கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள், 30 பேர், காஷ்மீரில் ஆரம்பித்து, தங்கள் சைக்கிள் பயணத்தை, 45 நாட்களுக்கு பிறகு, கன்னியாகுமரியில் நிறைவு செய்து, சாதித்துள்ளனர்.
'இன்பினிட்டி ரைட்' என்ற தலைப்பிட்டு, கொடூரமான பனியில், சவாலான சாலையில், 43 நாட்கள், 3,842 கி.மீ., துாரம் பயணம் செய்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இவர்களில், தான்யா என்ற பெண் சைக்கிள் ஓட்டுனரும் உண்டு.
ஆதித்தியா மேத்தா என்ற தொழிலதிபர், ஆறு ஆண்டுகளுக்கு முன், விபத்தில் கால் இழந்தார். இதனால், ஆரம்பத்தில் துவண்டு போனாலும், பின், தன் கவனத்தை சைக்கிள் ஓட்டுவதில் செலுத்தினார்.
ஒருமுறை, ஒற்றைக்காலுடன் இவர், நீண்ட சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது, கிடைத்த ஆதரவையும், அன்பையும் உணர்ந்தார்.
தன்னைப் போலவே, ஊனமுற்ற வீரர்களை, சைக்கிள் ஓட்டுவதில் உற்சாகப்படுத்த, அறக்கட்டளை துவக்கி, நடத்தி வருகிறார், ஆதித்தியா மேத்தா.
பயிற்சி வழங்குவதுடன், ஊனமுற்றவர்களுக்கான சைக்கிள் போட்டி உலகில் எங்கு நடந்தாலும், அதில் பங்கேற்கவும் வழி செய்கிறார். இதன் மூலம், அவர்கள் உற்சாகம் பெற்று வருகின்றனர்.
கால் ஊனம் என்று இல்லை, எப்படிப்பட்ட மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், அவர்களுக்குள் விளையாட்டுத் திறமை இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு, நவ., 19ல் ஆரம்பித்த சைக்கிள் பயணம், குறிப்பிட்டபடி, டிச., 31 அன்று, கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
முப்பது சைக்கிள் வீரர்களும், 36 நகரங்களை கடந்து வந்துள்ளனர். பல இடங்களில் சமூக ஆர்வலர்களையும், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களையும் சந்தித்து, ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டு வாய்ப்பு பற்றி பேசியுள்ளனர்.
இவர்களின் பயணத்திற்கு, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.,) மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (சி.ஏ.பி.எப்.,) ஆகியவை உதவியுள்ளன.
'எங்களின் இந்த விழிப்புணர்வு சவாரி, இந்தியாவின் சிறந்த பாரா விளையாட்டு திறனுள்ளவர்களை கண்டுபிடித்து, உற்சாகம் தந்து, வழிகாட்டவும் செய்தது. இந்த நீண்ட பயணத்தில், எங்களிடம் நிபந்தனையற்ற அன்பைக் காட்டிய மக்களுக்கு நன்றி.
'உடல் ஊனமுற்ற சைக்கிள் சாம்பியன்களை உருவாக்கி, அவர்களை இந்தியாவிற்காக விளையாடச் செய்து, 'ஹீரோ'களாக்குவதே எங்கள் லட்சியம்...' என்கிறார், ஆதித்யா மேத்தா.
ஆதித்யா மேத்தா அறக்கட்டளை பற்றி, மேலும் தெரிந்து கொள்ள, கீழே உள்ள இணையம் மூலம் தொடர்பு கொள்ளவும்.
https://adityamehtafoundation.org
எம். ராகவேந்தர்