பா-கே
நண்பர் ஒருவரது, கிராம வீட்டுக்கு சென்றிருந்தேன். வயதான பெரியவரிடம், தன் தோட்டத்தில், கிணறு தோண்டுவது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார், நண்பர். அவர்களது உரையாடலை கூர்ந்து கவனித்தேன்.
'கிணறு தோண்ட, நீரோட்டம் பார்க்க, புதுப்புது, 'டெக்னாலஜி' எல்லாம் வந்துடுச்சு. அதை பயன்படுத்தி பார்க்கலாமா...' என்றார், நண்பர்.
நண்பரின் பணியாள் ஒருவர், இடைமறித்து, 'ஐயா, இந்த சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவருமே, இவரது ஆலோசனை கேட்டு தான், கிணறு வெட்டுவர். அந்த அளவுக்கு இவரது கணிப்பு சரியாக இருக்கும்...' என்றார்.
எந்த வழியில் நீரோட்டத்தை கண்டுபிடிக்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம், எனக்கு
ஏற்பட்டது.
நண்பரது தோட்டத்தை ஒருமுறை சுற்றி வந்தார், பெரியவர்.
'ஐயா... இந்த தோட்டத்தை ஒரு மாசத்துக்கு அப்படியே போட்டு வையுங்கள். நான் சொல்லும் சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அதன்பின் முடிவு செய்யலாம்.
'என் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இந்த முறைகளைப் பின்பற்றி தான், நீரோட்டத்தை கண்டுபிடித்து வருகிறேன்...' என்றார்.
அவர் கூறியது இதுதான்:
மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில், அதிகளவு பச்சை பசேலென புற்கள் செழித்து வளரும். அந்த இடத்தில் கிணறு தோண்ட, குறைந்த ஆழத்திலேயே நீர் கிடைக்கும்.
நல்ல நீரூற்று என அறிய, நவதானியங்களை, கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில், முதல் நாள் இரவு பரவலாக துாவி விட வேண்டும்.
அடுத்த நாள் கவனித்தால், எறும்புகள் இவற்றை சேகரித்து ஓரிடத்தில் கொண்டு சேர்த்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தில் கிணறு வெட்டினால், துாய நன்னீர் கிடைக்கும்.
அந்த துாய நீரும், கோடை காலத்திலும் வற்றாத ஊற்றாக இருக்கும் இடத்தை அறிய, கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து, அங்கு, பசுக்களை மேய விடவேண்டும். பின், அந்த பசுக்களை கவனித்தால், மேய்ந்த பின், குளிர்ச்சியான இடத்தில் படுத்து, அசை போடும்.
அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அவை, ஒரே இடத்தில் தொடர்ந்து படுத்தால், அந்த இடத்தில் தோண்டினால், வற்றாத நீரூற்று கிடைக்கும்.
- இப்படி, அவர் கூறியதை கேட்க ஆச்சரியமாக இருந்தது.
நண்பரின் பணியாள், பக்கத்து நிலத்திலிருந்து, இளநீர்களை வெட்டி வந்து கொடுத்தார். அமிர்தமாக இனித்தது, இளநீர்.
'அந்த நிலத்தில் கிணற்று பாசனம் தான். இந்த பெரியவர் கூறிய இடத்தில் கிணறு வெட்டி, இன்று, தண்ணீர் வற்றாமல் நல்ல தண்ணீராக இருக்கிறது...' என்றார்.
நண்பரும் ஆமோதித்து, பெரியவர் கூறிய முறையிலேயே கிணறு வெட்டுவதாக கூறி, அவரை வழியனுப்பி வைத்தார்.
படிப்பறிவை விட, அனுபவ அறிவு மேலானது என்று நினைத்தபடியே, ஊர் திரும்பினேன்.
ப
'இ - மெயிலில்' சென்னை, புரசைவாக்கம் வாசகர், ச.சத்தியமூர்த்தி அனுப்பிய கடிதம்.
மன உறுதி ஏற்பட வழிமுறைகள்:
* பசியெடுத்தால் உடனே சாப்பிட உட்காராதீர்கள், ஒரு மணி நேரம் தள்ளிப் போடுங்கள்
* ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருக்கும்போது, கைக்கு அருகே உள்ள தினசரி, 'வேளச்சேரியில் இரட்டைக் கொலை' என்று கொட்டை எழுத்தில் உங்களை கூப்பிடும். அதை படிப்பதற்கு மனம் துடிக்கும். பேப்பரை எடுக்காதீர்கள். இப்படி செய்தால், எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பதில் முனைப்பு ஏற்படும்
* உங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதில், கவனமாக இருங்கள். உங்கள் அம்மாவிடம் சொல்வதற்கு வெட்கப்படும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்
* துாக்கத்தை குறையுங்கள். காலையில் எழுந்தவுடன், அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன, அவற்றை எப்படி செய்யப் போகிறோம் என்று சிந்தியுங்கள். மென்மையான இசையை கேளுங்கள்
* கண்ணாடி முன் நின்று, ஐந்து நிமிடம் வாய் விட்டுச் சிரியுங்கள். நான்கு வயது குழந்தை, ஒரு நாளைக்கு, 500 தடவை சிரிப்பதாக கணக்கிட்டிருக்கின்றனர். அந்தக் குழந்தை மனம், உங்களுக்கு இருக்க வேண்டும்
* நடைபயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதை எண்ணியபடியே நடங்கள். மன ஒருமைப்பாட்டுக்கு இது மிகவும் உதவும்
* இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, உபவாசம் இருங்கள். பழ ரசத்தை மட்டுமே அருந்துங்கள் அல்லது பழங்களை சாப்பிடுங்கள்
* நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 10 டம்ளர் தண்ணீரை குடியுங்கள்
* இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்ற பிரச்னை ஏற்படும்போது, இரண்டில் எது கடினமானதோ அதை செய்யுங்கள்
* ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருடைய பெயரை அடிக்கடி சொல்லுங்கள். 'நான் என்ன சொல்கிறேன் என்றால், மிஸ்டர் நாராயணசாமி; நீங்கள் சொல்வது புரிகிறது, மிஸ்டர் தாமஸ்...' என்பது போல பேசினால், உறவு பலப்படும்.
எந்த மனிதருக்கும், அவருடைய பெயர் இனிய சங்கீதம்
* செய்யப் பிடிக்காத இரண்டு வேலைகளை, ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். புத்தக அலமாரியை சுத்தம் செய்வது, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது, பத்திரிகையை தேதி வாரியாக அடுக்கி வைப்பது, இப்படி ஏதாவது இரண்டு வேலைகளை செய்து முடியுங்கள்
* அடுத்த நாள் காலை, 5:00 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமானால், அதற்கு அலாரம் தேவையில்லை; உங்களுக்குள்ளேயே ஒரு அலாரம் இருக்கிறது. படுப்பதற்கு, 10 நிமிடம் முன், வசதியான நாற்காலியில் உட்கார்ந்து, கைகளை முழங்காலின் மீது மேலோடு வைத்து கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.
'நாளை காலையில், 5:00 மணிக்கு, நான் புத்துணர்வுடன், உற்சாகத்துடன், சுறுசுறுப்புடன் எழுந்திருப்பேன்...' என்று, 20 முறை சொல்லுங்கள். மறுநாள், காலை டாணென்று, 5:00 மணிக்கு எழுந்து கொள்வீர்கள்
* எழுந்ததும் மூன்று மந்திரங்கள் சொல்லுங்கள்... இன்று, நான் பிறரிடம் பரிவு காட்டுவேன்; இன்று, நான் பிறருக்கு உதவி செய்வேன்; இன்று, நான் கருணையுடன் நடந்து கொள்வேன்.
'மேலே உள்ளது நான் படித்து, என் டைரியில் சேமித்து வைத்தது. யார் எழுதியது என தெரியாது...' என்று குறிப்பிட்டுள்ளார், வாசகர்.