போன வயிறோட, எலும்புகள் தெரியும் நெஞ்சுக் கூட்டோட இருக்கிறான், இச்சிறுவன். குப்பை தொட்டியில் கிடைத்த ரொட்டி துண்டை, தான் சாப்பிடாமல், தன்னருகில் நின்று கை நீட்டும் அச்சிறுமிக்கு தருகிறான்...
''அதன் காரணமாக, அவன் முகத்தில் கொப்பளித்து நிற்கிற மகிழ்ச்சி இதெல்லாம் தெரியவே இல்லையா, உன் பார்வைக்கு?''
''ம்ஹூம்... தெரியலை டாடி.''
''ரசனை எனும் நுண்ணறிவு, உனக்கு இன்னும் முளைக்கவே இல்லை... உன்னை பார்க்க எனக்கு பாவமாயிருக்கு,'' சிரித்தபடியே, மகளை சீண்டினார்.
''டாடி... நான் ஒண்ணு சொல்வேன் கேட்பீங்களா... இந்த புகைப்படம் வேணாம்... இதை நீங்க அனுப்பாதீங்க.''
''ஏய்... உனக்கென்ன பைத்தியமா... இப்பத்தானே இந்த படத்தோட சிறப்பு அம்சங்களை சொன்னேன்.''
''அதெல்லாம், ஓ.கே., டாடி... வந்து...''
''ஓ... புரியுது. எங்கே இந்த படத்தை அனுப்பி, தோற்றுப் போய், எனக்கு பரிசு கிடைக்காம நான் தற்கொலை செய்து கொள்வேனோன்னு பயப்படறே, அதானே... கவலைப்படாதே, என்னோட இந்த புகைப்படம், நிச்சயம் என் உயிரை காப்பாற்றும்,'' நம்பிக்கை, நங்கூரம் பாய்ச்சி நின்றது, அவர் பேச்சு.
''உங்க உயிரை காப்பாத்திடும்... ஆனா, நம் தேசத்தோட மானம், மரியாதை, கவுரவம் அத்தனையையும் சாகடிச்சுடும்,'' சவிதாவின் குரலில் கடுமை இருந்தது.
நெற்றியை சுருக்கி, அவளை கூர்ந்து நோக்கினார்.
''ஆமாம் டாடி... இந்தியாவோட ரொம்ப மோசமான, பின்தங்கிய நிலையில் இருக்கிற ஒரு சேரி பகுதியையும், அங்க வாழுற ஓட்டை டிரவுசர் பையனையும் புகைப்படம் எடுத்து, அமெரிக்க போட்டிக்கு அனுப்பி, 'இதுதான் எங்க நாட்டோட நிலைமை'ன்னு, உலகத்துக்கு வேற பறைசாற்றப் போறீங்களா...
''உலகத்தில் உள்ள மற்ற நாடுகளெல்லாம், 'ஜெட்' வேகத்தில் முன்னேறிட்டிருக்கிற இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும், நாங்க இன்னும் முன்னேறாம, அப்படியே கற்கால மனிதனாட்டம் தான் இருக்கோம்ன்னு, தம்பட்டம் அடிக்கப் போறீங்களா...
''வேண்டாம் டாடி... இதுக்கு பதிலா, நம் நாட்டோட உண்மையான வளர்ச்சியை, பெருமையை, கலாசாரத்தை காட்டுற மாதிரியான புகைப்படத்தை எடுத்து அனுப்புங்க... நாம மற்ற நாடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை டாடி. ப்ளீஸ்...'' கெஞ்சினாள்.
''எனக்கு பரிசு தான் முக்கியம். அதனால, என் முடிவுல எந்த மாற்றமும் இல்லை. நான் அந்த புகைப்படத்தை தான் அனுப்பப் போறேன்,'' என, தீர்மானமாய் சொல்லி சென்றவரை பார்த்து, கண்ணீருடன் நின்றாள்.
நாற்பத்தைந்து நாட்களுக்கு பிறகு, தன் வீட்டு வாசலில் மொத்தமாய் வந்திறங்கிய, 'மீடியா'வினரை குழப்பத்துடன் பார்த்தார், கோபிநாத்.
'சவால்ல ஜெயிச்சு, இனி, புகைப்பட கலைல உங்களை மிஞ்ச ஒருத்தரும் இல்லைன்னு, சொன்னபடி நிரூபிச்சு, சாதிச்சுட்டீங்க சார்...' எனக் கூறி, அனைவரும் ஒட்டுமொத்தமாய் கை தட்டினர்
'ஆஹா... என் புகைப்படம் வென்று விட்டது. என் உயிர் காப்பாற்றப்பட்டு விட்டது...' உள்ளுக்குள் குதுாகலித்தார்.
சட்டென முன் வந்து நின்ற அதே ஜிப்பாக்கார நிருபர், ''சாரி சார்...
அன்னிக்கு நான் உங்களை...'' மனமுவந்து மன்னிப்பு கோரினார்.
''இட்ஸ் ஓ.கே., சொல்லப் போனா மிஸ்டர் ஜிப்பா... நீதான்யா எனக்கு கிரியா ஊக்கியே,'' என்றார், கோபிநாத்.
''சார்... பரிசு பெற்ற அந்த புகைப்படம் எந்த சூழ்நிலையில், எப்படி எடுக்கப்பட்டது; அதில் என்னென்ன உட்கருத்துக்கள், உத்திகள் இருக்கு என்பதை, பத்திரிகை வாசகர்களுக்காக நீங்க கண்டிப்பா சொல்லியே ஆகணும்,'' பெண் நிருபர் ஒருவர் கேட்டார்.
''ஓ.எஸ்., தாராளமாய்...'' என்ற கோபிநாத், அப்புகைப்படத்தின் பிரதியை எடுத்து வர எழுந்தார்.
''இதோ என்கிட்டேயே இருக்கு சார், அந்த புகைப்படத்தோட காப்பி,'' இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்பட நகலை நீட்டினார், ஜிப்பாக்காரர்.
''வெரிகுட்,'' என்றபடி அதை வாங்கிய கோபிநாத், அதை முழுதாய் பார்த்ததும், ஆக்ரோஷமானார்.
''நோ... நோ... நான் அனுப்பிய புகைப்படம் இதுவல்ல... சம்திங் ராங்.''
''என்ன சார் சொல்றீங்க... இது, உங்க புகைப்படம் இல்லையா?''
''இது, நான் எடுத்த புகைப்படம் தான். ஆனா, போட்டிக்கு அனுப்பியது இதையல்ல, வேறு புகைப்படத்தை. எங்கியோ குழப்பம் நடந்திருக்கு,'' கோபத்தில் அவரது முகம், மேலும் சிவப்பாகி விகாரமாய் தோற்றமளித்தது.
உள் அறையிலிருந்து மொத்தத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார், சவிதா. இனியும் அந்த உண்மையை சொல்லாமல் விட்டால், நிலைமை மேலும் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்து வெளியே வந்தாள்.
''என்னை மன்னிச்சிடுங்க, டாடி... நான் தான் உங்களுக்கு தெரியாம, நீங்க ஒட்டி வைத்திருந்த கவரினுள் இருந்த புகைப்படத்தை எடுத்துட்டு, இதை வைத்தேன்,'' நடுங்கும் குரலில் சொன்னாள்.
''ஓ... மை காட்,'' என்று, நெற்றியில் கை வைத்தவர், ''ஏன் இப்படிச் செஞ்சே?'' என, கத்தினார்.
அப்பாவுக்கும், மகளுக்கும் இடையில் நடக்கும் சம்பாஷனையின் பின்புலம் விளங்காத நிருபர்கள், குழப்பத்தில், ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர்.
''டாடி... எது எப்படியோ, நீங்க எடுத்த புகைப்படம்தானே ஜெயிச்சிருக்கு... அப்புறமென்ன, விடுங்க,'' என்றாள், சவிதா.
''மேடம்... நாங்க எல்லாம், இங்க என்ன நடக்குதுன்னே புரியாம தலையை பிய்ச்சுக்கறோம்... ப்ளீஸ், எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்,'' ஆவலோடு இடை புகுந்தார், நிருபர் ஒருவர்.
மெலிதாய் சிரித்த சவிதா, விபரத்தை கூறினாள்.
பொறுமையாய் அனைத்தையும் கேட்ட, 'மீடியாக்காரர்கள்' அனைவரும், தங்கள் கேமராவை கோபிநாத்திடமிருந்து விலக்கி, சவிதாவின் மீது நிலைப்படுத்தினர்.
''உண்மையை சொல்லணும்ன்னா, இன்னிக்கு, வி.ஐ.பி., நீங்க தான் மேடம். போட்டியில் முதல் பரிசு வாங்கி, உங்கப்பா, இந்த நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கலாம்.
''ஆனா, நம் நாட்டோட பேருக்கும், பாரம்பரிய புகழுக்கும், துளியும் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உங்கப்பாவோட உயிரையே பணயம் வைக்கிற மாதிரியான காரியத்தை, ரொம்ப துணிச்சலா செஞ்சிருக்கீங்க...
''ஒரு பெரிய, 'ரிஸ்க்'கை, நம்பிக்கையோட, மன திடத்தோட எடுத்திருக்கீங்க... அதுல வெற்றியும் பெற்றிருக்கீங்க... யூ ஆர் கிரேட்,'' என, அடுக்கிக் கொண்டே போனார், ஜிப்பாக்காரர்.
''மேடம்... இப்ப உங்ககிட்ட ஒரு கேள்வி... ஒருவேளை, நீங்க புகைப்படத்தை மாத்தி வெச்ச காரணத்தாலேயே, உங்க அப்பாவுக்கு பரிசு கிடைக்காம போய், அவர் சொன்னபடி செஞ்சிருந்தா?''
சில நிமிடங்கள் அமைதி காத்த சவிதா, ''முதலில் தாய் நாட்டை ஒரு களங்கத்திலிருந்து காப்பாற்றி விட்டோம்ன்னு, சந்தோஷப்படுவேன். பிறகு, அப்பாவின் இழப்பிற்கு காரணமாகி விட்டோமேன்னு, வருத்தப்படுவேன்...
''மொத்தத்தில் இழந்தது அப்பாவை... காப்பாற்றியது தாய் மண்ணைன்னு நெனச்சு, மனசை தேத்திக்குவேன்,'' என்றாள்.
சவிதாவின் பதிலில் நெகிழ்ந்து போனார், கோபிநாத். மகளின் தேசப் பற்றில் ஒரு பாதி கூட தனக்கு இல்லாமல் போய் விட்டதற்காக வருந்தி, நெருங்கி வந்து தோளோடு அவளை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டார்.

கவுசல்யா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X