அன்புடன் அந்தரங்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறேன். தேவை அறிந்து, கேட்காமலே அனைத்தையும் பூர்த்தி செய்யும் தந்தை; பாசத்தை கொட்டும் தாய். இப்படி வரங்களை கொடுத்த கடவுளுக்கு, நான் தினமும் நன்றி சொல்கிறேன். இந்த நிலைமை நீடிக்கும் படி வேண்டுகிறேன்.
முதன் முதலாக கல்லூரிக்கு செல்லும் போது, என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. அவளை நான் கண்டேன். என்னை நானே மறந்து, ஐந்து நிமிடத்திற்கு மேல் பார்த்திருப்பேன். அதன்பின், அவளை தினமும் பார்க்கத் துவங்கினேன்; அவளது குணாதி சயத்தை பற்றி விசாரிக்கத் துவங்கினேன். ஒரே வரியில் கூற வேண்டுமென்றால், அவளது பண்புகளுக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும்.
இந்நாள் வரை, நான் ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசியதில்லை.
பள்ளி நாட்களில், தமிழ் ஆசிரியர் அடிக்கடி கூறுவார்...
"காமத்துக்கும், காதலுக்கும் ஒரு நூல் அளவே வித்தியாசம். நீயாக காதலை தேடி சென்றால் அது காமம்; காலம் உனக்கு ஓர் பெண்ணின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் - அது காதல்...' என்பார்; நானும் அப்படித்தான். தேடி செல்லவில்லை; காலம் தந்தது. ஒருவேளை நான் வேறு கல்லூரியில் சேர்ந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என தெரியவில்லை.
இலக்கியங்களில், கண்டதும் காதல் என்று இருப்பதை படித்திருக்கிறேன். கண்டவுடன் வருவது காதல் அல்ல; வயது காரணமாக எதிர் பாலினர் மீது வரும் மோகம் என்பதில் உறுதியாக இருந்தேன். இதை நான், யூ.ஜி., படிக்கும் போது நண்பர்களுக்கு கூறி, அவர்கள் மனதையும் மாற்றி இருக்கிறேன்; ஆனால், இன்று நானே தடுமாறுகிறேன்.
நான் அப்பெண்ணை பார்க்காத நேரத்தில், அப்பெண்ணை பார்க்க கூடாது என்றெல்லாம் முடிவு செய்வேன்; ஆனால், அப்பெண்ணை பார்த்தவுடன், எல்லாம் சுக்கு நூறாக போய்விடும். அப்பெண்ணையே பார்க்க வேண்டும், பேச வேண்டும், அவளுடனே செல்ல வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அவளை பார்த்தவுடன் ஏற்படும் சந்தோஷங்களை கூற இயலாது. குதித்து ஆட, கொண்டாட தோன்றும். அவளை பார்க்காமல் வகுப்புக்கு சென்று விட்டால், எதையோ பறி கொடுத்தது போன்று தோன்றும்.
இரண்டு சூழ்நிலையை கூறுகிறேன்...
என் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது; அவள், அதற்காக சென்று விட்டாள். இது எனக்கு தெரியாது; மதியம் வரை காணவில்லை. அவள் வகுப்பு மாணவர்களிடம் விசாரித்து கூறுமாறு என் நண்பனிடம் கூறினேன். அவன், என்னிடம் விளையாட்டுக்காக, "அவள் வேறு கல்லூரிக்கு போய் விட்டாள்; இனி வர மாட்டாள்...' என கூறினான். ஏன்... எதற்கு என்று தெரியவில்லை. கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது. இதை கவனித்த நண்பன், "விளையாட்டுக்காக சொன்னேன்; அவள் விளையாட சென்றிருக்கிறாள்...' என கூறியவுடன், எனக்கு ஏன் கண்களில் நீர் தேங்கியது. இது முதல் சம்பவம்.
இரண்டாம் சம்பவம்: கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது, ஒரு ஆசிரியைக்கு அதுவே எங்கள் கல்லூரிக்கு வரும் இறுதி நாளாக இருந்தது. அவள் வகுப்புக்கு செல்லும் ஆசிரியை அவர். அவரை பற்றி புகழ்ந்து பாடி, ஒரு பரிசு கொடுத்தனர். மேடையில் பாடும் போது, என்னவள் மேடைக்கு கீழே வீற்றிருந்தாள். அழுகையை அடக்க முடியாமல், அழுது கொண்டிருந்தாள். அதை பார்த்து, எனக்கு என் கண்களிலும் கண்ணீர் வரத்
துவங்கியது. நான் மெல்லிய மனம் படைத்தவன் அல்ல; ஆனால், அவளுக்கு ஏதாவது என்றால், என் மனம் துடிக்கிறது.
இங்கு தான் நான் மிகவும் குழப்பம் அடைகிறேன். இதுதான் காதலா என உறுதியாக எனக்கு தெரியவில்லை; இது, ஒரு ஈர்ப்பு மட்டும் தான் என கூறிவிட்டு செல்லவும் முடியவில்லை.
சரி... இதுதான் காதல் என முடிவு செய்தாலும், எனக்கு அவளிடம் கூற மனம் இல்லை; அது நாகரிகமாக தெரியவில்லை. ஏனெனில், என்னை பொறுத்தவரை, எப்போது ஒரு ஆண்மகன் சம்பாதிக்கிறானோ, அப்போது தான் ஆண்களுக்கு உயிர் வரும் என்று நினைப்பவன். அவள் முன், ஒரு ஜடமாக போய் நிற்க எனக்கு மனம் வரவில்லை.
அவள் எந்த நிலைமையில் வந்து படிக்கிறாள் என்பது தெரியவில்லை. அவள் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கிறாள். அவளது பெற்றோர் அவள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. நான் அவளிடம் என் ஆசையை கூற, சந்தர்ப்ப, சூழ்நிலை, அவளும் சரி என்று சொல்லி விட்டால், அவளது பெற்றோருக்கு, அவள் துரோகம் செய்வதாக ஆகி விடுமே என்று தோன்றுகிறது.
சரி... சம்பாதிக்கும் போது சென்று கூறலாம் என்று நினைத்தால், ஒரு வேளை அவள், தான் முடிவு எடுக்க காலம் வேண்டும் என்று கூறிவிட்டால், என்னால் என் மனதை அவளுக்கு புரிய வைக்க முடியாது.
இதை அனைத்தையும் விட்டு, விட்டு சம்பாதிக்கும் போது, என் பெற்றோரிடம் கூறி, அவள் வீட்டுக்கு சென்று பெண் கேட்க போகலாம் என்றும் தோன்றுகிறது.
ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன்... ஒரு வேளை அவள் என்னை ஏற்கவில்லை என்றால், என் வாழ்நாளில் அவள் முன் செல்ல மாட்டேன்; அவளுக்கு தொந்தரவு தர மாட்டேன்.
அவள் சரி என்று ஏற்றுக் கொண்டாலும், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தால் மட்டுமே அவளை மனைவியாக ஏற்பேன். என் வீட்டில் நிச்சயம் என் ஆசையை ஏற்பர்; அவளது வீட்டிலும் எங்களது ஆசையை ஏற்கும் வரை காத்திருப்பேன். இல்லையென்றால், விலகி சென்றாலும் செல்வேனே தவிர, அவள் பெற்றோரை எதிர்த்து செயல்பட மாட்டேன். குறுகிய காலத்தில், நானே அவள் மீது அவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அவள் பெற்றோர், இருபது வருட அன்பு வைத்திருப்பர். அதனால் தான், இவ்விஷயத்தில் உறுதியாக உள்ளேன்.
— அன்பு மகன்.

அன்புள்ள மகனுக்கு—
"பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்' என, சொல்வது போல, நீ அவளின் மீதான காதலை பிரமாண்டமாய் சொல்கிறாய்; ஆனால், உங்கள் இருவருக்கும் இடையே காதல் இல்லவே இல்லையோ என்ற சந்தேகம் அஸ்திவாரத்தை பலவீனப்படுத்துகிறது.
இத்தனை நாளும் அவளை வெறுமனே பார்த்து வந்திருக்கிறாய். உன்னை போல எத்தனையோ மாணவர்கள், அப்பெண்ணை பார்த்திருக்கக் கூடும். அவுட் ஆப் க்யூரியாசிட்டி, அப்பெண்ணும், "யாரிவன்? நம்மை விழுங்குவது போல் பார்க்கிறான்...' என்ற அர்த்தத்தில், பதிலுக்கு பார்த்திருக்கலாம். எந்த உள்ளர்த்தமும் இல்லாமல், வெறுமனே முறுவலித்திருக்கலாம்.
அப்பெண், உன்னை காதலிக்கிறாள் என்பதற்கு, பலமான ஆதாரமில்லை. நீ படித்து முடித்து, பணியில் கால் ஊன்ற நான்கு ஆண்டுகள் ஆகும் என வைத்துக் கொள். நான்கு ஆண்டுகள் எதன் அடிப்படையில், அவள் உனக்காக காத்திருப்பாள்? உன் பெற்றோர் என்ன மனநிலையில் இருக்கின்றனரோ? அவளின் பெற்றோர் என்ன மனநிலையில் இருக்கின்றனரோ?
உன் பெற்றோர் உனக்காக பெண் கேட்டு செல்லும் போது, அவளின் பெற்றோர் என்ன பதில் கூறுவர்? நீ காதலிப்பவள், ஏற்கனவே யாரை யாவது காதலித்துக் கொண்டிருந்தால் என்ன செய்வாய்?
கல்லூரி காதல்கள், வானவில் போல, நீர்குமிழிகள் போல. தொட்டால், தொப்பென்று உடைந்து விடும்; கண்ணிமைப்பதற்குள் கலைந்து விடும்.
நீயும், அவளும் ஒரே ஜாதி என்பது மட்டுமே, ஒரு ப்ளஸ் பாயின்ட். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிறாயா?
ஆட்கள் அனுப்பி வேவு பார்ப்பதை நிறுத்து. அவளுடன் தனியே ஒரு மணி நேரம் மனம் விட்டு பேச, அவளிடம் அனுமதி பெறு. உன் காதலை சொல். அவள், உன்னை காதலிக்கவில்லை என்றால், அதிர்ச்சியடைந்து எதிர்மறையாக பேசுவாள். "உன்னை தவறாக புரிந்து கொண்டேன்; மன்னித்து விடு...' எனக் கூறி விலகு. அவளது நினைப்புக்கு முற்றுப்புள்ளி வை. அவளும், உன்னை காதலிக்கிறாள் என்றால் நல்லது. நீ பணிக்கு செல்லும் காலத்தை கணக்கிட்டு, ஒரு கால அவகாசம் நிர்ணயம் செய்யுங்கள். அது மூன்று ஆண்டுகளோ, நான்கு ஆண்டுகளோ இருக்கலாம்.
இந்த கால அவகாசத்தில், தொட்டுக் கொள்ளாமல், நாகரிகமாக காதலை தொடருங்கள். உங்களது காதலின் பலம், பலவீனங்களை ஆராய்ந்து, பலமேற்றுங்கள், பலவீனம் அகற்றுங்கள்.
அதன்பின், நளினமாக உன் காதலை பெற்றோருக்கு தெரியப்படுத்து. ஒரு மத்தியஸ்தர் வைத்து, பெண் வீட்டார் பெண் கேட்டு வந்தால், என்ன பதில் சொல்வர் என்பதை தெரிந்து கொள். வேலைக்கு போன மூன்றாவது மாதத்தில், உன் பெற்றோரை விட்டு, பெண் கேட்கச் சொல்; காரியம் பலிதமாகும்.
இறுதியாக ஒன்று சொல்கிறேன்; வருத்தப்படாதே... உன் பாணி காதல்கள், திருமணத்தில் முடிந்தால் கூட, திருமணத்திற்கு பின், தோற்று விடுகின்றன. காரணம், வெறும் புறத்தோற்றத்தில் மயங்கி வரும் காதல், திருமணத்திற்கு பின், அகத் தோற்றத்தைக் கண்டு, வெகுண்டு சிதறுகின்றன. பரஸ்பரம், பலம், பலவீனம் அறிந்த, ஒப்பனையற்ற தன் முனைப்புகளற்ற காதலே, சகலத்திலும் ஜெயிக்கும்.
நீ இக்காதலில் ஜெயித்தால், காதலுக்கு நல்லது; நீ இந்தக் காதலில் தோற்றால், உன் வாழ்க்கைக்கு நல்லது.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
***

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (64)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
savitha - trichy,இந்தியா
19-ஜன-201216:00:50 IST Report Abuse
savitha குட் மெசேஜ் தேங்க்ஸ் போர் ஒஉர் LIFE
Rate this:
Share this comment
Cancel
Sreeram - Tirunelveli,இந்தியா
11-ஜூன்-201117:46:34 IST Report Abuse
Sreeram Nice feelings
Rate this:
Share this comment
Cancel
B. David Raphael - Bodinayakanur,இந்தியா
11-ஜூன்-201115:05:29 IST Report Abuse
B. David Raphael Super advice madam!!!!!!!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X