ஆணென்ன? பெண்ணென்ன?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
00:00

""வீட்டுக்குள்ள கால வெச்சா, வெட்டிடுவேன்!'' - எழுபது வயதுடைய நெடிய உருவம் கொண்ட காதர் மஸ்தான் இரைந்தார்.
""இது என் மகள் வீடு... நான் வர்றத எந்த நாயும் தடுக்க முடியாது...'' - ஐம்பது வயது, இரட்டை நாடி கொண்ட ரைஹானா, பதிலுக்கு இரைந்தாள்.
அகராதியில் தேட முடியாத அளவுக்கு, வசவு வார்த்தைகளை பயன்படுத்தி, இருவரும் தூற்றிக் கொண்டனர். சப்தம் கேட்டு, மக்கள் கூடினர்; அந்தத் தெருவே இரண்டானது. கண்ணியமான காதர் மஸ்தான் வீடு, நாறிப் போனது.
"என்னாச்சு இந்த ரைஹானாவுக்கு?'
"வயசான காலத்தில், இந்தக் காதர் மஸ்தான், ஏன் இப்படி மல்லுக்கு நிற்கிறார்?'
- தெருச் சண்டையை பார்க்க வந்த அத்தனை பேர் உள்ளத்திலும், இதே கேள்வி தான்.
ரைஹானா பிறந்து, வளர்ந்ததெல்லாம் நெல்லையில் தான். சேலம் ஆத்தூரில், அவளைக் கட்டிக் கொடுத்தனர். கணவர் அன்வருக்கு, மார்க்கட்டிங் வேலை; ஊர் ஊராய் அலைச்சல். இருப்பினும், ரைஹானாவை நல்லபடியாக பார்த்துக் கொண்டார். முதல் குழந்தை பெண்; அப்போது, கணவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது.
அன்வர் வேலை பார்த்த கம்பெனியின் தலைமையகம், சென்னையில் இருந்தது. அங்கேயே, அன்வருக்கு வேலை ஏற்பாடானது. குடும்பத்தோடு சென்னைக்கு போயினர்.
அடுத்த நான்கு ஆண்டுக்குள், இரண்டாவதாய் ஒரு பெண், மூன்றாவதாய் ஒரு ஆண் குழந்தை பிறந்தது; ரைஹானா ரொம்பவும் மகிழ்ச்சியடைந்தாள்; அந்த மகிழ்ச்சி, நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.
பக்கத்து வீட்டு பெண், குழாயடியில் அந்தச் செய்தியைச் சொன்னாள்...
"திருச்சியில் உங்க சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா?'
"இல்லையே... ஏன்?'
"உங்க வீட்டுக்காரரோட ஆபீஸ் அங்க இருக்குதா?'
"இல்லியே... ஏன்?'
"உங்க வீட்டுக்காரர், அடிக்கடி திருச்சியில் தென்படுறதா, என்னோட மதினி சொன்னாங்க...'
"அவங்களுக்கு எப்படித் தெரியும்?'
"மதினியோட புருஷன், திருச்சி பஸ் ஸ்டாண்டுல, புத்தகக் கடை வச்சிருக்கார்... அவர் அடிக்கடி பார்ப்பாராம்!'
"அப்படியா?' - அப்பாவியாய் கேட்ட ரைஹானா, அப்படியே கணவனிடம் கொட்டினாள்.
"வேற யாரையாவது பார்த்திருப்பாங்க... விடு...' என, மறுத்தான் அன்வர்.
கணவன் மேலுள்ள நம்பிக்கையில், விட்டு விட்டாள். நாளாக ஆக, நிறைய பேர், அன்வரை திருச்சியில் பார்த்ததாக கூறினர்.
அன்வர், திருச்சியில் ஒரு திருமணம் செய்திருப்பதாக, ஆதாரப்பூர்வமான செய்தி கிடைத்தது. ரைஹானாவின் அண்ணன் பார்த்துட்டு வந்து சொன்னார்; அதிர்ந்து போனாள் ரைஹானா.
"இதெல்லாம் உண்மையா?' என, அன்வரின் சட்டையைப் பிடித்துக் கேட்டாள்.
"உண்மைதான்... சட்டையை விடு!' என்றான் அன்வர்.
"எனக்குத் துரோகம் செய்துட்டீங்களே...'
"துரோகமெல்லாம் செய்யல... நம்ம மார்க்கத்துல, நாலு கல்யாணம் பண்ணலாம் தெரியுமா? நான் வெறும், ரெண்டு தானே முடிச்சிருக்கேன்!'
"நான் பிடிக்காம போயிட்டேனா?' - கண் கலங்கினாள்.
"இங்கே பாரு... உனக்கோ, உன் பிள்ளைகளுக்கோ, ஒரு குறையும் வைக்க மாட்டேன்; அதுக்கு நான் கேரன்ட்டி!'
அழுது கொண்டே இருந்தாள் ரைஹானா. அதைப் பொருட்படுத்தாமல், அடுத்த வேலையை கவனிக்கப் போய் விட்டான் அன்வர்.
இருவருக்கும் இடையில், விரிசல் விழ ஆரம்பித்தது.
மூத்தவளுக்கு, நெல்லையிலேயே மாப்பிள்ளை அமைந்தது; சொந்தம் தான். சந்தோஷமாய் கட்டிக் கொடுத்தாள் ரைஹானா. அவர்கள், அந்தப் பெண்ணை மகள் போல பார்த்துக் கொண்டனர். ரைஹானாவை, தம் சொந்தத் தங்கையைப் போலவே சம்பந்தி பார்த்துக் கொண்டார்.
அன்வர் அடிக்கடி வெளியூர் செல்வதால், ரைஹானாவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும்படி ஆனது. பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பது, சீர் செனத்தி செய்வது என, எல்லாமே அவள் பொறுப்பில் விழுந்தது.
மூத்த மகள் கர்ப்பமானாள். அவளை சென்னைக்கு அழைத்து வந்து, தலைப் பிரசவம் பார்த்து, தாயையும், பிள்ளையையும், நல்லபடியாக மாப்பிள்ளை வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தாள்.
ரைஹானாவின் அடுத்த கவனம், இரண்டாவது மகள் மீதும், மகன் மீதும் திரும்பியது. நல்ல இடங்களில் வரன் அமைய, இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைத்தாள்.
ரைஹானாவை விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக விலகினான் அன்வர். மகனுக்கு ஒரு பெட்டிக் கடை வைத்துக் கொடுத்து, "அம்மாவைக் கவனிக்க வேண்டியது உன் பொறுப்பு...' எனச் சொல்லி விட்டான்; திருச்சியில் குடும்பத்தோடு ஐக்கியமானான். வேறு வழி தெரியவில்லை ரைஹானாவுக்கு. அவள், அன்வரை மறந்து, மகனோடும், மகள் குடும்பத்தோடும் ஐக்கியமானாள்.
நாலைந்து வருடங்கள் ஓடியிருக்கும், ரைஹானாவுக்கும், மருமகளுக்கும் சண்டை வர ஆரம்பித்தது. சண்டை என்னமோ சாதாரணமாகத்தான் துவங்கியது; போகப் போக, "நீ என் மூஞ்சியிலேயே முழிக்காதே... நான் செத்தா என்னைப் பார்க்க வராதே...' எனும் அளவுக்கு வ<லுத்துப் போனது.
கவலையாய் அமர்ந்திருந்தாள் ரைஹானா. பழைய நினைவு ஒன்று பளிச்சிட்டது. அப்போது, மூத்த மகளுக்கு, இரண்டரை வயது இருக்கும். அவளுக்கு அன்று கடுமையான காய்ச்சல், பக்கத்து டவுனில் இருக்கும், குழந்தை மருத்துவரிடம் காட்டி வர கிளம்பினாள். பஸ்சில் சரியான கூட்டம்; குழந்தையை வைத்துக் கொண்டு நிற்க முடியவில்லை. ஒரு பெரியவர் எழுந்து, இடம் தந்தார்; நன்றி சொல்லி அமர்ந்தாள்.
அந்தப் பெரியவர், "ஏம்மா... குழந்தை ஆணா, பொண்ணா?' எனக் கேட்டார்.
"பொண்ணுதான்!' என்றாள்.
"நல்லது... பொம்பளப் புள்ள தான், கடைசியில கஞ்சி ஊத்தும்!'
"அன்னிக்கு அந்தப் பெரியவர் சொன்னது போலத்தான் எனக்கு நடக்குமோ?' - மவுனமாய் அழுதாள்.
"எந்த மகளிடம் செல்லலாம்?' - யோசிக்கத் துவங்கினாள் ரைஹானா.
இளையவளின் கணவன், அவ்வளவு விசாலமில்லை; அங்கே வேண்டாம். மூத்தவளுக்கு, எப்போதுமே நம் மீது பாசம் அதிகம்; மருமகனும் சொக்கத் தங்கம். போதாதற்கு, சம்பந்தியும், சொந்தத் தங்கை போலவே பார்த்துக் கொள்கிறார். எனவே, மூத்தவளிடம் போவது தான் சரி எனத் தீர்மானித்தாள்.
ஓய்வு வேளையில், மகனை அழைத்தாள்.
"இங்கே எனக்கும், உன் மனைவிக்கும் சரியா வரமாட்டேங்குது. எங்க ரெண்டு பேருக்கும் மத்தியில, நீ ரொம்ப கஷ்டப்படுற... அதனால, நான் மூத்த மகள் வீட்டுக்கே போயிடுறேன்...' என்றாள்.
"இல்லம்மா... போகப் போகப் சரியாயிடும்!'
"இல்லடா... இது சரியாகுற மாதிரி தெரியல!'
"உன்னை விட்டுட்டு எப்படிம்மா தனியா இருப்பேன்?'
"இருக்கணும்... உன்னால முடியும்... நீ சந்தோஷமா இருக்கிறத கேள்விப்பட்டா, அதுவே எனக்குப் போதும்!'
"ம்... மா!'
"என்னடா?'
"அக்கா வீட்டுக்கு வேண்டாமே!'
"ஏன்? அங்க என்ன குறைச்சல். என்னை நல்லா பாத்துக்கிடுவாங்க!'
"நல்லா பாத்துப்பாங்க... ஆனா, சம்பந்தம் பண்ணின வீட்டில் நீ போய் இருக்கிறது, சரிபட்டு வராது!'
"ஏன் சரிப்பட்டு வராது? அதெல்லாம் சரியா வரும். நீ போய், ஊருக்கு போக டிக்கெட் எடு!'
அதற்கு மேல் மறுக்க முடியாமல், டிக்கெட் எடுத்தும் தந்தான் ஹுசைன்.
காலை, 7:30 மணி அளவில், அனந்தபுரியில், நெல்லை வந்து சேர்ந்தாள் ரைஹானா. ஒரு ஆட்டோ பிடித்து, மகள் வீட்டுக்கு வந்தாள். கூடவே, இரண்டு பெரிய சூட்கேஸ்களும் வந்தன. மகள் வீட்டில், ரைஹானாவுக்கு பலத்த வரவேற்பு இருந்தது. நிரந்தரமாக ரைஹானா வந்திருக்கிறாள் என்பது, மகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
வெளியில் சென்று இருந்த காதர் மஸ்தான், வீட்டிற்குத் திரும்பினார். ரைஹானா வந்திருப்பது பற்றி வீட்டினர் சொல்ல, உள்ளறையில் உரையாடிக் கொண்டிருந்த ரைஹானாவை, "வாம்மா... ரைஹானா!' என, வாய் நிரம்ப அழைத்தார். தனக்குக் கிடைத்த வரவேற்பில், மகிழ்ச்சியடைந்தாள் ரைஹானா; அந்த மகிழ்ச்சி, கொ<ஞ்ச நேரமே நீடித்தது.
"இங்க வாம்மா... ரைஹானா!' - அழைத்தார் காதர் மஸ்தான்.
"என்னண்ணே?' - கேட்டுக் கொண்டே, பக்கத்தில் அமர்ந்தாள் ரைஹானா.
"எப்ப வந்த?'
"இப்பத்தாண்ணே... அரை மணி நேரம் ஆச்சு!'
"அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?'
"ஆமாண்ணே!'
"என்ன திடீர்ன்னு?'
"எனக்கும், மருமகளுக்கும் பிடிக்கலைண்ணே... கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்ன்னு, ஒரே அமர்க்களம் பண்றா. எங்க ரெண்டு பேருக்கும் மத்தியில மாட்டிக்கிட்டு, மகன் முழிக்கிறான்; அதான், பேசாம இங்க வந்துட்டேன்!'
"இங்கே வந்திட்டேன்னா, என்ன அர்ந்தம்?'
"இங்கேயே இருந்திடலாம்ன்னு...'
"அது தப்பாச்சே!'
"ஏண்ணே?'
"அதுக்குப் பல காரணம் இருக்கு... முதல்ல, நீ இங்க இருக்கிறதப் பத்தி, குடும்பத் தலைவன்ங்கிற முறையில், நான் தான் முடிவெடுக்கணும். இரண்டாவது, இது கூட்டுக் குடும்பம்; என்னோட சின்ன மகனும் இங்க இருக்கான்; அவன், இதை விரும்பணும். மூணாவது, சம்பந்தி வீட்டுக்கு விருந்துக்கு வரலாம்; ஒரேயடியாய் தங்க வரக் கூடாது. நாலாவது, பெத்தவங்கள, ஆம்புளப் புள்ளைங்க தான் பார்க்கணும்; பொம்பளப் புள்ளைங்கள தேடிக்கிட்டு வரக் கூடாது! அதனால, ஒரு வாரம் இருந்திட்டு, கிளம்புற வழியைப் பாரு...'
கோபமாய்ச் சொல்லிவிட்டு, எழுந்து சென்றார் காதர் மஸ்தான்.
ரைஹானா தலையில், இடி விழுந்தது போல் இருந்தாள்.
ஒரு வாரமானது... ரைஹானா கிளம்புவது போல் தெரியவில்லை; நேரடியாகவே கேட்டார் காதர் மஸ்தான்.
"ஊருக்குக் கிளம்பலயா ரைஹானா?'
"இல்லே... நான் இங்க தான் இருக்கப் போறேன்...'
"ஏன் இப்படி அடம் பிடிக்கிறே?'
"என் மகள் வீட்டில இருக்கிறது அடமா?'
"ஆமா... மரியாதையா கிளம்பு!'
"முடியாது... இது என் மகள் வீடு!'
"இது என் வீடு... அப்புறம் தான் உன் மகள் வீடு!'
"அதெல்லாமில்லை... நான் இங்க தான் இருப்பேன்!'
கதையின் ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சி அப்போதுதான் அரங்கேறியது.
அவள் உள்ளே வர எத்தனித்தாள். அப்போது தான், தெருவே நாறிப் போகும் அளவுக்கு, ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டனர்.
நிலைமையை சட்டென உணர்ந்த ரைஹானாவின் மகள், காதர் மஸ்தானிடம் வந்தாள்...
""கோபப்படாதீங்க மாமா... இனி, அம்மா இங்கே இருக்க மாட்டாங்க... அதுக்கு நான் பொறுப்பு,'' எனச் சொன்னவள், அடுத்த தெருவில் இருக்கும் சொந்தக்காரரின் வீட்டில் கொண்டு போய் விட்டாள்.
""அம்மா... ரெண்டு நாளைக்கு இங்க இருந்துக்க... அப்புறம் ஏதாவது செய்யலாம்.''
"அம்மாவை என்ன செய்யலாம்...' என யோசித்தவள் நினைவில், அவளது ஆசிரியை வந்தார். அவர், அங்குள்ள மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியை. அவரிடம் தான், மூன்று ஆண்டுகள், மார்க்க கல்வி பயின்றாள்; அவரிடம், யோசனை கேட்கத் தீர்மானித்தாள்.
""அஸ்ஸலாமு அலைக்கும்!''
""வஅலைக்குமுஸ்ஸலாம்!''
""எப்படியிருக்கீங்க?''
""நல்லாயிருக்கேன்... என்ன இந்தப் பக்கம்?''
""ஒரு யோசனை கேட்கத்தான்...''
""என்ன?''
""என்னோட அம்மா, சென்னையில இருந்தாங்க... மருமகளோடு7 ஏற்பட்ட சண்டையில, நிரந்தரமா இங்கேயே வந்துட்டாங்க... ஆனா, என்னோட வீட்டுல யாரும் இதுக்குச் சம்மதிக்கல! பெத்தவங்கள, ஆம்புள பிள்ளைங்க தான் பார்த்துக்கணுமா? பொம்பள புள்ளைங்க பார்த்துக்கக் கூடாதா?''
""நம்ப மார்க்கத்துல அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. குழந்தைங்க மத்தியில, ஆண், பெண் குழந்தைன்னு பாகுபாடு காட்டக் கூடாது. அதே மாதிரி, இருவருக்குமே, பெத்தவங்கள பாத்துக்கிற பொறுப்பு இருக்குது! நம்ம நபி காலத்தில், ஒரு பெண்மணி, நபியிடத்தில, "என்னுடைய முஸ்லிம் அல்லாத தாய், என்னிடம் வந்தா, என்ன செய்ய?'ன்னு கேட்டாங்க... அதுக்கு நபி, "கண்ணியம் செய்'ன்னு சொன்னாங்க! அதனால, உன்னோட அம்மாவை தாராளமா நீ பார்த்துக்கலாம்!''
நிம்மதியுடன், நன்றி சொல்லித் திரும்பினாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு...
இரவு உணவு முடித்துவிட்டு, அனைவரும் முற்றத்தில் அமர்ந்திருந்தனர். ரைஹானாவின் மகள் எல்லாருக்கும் கேட்கும் விதமாய்ப் பேசினாள்...
""மாமா... இங்க பாருங்க... என்னோட அம்மாவால, சென்னையில இருக்க முடியல. பெத்த மகள், என்கிட்ட வந்திருக்காங்க. என்னோட வச்சிக்க நீங்க அனுமதிக்கல. அதுக்கு நீங்க சொல்ற காரணம், நியாயமாகக் கூட இருக்கலாம்... ஆனா... நம்ம மார்க்கம், பெத்தவங்கள கவனிக்கிற பொறுப்பை, ஆண் குழந்தைகளுக்கு மட்டும் தரல; பெண் குழந்தைக்கும் உண்டுன்னு சொல்லுது. பெத்தவங்கள பார்த்துக்கிற பொறுப்பு, எல்லாக் குழந்தைக்கும் தான்னு, எங்க ஆசிரியை சொன்னாங்க. அதனால, அடுத்த தெருவுல இருக்கிற ஒரு வீட்டை, அம்மாவுக்காக வாடகைக்கு பிடிச்சிருக்கேன். அம்மா அங்க இருந்துக்குவாங்க. தினமும், இரவு மட்டும், துணைக்கு நான் போகப் போறேன். இங்கே என்னோட கணவருக்கும், மாமனார் உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கும் தேவையானதை செஞ்சிட்டுத் தான் போவேன். என் கணவரோட அனுமதி யோடத்தான் இதைச் செய்யறேன்; யாரும் இதில் வருத்தப் படாதீங்க,'' என்று சொல்லி முடித்தாள்.
காதர் மஸ்தான் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின், ஒரு நொடி யோசித்தார் காதர் மஸ்தான்.
"சாலிஹா துணிச்சலாய் முடிவெடுத்து விட்டாள். தனியாக வீடு வாடகைக்கு பிடித்து, அம்மாவை குடியமர்த்தினாள் என்றால், செலவு நம் மகனுக்குத்தான்... கை நழுவி போன பணத்தை, தானமாய் அறிவிக்கிற மாதிரி ஒரு செயல் செய்வோம். நாம் இழக்க இருந்த மரியாதையை மீட்டெடுப்போம். இதோ எடுத்து விடுவோம் ஒரு டயலாக்கை...'
""உன் தாயாரை உன்னோடு வச்சுக்க விரும்புறியா, இல்லையான்னு பார்க்க ஒரு நாடகம் நடத்தினேன்; நீ ஜெயிச்சிட்ட... என்ன இருந்தாலும், உங்கம்மா எனக்கு தங்கச்சி முறைதானே? உங்கம்மா, நம்ம வீட்டோடயே இருக்கட்டும்!''
சைத்தான் போல சிரித்தார் காதர் மஸ்தான்.
***

எம்.ஏ. ஷாஹுல் ஹமீது ஜலாலீ

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிஜேபி - karaikudi,இந்தியா
09-ஜூன்-201119:26:08 IST Report Abuse
பிஜேபி மொக்கையா இருக்கு, மதம் பற்றி அதிகம் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
பிரியா - cbe,இந்தியா
06-ஜூன்-201113:58:03 IST Report Abuse
பிரியா என் ஹவுஸ் ரியல் ஸ்டோரி.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - Denhelder,நெதர்லாந்து
06-ஜூன்-201101:11:40 IST Report Abuse
GOWSALYA ரவி சொன்னதுபோல, இதில் சமயம் எதற்கு? ஆனால், எல்லோருக்கும் இது உண்மையே.பெற்ற தாயைப் பார்க்க " ஆணென்ன பெண்ணென்ன"?..எல்லோரும் அவள் கருவில் வந்தவர்கள் தானே?....நல்ல கதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X