குருநாதர் ஒருவர், தம் சீடருடன் அடர்ந்த காட்டுப் பகுதியில் போய் கொண்டிருந்தார். வழியில், ஒரு பெரிய பாம்பை, லட்சக்கணக்கான எறும்புகள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன; சமாளிக்க வழியின்றி குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக் கொண்டிருந்தது, பாம்பு.
குருநாதரும், சீடரும் பதறினர்; இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.
விநாடிக்கும் குறைவான நேரம், கண்களை மூடி தியானம் செய்த குருநாதருக்கு, உண்மை விளங்கியது. உடனே அவர், கமண்டலத்தில் இருந்த நீரை எடுத்து, பாம்பின் மீது தெளித்து, 'ம்...' என்று, குரல் கொடுத்தார்.
அதே விநாடியில், எறும்புகள் அனைத்தும் விலகி ஓடின; பாம்பும் உயிரைத் துறந்து, நற்கதி பெற்றது.
குருவும், சீடரும் நடக்கத் துவங்கினர்.
'குருதேவா... பாம்பை எறும்புகள் கடித்து குதறிய காட்சியைப் பார்த்ததும், நான் கலங்கினேன்; சரி... உங்கள் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்ததே... அதுதான், எனக்கு காரணம் புரியவில்லை...' என்று இழுத்தார், சீடர்.
சீடரின் மனநிலையை புரிந்து கொண்டவர், 'விளைவுகளை எண்ணிப் பார்க்காமல், தெரிந்தே தீவினைகளில் இறங்கி விடுகின்றனர், மனிதர்கள். அதன் பலன் தான் இது...' என்ற குருநாதர், கதை சொல்லத் துவங்கினார்...
'பிருந்தாவனத்தில் இருக்கும் கண்ணன் கோவிலில், மகந்த் என்பவர், தலைமை பூசாரியாக இருந்தார். மக்களெல்லாம், அவரை நம்பி, தர்ம கைங்கரியங்களுக்கென்று, நிறைய செல்வங்களை ஒப்படைத்தனர்.
'ஆனால் அந்தப் பூசாரியோ, செல்வங்களை எல்லாம் தனக்கும், தன் குடும்பத்திற்குமாக உபயோகப்படுத்தி, சுகபோக வாழ்க்கை வாழத் துவங்கினார்.
'தெய்வ கைங்கரியங்களுக்கு உண்டானதை, தன் கைப்படுத்திக் கொண்ட அந்த பூசாரி, பாம்பாக வந்து பிறந்தார். தர்ம கைங்கரியங் களுக்காக அவரிடம் செல்வம் தந்தவர்கள், எறும்பாகப் பிறந்து, பாம்பாக இருந்த பூசாரியை, கடித்துக் குதறினர்.
'சீடனே... இப்போது தெரிகிறதா... ஆயிரம் பசுக்கள் இருந்தாலும், கன்று எப்படி தன் தாயை, மிகவும் சரியாகக் கண்டுபிடித்துச் சேருகிறதோ... அதுபோல, அவரவர் நல்வினை, தீவினைகள் அவரவரை வந்தடையும். நல்லதே செய்வோம்; நன்மையே பெறுவோம்...' என்றார், குருநாதர்.
அந்த குருநாதர் தான் ஆசாரிய புருஷரான, ஸ்ரீ வல்லபாசாரியார்; சீடர், தாமோதரதாசர்.
விளைவுகளின் காரணத்தை விளக்கும் ஆசாரிய உபதேசம் இது.
ஆன்மிக தகவல்கள்!
சூரிய உதய நேரத்தில், வீட்டு வாசல் மூடியிருக்கக் கூடாது. ஏனெனில், மகாலட்சுமி வீட்டுக்கு வரும் நேரம், அது.
பி. என். பரசுராமன்