உயிரே உனக்காக.... (26)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
00:00

இதுவரை: கவிதாவுக்கும், தனக்கும் பிறந்த குழந்தையை நரேன் வீட்டில் விட்டு, மனித மனங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்ததில், பல விஷயங்கள் தெளிவானதாக கூறினான் ஆண்டர்சன். அதே சமயம், கவிதாவும், நரேனும் அக்குழந்தையை சாக்காக வைத்து, அவர்கள் மீண்டும், மீண்டும் சந்திக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதை, இச்சம்பவம் புரிய வைத்ததாக கூறி, அங்கிருந்தவர்களை மேலும் குழப்பினான். இதையெல்லாம் பொறுக்க முடியாத கவிதா, ஆண்டர்சன் கன்னத்தில், "பளார்' என்று அறைந்தாள் —

பிறர் முன்னிலையில், ஒரு பெண் முத்தமிடுவதை, வெட்கமின்றி சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் கலாசாரத்தில் வந்த ஆண்டர்சனால், ஒரு பெண், தன்னை அறைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவமானமாய் உணர்ந்தான்.
அவனும், பதிலுக்கு கவிதாவை திருப்பி ஒரு அறை விட்டிருக்க முடியும்; ஆனால், அப்படி நடந்து கொள்ளவில்லை. அவன் உள் மனது வேறு மாதிரியாக கணக்குப் போட்டது. மனசுக்குள் ஏற்பட்ட வலியை மறைத்து, மெல்ல புன்னகைத்தபடி கவிதாவைப் பார்த்து சொன்னான்...
""பரவாயில்லை, நீ அறைந்ததிலும் ஒரு சுகம் இருப்பதை என்னால் உணர முடிகிறது கவிதா.''
அவன் சொன்ன வார்த்தைகள், மதுரிமாவையும், நரேனையும் ஆச்சரியப்பட வைத்தன. இவன் உண்மையைத்தான் சொல்கிறானா என்ற சந்தேகத்தை இருவருக்குள்ளும் எழுப்பின. ஆண்டர்சனை நன்கு அறிந்து வைத்திருந்த கவிதாவிற்கு மட்டும், அவன் பொய் சொல்கிறான் என்பது தெரிந்தது.
""பெண் என்பவள் சுகத்திற்காக மட்டுமே என்ற எண்ணம் கொண்ட உன்னைப் போன்றவர்களால், அப்படித்தான் உணர முடியும்...''
கவிதா அறைந்ததைக் காட்டிலும், அவளது வார்த்தைகள் மேலும் கூர்மையாகப் பாய்ந்து, ஆண்டர்சனை மேலும் காயப்படுத்தியது.
""கவிதா... உனக்கும், உன் கணவனுக்கும் இடையே ஆயிரம் இருக்கலாம்; ஆனால், அதுபற்றி நீங்கள் விவாதிப்பதற்கான இடம் என் வீடு அல்ல. உங்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு, தயவு செய்து இருவரும் வெளியேறுங்கள் ப்ளீஸ்,'' என்றாள் மதுரிமா.
""மேடம்... ரொம்பவும் அவசரப்படுகிறீர்கள்; நான் உங்களுக்கு உதவ வந்திருக்கிறேன்,'' என்றான் ஆண்டர்சன்.
""நோ... யாருடைய உதவியும் எனக்கு வேண்டாம். நீங்கள் இருவரும் வெளியே செல்வதுதான் எனக்கு செய்கிற பேருதவியாக இருக்கும்.''
""சரி... நாங்கள் வெளியேறி விட்டால், உங்களுக்கும், நரேனுக்கும் உள்ள பிரச்னை தீர்ந்து விடுமா?'' என்றாள் கவிதா.
""எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னை என்று ஒன்று இருக்குமானால் அது நீதான்.''
""நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள்... உங்கள் பிரச்னை கவிதா மட்டுமே அல்ல; உங்கள் கணவர் நரேனும் கூட என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.''
ஆண்டர்சன் சொன்னது, மதுரிமாவின் அடிவயிற்றில் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியது. "ஒரு வேளை நான் சந்தேகிப்பது உண்மையில் நிஜமான ஒன்றுதானோ... என் கணவன் சொன்ன அந்தரங்கம் புனிதமானது என்பது, என்னை ஏமாற்றும் வார்த்தை ஜாலமோ!'
மதுரிமா யோசிப்பதைப் பார்த்து, நரேனுக்குள் பயம் வந்தது.
""இந்த மனிதர் எதை, எதையோ சொல்லி, உன்னைக் குழப்பப் பார்க்கிறார். இவர் சொல்வது போலவும், நீ நினைப்பது போலவும் எனக்கும், கவிதாவுக்கும் இடையே எந்தவிதமான தவறான எண்ணங்களும் இல்லை மது!''
""என்னைச் சுற்றி நடக்கிற விஷயங்கள், வேறு மாதிரியாகத் தானே இருக்கின்றன.''
""அந்த விஷயங்களுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை. அவை எல்லாமே இந்த மனிதரால், நம் மீது வேண்டுமென்றே திணிக்கப்பட்ட விஷயங்கள்.''
""நான் திணிக்கிறேனா... என்ன சொல்கிறீர்கள் நரேன்... நீங்களும், கவிதாவும் நண்பர்களாக, நானா காரணம்... நானா உங்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன்? நீங்கள் யாரென்றே எனக்கு தெரியாதே!''
""இரண்டு பேர் நண்பர்களாவது ஒன்றும் பெரிய விஷயமில்லை மிஸ்டர் ஆண்டர்சன்.''
""அது, எனக்கும் தெரியும். அந்த நண்பர்களில் ஒருவர் ஆணாகவும், மற்றவர் பெண்ணாகவும் இருக்கும் போது, அந்த நட்பு கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாக மாறிவிடும் நரேன்.''
ஆண்டர்சன் சொல்வதில் உள்ள யதார்த்தம், அந்த மூவருக்குமே நன்றாகப் புரிந்தது. முன், பின் தெரியாத ஆணுக்குள்ளும், பெண்ணுக்குள்ளும் நிகழும் முதல் சந்திப்பு, அதன் காரணமாய் தொடரும் நட்பும், பிறரை யோசிக்க வைக்கும் விஷயம்தான்.
""இதோ பாருங்கள்... கவிதா ஒரு ஏர்ஹோஸ்டஸ்... நான், அவள் பணிப்பெண்ணாய் இருந்த விமானத்தில் அடிக்கடி பயணித்தவன். அத்துடன் நாங்கள் இருவருமே ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்நிய தேசத்தில் ஒரே இனத்தையும், மொழியையும் சேர்ந்தவர்கள் சந்திக்கும் போது, நட்பு ஏற்படுவது சாதாரணமான விஷயம்தான்.''
""ரொம்பவும் சரி... என்னுடைய கேள்வி, நீங்கள் அடிக்கடி பயணித்த விமானங்களில் உங்கள் இனத்தையும், மொழியையும் சேர்ந்த வேறு பணிப்பெண்களே இல்லையா அல்லது உங்களைத் தவிர்த்து வேறு யாருமே பயணிக்கவில்லையா? பிறப் பணிப்பெண்களை நீங்கள் தவிர்த்து, பிற பயணிகளை கவிதா தவிர்த்துவிட்டு, நீங்கள் நண்பர்களாக எது காரணமாய் அமைந்தது என்று உங்கள் இருவராலும் சொல்ல முடியுமா?''
ஆண்டர்சனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை நரேனும், கவிதாவும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என, இருவருமே மவுனமாய் நின்றனர்.
""என்ன பேசாமல் நிற்கிறீர்கள்... அவரது கேள்விக்கு பதில் சொல்லுங்கள். எது உங்களை நண்பர்களாக்கியது?''
இடையில் புகுந்து கேள்வி கேட்டாள் மதுரிமா.
""மது... இது மிகவும் அபத்தமான கேள்வி. எவ்வித காரணமோ, எதிர்பார்ப்போ இன்றி, மிகவும் இயல்பாகத்தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.''
""இந்த பதில் உங்களைப் பொறுத்தமட்டில் சரியாக இருக்கலாம்; ஆனால், கவிதாவின் அப்போதைய மனநிலை வேறு.''
""ஏன்... கவிதாவின் அப்போதைய மனநிலை எப்படி இருந்தது?''
""கவிதா... என்ன மாதிரியான ஒரு மனநிலையில், நீ முதன்முதலாக நரேனை சந்தித்தாய் என்பதை நான் சொல்லட்டுமா... இல்லை நீயே சொல்கிறாயா?''
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாதவளாய், புருவம் சுருக்கி, யோசித்துப் பார்த்தாள் கவிதா. அவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
""எனக்குத் தெரியவில்லை.''
""எனக்குத் தெரியும்... நான் சொல்லட்டுமா?''
""சொல்லுங்கள்.''
""நீயும், நானும் அப்போது பிரிந்து தனித்தனியே வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்முடைய விவாகரத்து வழக்கு, கோர்ட்டில் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட வழக்கு முடிந்து, நமக்கு விவாகரத்து வழங்கப்பட்டுவிடும் என்ற ஒரு சூழ்நிலையில் தான், நீ முதன் முதலாக நரேனை சந்தித்தாய்.''
""சரி... நம் விவாகரத்திற்கும், நாங்கள் நண்பர்கள் ஆனதற்கும் என்ன சம்பந்தம்?''
""நிறையவே இருக்கிறது கவிதா. வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்ட ஒரு ஆணை, இனி காலம் முழுக்கப் பிரிந்து வாழப் போகிறோம் என்பது, ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான சூழ்நிலை இல்லையா?''
ஆண்டர்சனின் அந்த கேள்விக்குள் அநேக அர்த்தங்கள் பொதிந்து கிடப்பதை அவர்கள் மூவராலும் உணர முடிந்தது. ஆனால், ஆண்டர்சன் நினைக்கும் விதத்தில் அதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த மூவரின் உள்மனதும் மறுத்தது.
காரணம், மதுரிமா, நரேன், கவிதா என்ற மூவருமே, இந்த விஷயத்தில் வேறுவிதமான இந்திய, அதிலும் குறிப்பாக தமிழ்க் கலாசாரத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டவர்கள்.
""எதை நீங்கள் வித்தியாசமான சூழ்நிலை என்று சொல்கிறீர்கள்?''
""ஆண் - பெண் உறவில், ஆண் என்பவனின் பங்கு என்ன என்பதைத் தெரியாமலேயே, ஒரு பெண் காலம் முழுக்க வாழ்வது, ஒரு மாதிரியான சூழ்நிலை. ஆனால், ஆணைப் பற்றித் தெரிந்து கொண்ட பின், அந்த ஆண் இல்லாமலேயே ஒரு பெண் வாழ்வது என்பது, வேறு மாதிரியான ஒரு சூழ்நிலை.''
""எதற்காக சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள். என்ன சொல்ல வருகிறீர்களோ, அதை நேரிடையாக, வெளிப்படையாகச் சொல்லுங்கள்.''
""சொல்கிறேன்... செக்ஸ் பற்றி தெரிந்து கொண்ட பின், சும்மா இருக்கிற விஷயமும் அல்ல; மறந்து விடுகிற விஷயமும் இல்லை. ஏன் தெரியுமா? பால் உணர்வுகள் என்பது, மனிதர்களுக்குள் பிறப்பிலேயே இயல்பாய் அமைந்துவிட்ட ஒரு விஷயம். அதைத் தவிர்ப்பது, அத்தனை எளிதான காரியம் அல்ல.''
""இது, எல்லாருக்கும் தெரிந்ததுதான். அந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிந்த ஒரே காரணத்தால்தான், மனிதர்கள் விலங்குகளில் இருந்து மாறுபட்டு நின்றனர்.''
""மறுக்கவில்லை நரேன்... ஆனால், எல்லாராலுமே கட்டுப்படுத்தி விடுகிற விஷயமும் அல்ல செக்ஸ். இந்த விஷயத்தில் கட்டுப்பாடாக வாழ்வதாகச் சொல்லி, தங்களையும், பிறரையும் ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிற ஹிப்போகிராட்ஸ் பேர்வழிகள்தாம் இன்று அதிகம்.''
ஆண்டர்சன், தன்னையும், கவிதாவையும் மறைமுகமாக குற்றம் சாட்டுவதைப் போல் நரேனுக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது.
""மிஸ்டர் ஆண்டர்சன்... செக்ஸ் பற்றி நீங்கள் அளவுக்கு அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏன்... உங்கள் முழுநேர சிந்தனையுமே அது பற்றியதாகவே இருக்கிறது. அது, உங்களை ஆராய்ச்சியாளர் ஆக்காமல், மனநோயாளி ஆக்கிவிடும் அபாயம் இருக்கிறது.''
இப்போது, குறுக்கே புகுந்து பேசினாள் கவிதா...
""நரேன் சொல்வது முற்றிலும் சரி. இவர் மனநோயாளிதான். அதன் காரணமாகவே இந்த விஷயத்தில் சொந்த மனைவியையே ஆராய்ச்சிப் பொருளாக்கி அவதிக்குள்ளாக்கியவர்.''
""அவதி என்று நீ எதைச் சொல்கிறாய் கவிதா? உனக்கு, ஆண் துணை இல்லாமல் போனதையா... உன்னுடைய குற்றச்சாட்டு அதுவானால், எனக்கு சந்தோஷமே...''
""இதிலென்ன சந்தோஷம்?''
""என் ஆராய்ச்சியே அதுதானே! ஆணைப் பற்றி, ஒரு பெண் எப்படியெல்லாம் உணர்கிறாள் என்பதுதானே என் ஆராய்ச்சி. அவனது தேவையை, அவள் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறாள், அதை சமாளிக்க என்னென்ன மாற்றங்களுக்கு அவள் தன்னை உட்படுத்திக் கொள்கிறாள் என்பதே என் தேடல்.''
""நீங்கள் செய்ய முயற்சித்தது ஆய்வு அல்ல. ஒரு கலாசார சீரழிவுக்கும், அதன் காரணமான சமூகக் குற்றங்களுக்குமாக, ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் நிகழ்த்த பார்த்த விபரீத விளையாட்டு. உங்கள் முகத்தில் விழிப்பதற்கே எனக்கு அருவருப்பாக இருக்கிறது.''
ஒருவித வெறுப்போடும், கசப்போடும் வார்த்தைகளை உதிர்த்தாள் கவிதா.
""உ<ன் குற்றச்சாட்டுக்காக நான் வருத்தப்படவில்லை. அமைந்தவன் சரியில்லை என்ற தவறான எண்ணத்தில்தான், ஒவ்வொரு பெண்ணும் அவளது வாழ்வில் அடுத்த ஆணைப்பற்றி யோசிக்கத் துவங்குகிறாள். பெரும்பாலும், ஏதோ ஒரு காரணத்தின் பெயரால், நட்பு என்றும், நண்பர்கள் என்றும் இது ஆரம்பமாகிறது... அதன் பின், தன்னால் மறைக்கவோ, மறுக்கவோ முடியாத சூழ்நிலையில், அதன் உண்மையான சுயரூபம் வெளிப்பட்டு விடுகிறது.''
மதுரிமா யோசித்து பார்த்தாள்... "இதோ இவன் சொல்கிற மாதிரி, இந்த கவிதா இவனோடு விவாகரத்து பெற்றுவிட்ட சூழ்நிலையில், இவளுக்குள் எழுந்த இன்னொரு ஆண் நரேனா? சரி... அது, அவளது சூழ்நிலை அல்லது வேறு ஏதோ ஒன்று... இதில், என் கணவன் நரேனின் பங்கு என்ன?'
மனோவியல் ஆய்வாளனான ஆண்டர்சன், மதுரிமாவின் சிந்தனையைப் புரிந்து கொண்டவன் போல் பேசினான்...
""மேடம்.... இதில் நரேனின் பங்கு என்ன என்பது தானே உங்கள் யோசனை?''
அவன் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை மதுரிமா.
""<உங்களைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே, நரேனுக்கு கவிதாவைத் தெரியும்.''
""அது மதுரிமாவிற்கு தெரியும்; நானே மதுவிடம் சொல்லி இருக்கிறேன்.''
""சொல்லி இருக்கலாம்; நான் மறுக்கவில்லை. ஆனால், நீங்களும், கவிதாவும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்று சொன்னதும், உங்கள் மனைவியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது?''
""எதைப் பற்றி?''
""உங்கள் மனைவி, கவிதாவுடனான உங்கள் நட்பை, எப்படி எடுத்துக் கொண்டார் என்று கேட்கிறேன்.''
""மது உங்களைப் போன்ற ஆள் இல்லை; அவள், அதை மிகவும் கேஷுவலாகவே எடுத்துக் கொண்டாள்.''
""என்ன மேடம்... உங்கள் கணவர் உங்களை மணப்பதற்கு முன், இன்னொரு பெண்ணிடம் நட்பாக இருப்பதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டதாக சொல்கிறார். இவர்கள் நட்பைப் பற்றி உங்களுக்குள் வேறு எந்த உணர்வுமே தோன்றவில்லையா?''
யோசித்துப் பார்த்தாள் மதுரிமா ...
"என் கணவனோடு இத்தனை நெருக்கமாகப் பேசிப் பழகும் இவள் யார் என்ற சிந்தனைதானே என்னுள் எழுந்தது. திருமணமான புதிதில் மற்ற எல்லா பெண்களைப் போலவும், நானும் இவனை நம்பி என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு விட்டேனோ...'
""என்ன மேடம் யோசிக்கிறீர்கள்? நிச்சயம் இவர்கள் நட்பை பற்றி உங்களுக்குள் சந்தேகங்கள் எழுந்திருக்க வேண்டும். அமெரிக்கப் பெண்ணாக இருந்திருந்தால், இந்த சந்தேகத்தை சிரித்துக் கொண்டே வெளிப்படையாகக் கேட்டு விட்டிருப்பாள். ஆனால், அப்படி எண்ணுவதே தவறு என நினைக்கும் ஒரு பண்பாடு உங்களுடையது.''
""நிறுத்துங்கள்...இதற்கு மேலும் நீங்கள் பேசிக் கொண்டிருக்க நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்; நீங்கள் போகலாம். உங்கள் பேச்சு, என் பொறுமையை ரொம்பவும் சோதிக்கிறது,'' என்றான் நரேன்.
""உங்களுக்குள் கவிதா இருக்கிறாள்; கவிதாவிற்குள் நீங்கள் இருக்கிறீர்கள்... இதை சாமர்த்தியமாக மறைத்து, நீங்களும், கவிதாவும் என்னையும், உங்கள் மனைவியையும் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். உறவுகளில் பிரிவுகள் நேரும் போது, அதன் பாதிப்பு நிச்சயம் வேறு ஒன்றை பற்றி யோசிக்க வைக்கும் என்பது, உலகம் ஒப்புக் கொண்ட உண்மை நரேன்.''
""நானும், மதுவும் ஒன்றாகத்தானே இருக்கிறோம். நான் எதற்காக கவிதாவைப் பற்றி நினைக்க வேண்டும். இப்போது, நீங்கள்தான் எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி, எங்களைப் பிரிக்கப் பார்க்கிறீர்கள்.''
""பிரிக்கப் பார்ப்பது நான் அல்ல; கவிதா தான். ஒன்றாக இருப்பதைப் பிரிக்கும் வல்லமை படைத்தவள்தான் பெண். கவிதாவிடம் இருக்கும் பெண்மை, முதலில் உங்களை யோசிக்க வைத்தது. அது, முழுமை பெறுவதற்கு முன்பாக, நீங்கள் மதுரிமாவை மணந்து கொண்டீர்கள். மதுரிமாவை, நீங்கள் பிரியும் பட்சத்தில், கவிதா அவளைப் பற்றி உங்களை நினைக்க வைத்து விடுவாள்.''
ஆண்டர்சன் சொன்னதில், அவமானப்படுத்தப் பட்டதைப் போல உணர்ந்தாள் மதுரிமா. கவிதாவின் பெண்மையுடன், அவளை ஒப்பிட்டு, நரேனை ஈர்க்கும் சக்தி கவிதாவிடம் இருப்பதைப் போல் பேசியதில், உள்ளுற லேசான கோபமும் எழுந்தது. இதையே ஒரு சவாலாக ஏற்று, கவிதாவை வீழ்த்திக் காட்ட வேண்டும் என்ற பெண்களுக்கே உரிய பொறாமையும் மெல்ல எழுந்தது.
"நரேன் என்னதான் செய்கிறான் என்று கொஞ்ச நாளைக்கு நரேனைப் பிரிந்து வாழ்ந்து பார்த்தால் என்ன? என் கணவனை என்னிடமிருந்து அபகரிக்கத் துடிக்கும் இந்த கவிதாவின் திமிரை அடக்கி, வீழ்த்திக் காட்ட வேண்டும்...' என்று முடிவு செய்தாள் மதுரிமா.
""நரேன்... உங்களைப் பற்றிய ஒரு உண்மையை நான் தெரிந்து கொள்ள வேண்டும்,'' என்றாள் மதுரிமா.
""மது... இதுவரை நீ என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது எல்லாமே உண்மைதான்.''
""நான் சொல்வது உங்களுக்குள் இருக்கும் இதோ... இந்த கவிதாவைப் பற்றிய உண்மையை... அதற்காக, கவிதாவின் கணவர் சொன்ன மாதிரி, நானும், நீங்களும் பிரிந்து வாழ்ந்து பார்க்க ஆசைப்படுகிறேன்.''
""மது... என்ன சொல்கிறாய் நீ? புரிந்து தான் பேசுகிறாயா?''
நரேன் ஒருவித பதற்றத்துடன் கேட்க, அதுவரை அவர்கள் பேசுவதை உள் அறையிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த மதுரிமாவின் தாய், வேகமாக ஹாலுக்கு வந்தாள்...
""மது... நீ ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு எவளோ ஒருத்தியையும், அவளது குழந்தையையும் அழைத்து வந்து, குடித்தனம் நடத்தும் இவரைப் பிரிந்து வாழ்ந்து தெரிந்து கொள்வதைக் காட்டிலும், ஒரேடியாக விலகிப் போய், விவாகரத்து செய்து விடுவதே நல்லது,'' என்றாள்.
கணவனை விவாகரத்து செய்யும்படி, தாயே மகளிடம் யோசனை சொல்லும் அந்த வித்தியாசமான சூழ்நிலையில், நரேன் உடைந்து போய் நிற்க, அப்படி ஒரு யோசனையை சற்றும் எதிர்ப்பார்க்காத மதுரிமா, விக்கித்து நின்றாள்.
— தொடரும்.
தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ நடராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh - coimbatore,இந்தியா
06-ஜூன்-201113:19:47 IST Report Abuse
rajesh இது போன்ற குடும்பங்களில் பிளவுகளை ஏற்படுத்தும் விதமான கதைகளை எழுதுவது தற்போதைய டிவி சீரியல்கள் போன்று தரம் தாழ்ந்த ஒரு முயற்சி என்பது கதாசிரியருக்கு சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X