இளசை சுந்தரம் எழுதிய, 'வாங்க சிரிச்சுட்டு போகலாம்' நுாலிலிருந்து:
'காதல் என்பது, ஆணுக்கு, வாழ்க்கையில் ஒரு அம்சம் தான். ஆனால், பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை...' என்று சொல்வர். உண்மை தான். பெண்களை பொறுத்தவரை, காதல் அவ்வளவு ஆழமானது, புனிதமானது.
தாஜ்மஹால், ஓர் அற்புதமான காதல் சின்னம் இல்லையா... ஷாஜகான், தன் காதல் மனைவியின் மீது வைத்திருந்த அன்பின் அடையாளம், அது.
இதைப் போல, கணவன் இறந்த பிறகு, அவனது அன்பை நினைத்து உருகிய பெண்களில் யாராவது, அவனுக்காக இப்படிப்பட்ட பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு உண்டா?
உண்டு!
பாரசீக பேரரசின் ஒரு பகுதி தான், காரியா நாடு. அதை ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான். அவன் பெயர் மாசோலஸ்; ஆணழகன். அவனை, ஆர்ட்டி மிர்சியா என்ற பெண் காதலித்தாள். அவர்கள் இருவரும், திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால், என்ன துரதிர்ஷ்டம்... மாசோலஸ் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து போனான். அவனுக்கு பின், அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
தன் கணவரின் நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள். உலகத்தின் புகழ்பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டனர். பிரமாண்டமான,
36 துாண்கள் அமைக்கப்பட்டன. அதற்கு மேலே விண்ணை முட்டும் அளவில், 24 அடுக்குகள் கொண்ட விதானம் அமைக்கப்பட்டது.
நடுவில் கல்லறை, அதற்கு மேல் மாசோலஸ் மன்னருடைய பிரம்மாண்ட சிலை. கல்லறைக்கு செல்ல, 200 படிகள். ஒவ்வொரு படியிலும், கண்ணைக் கவரும் ஓவியங்கள்.
இப்படி எல்லாருடைய கவனத்தையும் கவரும் வகையில், தன் கணவருக்காக நினைவுச் சின்னம் அமைத்தாள், அந்த காதல் மனைவி. அதற்கு, 'மாசோலியம்' என்று பெயரிடப்பட்டது.
அப்போது, உலக அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. கி.பி., 15ம் நுாற்றாண்டில், வெளிநாட்டினர் இந்த அரசைக் கைப்பற்றினர். அரசியல் வெறுப்பின் காரணமாக, அழகிய அந்த மாசோலியத்தையும் அடியோடு இடிக்கத் துவங்கினர்.
அப்போது, 'இது, சாதாரண கட்டடம் அல்ல. காதல் சின்னம். ஒரு மனைவி, தன் கணவரின் நினைவாக எழுப்பிய காதல் காவியம். அதை அழித்து விடாதீர்கள்...' என, வேண்டிக் கொண்டார், பெரியவர் ஒருவர்.
இதைக் கேட்டு அவர்கள் சிலிர்த்துப் போய், இடிப்பதை நிறுத்தினர். எஞ்சிய பகுதிகளே இப்போது இருக்கின்றன.
இனி, மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், இந்த உன்னத மாசோலியம் பற்றியும் பேசுவோம்.
'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நுாலிலிருந்து:
நீ, 40 வயதை தாண்டி விட்டால், இதற்கு முன் விளைவித்த பயிர்களையெல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும். இந்த பருவமும், உனக்கு இளமைப் பருவமே! அந்த பருவத்தை சந்தோஷமாக கடக்க, செய்ய வேண்டியவை...
* கைகள் இரண்டையும் வீசியபடி முடிந்த வரை, நீண்ட துாரம் நடத்தல்
* வாயுப் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருத்தல்
* கடலை மாவு, கடலை எண்ணெய் ஆகியவற்றை ஒதுக்குதல்
* தவறான உறவுகள் கொள்ளாதிருத்தல்
* இனம் அறிந்து சேருதல்
* இதயத்திற்கு துன்பம் கொடுக்கக் கூடிய தொல்லைகளில் மாட்டிக்கொள்ளாதிருத்தல்
* எதையும் அளவோடு வைத்திருத்தல்.
இப்படி இருந்தால், அவனை பார்க்கிறவர்கள், 'உங்களுக்கு, 25 வயதா...' என்று கேட்பர்.
ஆகவே, 40 வயதை, ஒரு எல்லைக் கல் என்று வைத்து, நீ, வாழ்க்கையை நடத்த வேண்டும். 40 வரையிலே ஒலி எழுப்பும் வீணைகள், 40க்கு மேலே தான், எதிரொலியை கேட்கத் துவங்குகின்றன. 40 வயது, ஞானம் பிறக்கும் வயது.
மீண்டும் நானே உதாரணமாகிறேன், 'என்ன, நீ பெரிய மேதையா... உன்னையே உதாரணமாக்கிக் கொண்டு போகிறாய்...' என்று கேட்கிறீர்களா...
நான், 12 வயதிலிருந்தே உலகத்தை பார்த்திருக்கிறேன். ஆகவே, நான் அறிவியல் மேதை இல்லை என்றாலும், அனுபவ மேதை.
நடுத்தெரு நாராயணன்