வி.வி.ஐ.பி. அனுபவங்கள் (3)- ரஜத் | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
வி.வி.ஐ.பி. அனுபவங்கள் (3)- ரஜத்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
00:00

வர்ம சிகிச்சை நிபுணர், எஸ்.ராஜாமணி பேட்டி!

"எனக்காகத்தான், டாக்டர் ராஜாமணி நியூயார்க் நகரத்திற்கு வந்திருக்கிறார். அவர், நிரந்தரமாக இங்கே தங்க வாய்ப்பே கிடையாது. என்னோடு, அவரும் சென்னைக்கு திரும்புவார்...' என, எம்.ஜி.ஆர்., திட்டவட்டமாக பதில் கூறினார்.
உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையின் மூட்டு மாற்று சிகிச்சை, மூட்டு வலி சிகிச்சை செய்து வரும், நியூயார்க் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பென்ஸ்வி, என்னை, அங்கேயே தங்கிவிட கேட்ட போது, அவருக்கு, எம்.ஜி.ஆர்., அளித்த பதில் தான் மேலே சொன்னது. இதை, நம் வர்மக் கலைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றே நான் கருதினேன்.
நியூயார்க் நகரத்தில் என்னை நிரந்தரமாக தங்க அழைப்பு விடுத்ததற்கும், வர்மக்கலை மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதை பாராட்டியும், டாக்டர் செய்மோர் பென்ஸ்வி, மருத்துவமனை சார்பில் எனக்கு ஒரு பாராட்டு கடிதமும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.
நியூயார்க் நகரில், வெஸ்ட் பெர்ரி ஓட்டலில் தங்கியிருந்த போது, மதிய நேரத்தில், எம்.ஜி.ஆர்., ஓய்வு எடுப்பார். ஓரு நாள், அவசர தேவை எதுவும் இருக்காது என நினைத்து, சக டாக்டர்கள், வாக்கிங், ஷாப்பிங் சென்றனர். அருகே ஒரு பார்க் இருந்தது. நான், என் அறையில், துணிகளை துவைத்துக் கொண்டிருந்தேன். யாரோ கதவை தட்டும் சப்தம் கேட்டது. வாக்கிங் சென்றிருந்த டாக்டர்கள் தான் திரும்பி வந்து விட்டனரோ என நினைத்து, கட்டியிருந்த டவலுடன் கதவை திறந்தேன்; வாசலில் எம்.ஜி.ஆர்., எனக்கு ரொம்ப ஆச்சரியம்.
"டாக்டர்கள் எல்லாம் எங்கே?' என்றார்.
"இப்போது தான் வாக்கிங் சென்றிருக்கின்றனர்...' என்றேன்.
"நீங்க வாக்கிங் போகலையா?' என்றார்.
"இல்லீங்க... ஜட்டி, பனியன் உட்பட ஒவ்வொரு துணிக்கும், 18 டாலர் லாண்டரி சார்ஜ் பண்றாங்க. எதுக்கு அவ்வளவு பணம் வேஸ்ட் ஆக்கணும்ன்னு, என் துணிகளை, நானே துவைத்துக் கொள்கிறேன்...' என்றேன்.
"டாலர்கள் கணக்கா எனக்கு செலவு மிச்சம் பண்றீங்க டாக்டர்...' எனச் சொல்லிச் சிரித்தார்.
"டிவி' போடுங்க என்றார். வேஷ்டி, சட்டையில் வந்திருந்த அவரை, சோபாவில் உட்கார வைத்து, "டிவி'யை ஆன் செய்தேன். அவர் அனுமதியோடு, மூலிகை ஆயில் தடவி, அவர் கால்களுக்கு மசாஜ் செய்தேன். மெல்ல, மெல்ல கண் அயர்ந்தார். சோபாவில் சாய்ந்தபடியே, ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். தூங்கி எழுந்ததும், அவரது அறைக்கு அழைத்துச் சென்றேன். "உங்க வேலையை நீங்களே செய்யறீங்க... இந்த கொள்கையை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்...' என்றார் எம்.ஜி.ஆர்.,
வர்ம சிகிச்சை முறையில் நான் எம்.ஜி.ஆருக்கு நேரடியாக சிகிச்சை அளித்ததில், மற்றொரு முக்கியமான திருப்பம் நடந்தது. தனக்கு கிடைத்த சிகிச்சையின் காரணமாக, வர்ம சிகிச்சையில் முழுவதும் திருப்தி அடைந்த எம்.ஜி.ஆர்., எல்லா அரசு மருத்துவமனைகளிலும், பஞ்சாயத்து யூனியன், ஆரம்ப சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் என்று எல்லா இடங்களிலும், ஆங்கில மருத்துவருக்கு இணையாக, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் டாக்டரோடு, சித்தா முறையில் வைத்தியம் அளிக்கும் சித்த வைத்தியரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என, அரசு ஆணை பிறப்பித்தார்.
அதன் பயனாக, எழுநூறுக்கும் அதிகமான சித்த வைத்தியர்களுக்கு, நிரந்தர வேலை கிடைத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு, எல்லா பொதுமருத்துவ மனை களிலும், அவர்கள் விரும்பினால், சித்த வைத்திய முறையில் வைத்தியம் பெற முடிகிறது.
தமிழ்நாடு கனிம நிறுவனத்தில், ஒரு முக்கிய விழாவிற்காக எம்.ஜி.ஆரை அழைத்திருந்தனர். அந்த விழாவுக்கு, எம்.ஜி.ஆருடன், நானும் சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தின் தலைவர் சரவணன். (சில ஆண்டுகள் முன், அசோக் நகரில் அவரும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டு இறந்தனர்!) ஐந்தாறு பேர் தூக்கி வந்து, ஆளுயர பெரிய மாலையை எம்.ஜி.ஆருக்கு அணிவித்தனர். அடுத்த வினாடி, தனக்கு போடப்பட்ட பெரிய மாலையை, நிறுவனத்தின் தலைவர் சரவணனுக்கு அணிவித்தார் எம்.ஜி.ஆர்.,
ஆறு பேர் தூக்கிய மாலையை, எம்.ஜி.ஆர்., தனி ஆளாக தூக்கிப் போட்டதை கண்டு, கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள், கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவருக்கு பழைய சக்தி வந்திருப்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். 25 கிலோவிற்கு மேலே எடையுள்ள பெரிய கிரானைட் ஸ்லாப்பை, தன் இரு கைகளால் அப்படியே தூக்கி, ஆடியன்சுக்கு காண்பித்து, கீழே இறக்கி வைத்தார். மறுபடியும் ஆரவாரம், கைதட்டல். சூப்பர் சக்தி உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.
சென்னை கத்திப்பாரா ஜங்ஷனில், பாரதத்தின் சிற்பி, முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலை திறக்கப்பட்டது. அந்த சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, தன் தாத்தாவின் உருவச் சிலையை திறந்து வைக்க, ராஜிவ், டில்லியிலிருந்து வந்திருந்தார்.
அப்போது நடந்த நிகழ்ச்சி —
தொலைப்பேசி எண் : 044 - 24911111
rajavarma—dr@yahoo.co.in

* நியூயார்க் நகரில், எம்.ஜி.ஆர்., வெளியே போகும் போது, அவரை பல கார்கள் தொடர்ந்து போகும். "அமெரிக்க ஜனாதிபதிக்கே இவ்வளவு கார்கள் போகாதே... இவர் ஏதாவது நாட்டின் அரசரா?' என்று, அமெரிக்க மக்கள் வியந்து போயினர். அமெரிக்கர்களே வியக்கும் அளவு, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இருந்தது.
***
— தொடரும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X