''என்னங்க... நம் மக, ஓவியாவைக் காணோம்...'' என்றாள், மாணிக்கவேலின் மனைவி மரகதம்.
கூடத்தில் அமர்ந்து, காலை பத்திரிகையை படித்தபடி, காபியைப் பருகிக் கொண்டிருந்த மாணிக்கவேல், சற்றே தலை நிமிர்த்தி, ''என்னடி... ஏதோ அடுப்பங்கரையில வைச்சிருந்த தீப்பெட்டியை காணோம்கிற மாதிரி சொல்றே... குளியல் அறையில் பார்த்தியா?'' என கேட்டு, மீண்டும் பத்திரிகையில் மூழ்கினார்.
''எல்லா இடத்திலயும் தேடிப் பார்த்திட்டேன்க... இதோ- இந்த கடுதாசி தான் இருந்தது,'' என்றவாறு ஒரு கடிதத்துடன், முன் வந்து நின்றாள்.
மரகதத்தை சற்றே முறைத்தபடி, உள்ளுள் எழுந்த பதற்றத்தை வெளிக்காட்டாமல் அவள் நீட்டிய கடிதத்தை, வாங்கிப் படித்தார், மாணிக்கவேல்.
'அப்பா... என்னைத் தேட வேண்டாம். என் மனதுக்குப் பிடித்தவருடன் வாழ முடிவு செய்து புறப்படுகிறேன். நான் அணிந்திருந்த நகைகள் அனைத்தும், பீரோவில் பத்திரமாக வைத்திருக்கிறேன். மாற்று உடைகள் மட்டும் எடுத்துச் செல்கிறேன். அம்மா... என்னை மன்னித்து விடுங்கள். அன்பு மகள், ஓவியா...'
''என்னங்க எழுதியிருக்கா?'' மனம் பதை
பதைக்க கேட்டாள், மரகதம்.
''ம்... நாம பெண்ணை வளர்த்த விதம்
சரியில்லேன்னு எழுதியிருக்கா.''
''புரியற மாதிரி சொல்லுங்க.''
''இந்தா... நீயே படிச்சுப் பாரு.''
கடிதத்தை மரகதத்திடம் நீட்ட, வாங்கிப் படித்தவள், அதிர்ச்சியில் ஆழ்ந்தாள்.
''ஓவியா,-- என்னம்மா இப்படிப்
பண்ணிட்டே?''
''புலம்புறதை நிறுத்து,'' என அதட்டி, ஓவியாவின் அறைக்குள் சென்று, பீரோவைத் திறந்து பார்த்தார்.
''பெத்த பெண்ணை விட, இந்த
நகைங்க உங்களுக்குப் பெரிசா போயிடுச்சா...
கொஞ்சம் கூட பதறாம, எப்படிங்க
உங்களால இருக்க முடியுது?''
''நான் இப்படி இருக்கேனேன்னு சந்தோஷப்படு... எனக்கு ஆத்திரம் வந்தா நடக்கிறதே வேற?-''
''இன்னும் என்ன நடக்கணும்... ஒரே மகள்... அவ மனசைப் புரிஞ்சுக்காம, யாரோ ஒரு மாப்பிள்ளையைக் கட்டிக்க வற்புறுத்தினதால் தான், ஓவியா இந்த முடிவுக்கு வந்திருக்கா.''
''மரகதம்... ஓவியாவுக்கு நான் பார்த்த மாப்பிள்ளை, -யாரோ ஒருவன் இல்லே... 100 ஏக்கர் நிலம், மாடி வீடு, தோட்டம், துரவுன்னு வசதியான இடம்... விடு,- அவளுக்கு அதிர்ஷ்டம் இல்லே... எங்காவது போய் அவதிப்படணும்ன்னு தலையெழுத்து.''
''படிச்ச பொண்ணு... ஏன்தான் இப்படி புத்தி போச்சோ?'' மீண்டும் புலம்பத் துவங்கினாள், மரகதம்.
தீவிர யோசனையில் ஆழ்ந்தார், மாணிக்கவேல்.
யாருடன் சென்றிருப்பாள்... அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, அவர் மனம் துடித்தது.
கணக்குப்பிள்ளையை அழைத்து, ''ஊரில், யாராவது இள வயது பையன்கள், வெளியூர் சென்றிருக்கின்றனரா...'' என்று, விசாரித்து வரச் சொன்னார்.
'ஓவியா எங்கே...' என்று கேட்டவர்களுக்கு, பக்கத்து ஊரில் உள்ள தம்பி வீட்டுக்குச் சென்றிருப்பதாக சொல்லி சமாளித்தார்.
ஒரு மாதத்திற்குப் பின், ரகசியமாக, மாணிக்கவேலிடம் ஒரு செய்தியைச் சொன்னார், கணக்குப்பிள்ளை.
'உளசேரியில் உள்ள தங்கராசு என்ற இளைஞன், ஒரு மாதமாக ஊரில் இல்லையாம். விசாரித்ததில், வேலை கிடைத்து, பட்டணம் போய் விட்டதாக, அவன் வீட்டில் கூறினர்...' என்றார்.
இந்த செய்தியை கேட்டதும், மாணிக்கவேலின் உடல் சூடேறியது.
'ஒருவேளை... ஓவியா அந்த தங்கராசுவுடன்... சே சே, இருக்காது...-- அப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் ஓவியா செல்வதில்லை. மேலும், அந்த தங்கராசுவும், நம் வீட்டுப் பக்கம் வந்ததே இல்லை. பின், யாருடன் தான் சென்றிருப்பாள்?' நினைக்க நினைக்க, குழப்பம் தான் ஏற்பட்டது.
நல்ல நிலத்தில் விதைப்பதற்காக வைத்திருந்த விதை நெல், எங்கோ பாழ் நிலத்தில் விழுந்து வீணாகி விட்டதோ என்ற கவலை, மனதை அழுத்தியது. பொறுமை எனும் அங்குசத்தால், மதம் பிடித்த மன யானையை அடக்க முயன்று
கொண்டிருந்தார்.
கொல்லைப்புறக் கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லின் மீது, பிரமை பிடித்தவளைப் போல அமர்ந்திருந்தாள், மரகதம்.
வேலியோரம் வந்து நின்ற பக்கத்து வீட்டு அம்மாள் பர்வதம், ''மரகதம்...'' என, கிசுகிசுப்பான குரலில் அழைக்க, திரும்பிப் பார்த்தாள்.
''நேற்றிலிருந்து உன்னைப் பார்க்கணும்ன்னு தேடிக்கிட்டுருந்தேன். நல்லவேளை, இப்ப பார்த்தேன். கொஞ்சம் பொறு. இதோ வர்றேன்,'' என்று வீட்டுக்குள் சென்று, சிறிது நேரத்தில் திரும்பினாள்.
அவள் கையில் நான்காக மடிக்கப்பட்ட ஒரு காகிதம்.
சுற்றும்முற்றும் பார்த்தபடி, ''மரகதம்... நானும், என் புருஷனும், சுவாமிமலை கோவிலுக்குப் போயிருந்தோம்... அங்கே, உன் மகளைப் பார்த்தேன்,'' என்றாள், பர்வதம்.
மரகதத்தின் விழிகள் வியப்பாலும், மகிழ்வாலும் விரிந்தன.
''ஓவியாவைப் பார்த்தியா... எப்படி இருக்கா, என் மக-?''
''ஏதோ இருக்கா... இதோ இந்த கடுதாசியை உன்கிட்ட கொடுக்கச் சொன்னா,'' என்று, தன் கையிலிருந்த கடிதத்தை கொடுத்து விட்டு, அக்கம் பக்கம் பார்த்தபடி, அவசரமாக தன் வீட்டுக்குள் சென்று மறைந்தாள்.
அடக்கமுடியாத ஆவலுடன் கடிதத்தை பிரித்துப் படித்தாள், மரகதம்.
'அன்புள்ள அம்மா... நான் இங்கு,
கணவருடன் நலமாக இருக்கிறேன். என்னைப்
பற்றிய கவலை வேண்டாம். நான் இங்கு
இருப்பதை அப்பாவிடம் தெரியப்படுத்த
வேண்டாம். என்னை தேடியும் வரவேண்டாம். நல்ல காலம் பிறக்கும். அப்போது சந்திப்போம். ஓவியா...'
கடிதத்தை படித்ததிலிருந்து,- மரகதத்துக்கு இருப்பு கொள்ளவில்லை.
இந்த விஷயத்தை, கணவரிடம் சொல்வதா, வேண்டாமா என்ற தவிப்பிலேயே, அன்றைய இரவைக் கழித்தாள்.
பொழுது விடிந்ததும், மனம் தாளாமல் தயங்கித் தயங்கி, கணவரிடம் விஷயத்தை கூறினாள்.
மரகதம் கொடுத்த கடிதத்தை வாங்கிப் படித்த, மாணிக்கவேலின் முகம் இறுகியது.
''பாவம் ஓவியா... வசதியா இருந்து பழக்கப்பட்டவ. அங்கே எப்படி கஷ்டபடுறாளோ?''
மரகதத்தின் பேச்சை இடைமறித்தவர், ''உன் மக, கஷ்டப்பட வேண்டிய அவசியம் இருக்காது...'' என்றார்.
''ஏன்... எதனால அப்படிச் சொல்றீங்க?'' புரியாமல் பார்த்தாள், மரகதம்.
-''ஓவியா வயசுக்கு வந்தப்ப, அவளுக்கு, 20 பவுன்ல, தங்க அரைஞாண் கயிறு போட்டோமே, -ஞாபகம் இருக்கா?''
''ஆமாம்.''
''அது இன்னும் அவ இடுப்பிலதான் இருக்கும். அதை வித்தா, குடும்பமே ஆண்டுக்கணக்கில் உட்கார்ந்து சாப்பிடலாம்... இப்ப என் கவலையெல்லாம், அவ யாரோட ஓடிப் போனாங்கிறது தான்... அதைத் தெரிஞ்சுக்கணும் முதல்ல, புறப்படு.''
''எங்கே?''
''ஓவியாவின் வீட்டுக்குத்தான். நீ போய் பர்வதம் அம்மாகிட்ட, ஓவியாவோட வீட்டு விலாசத்தைத் தெரிஞ்சுக்கிட்டு வா,'' என்றவர், டிரைவரை அழைத்து, காரைத் தயார் செய்யச் சொன்னார்.
மகளைக் காணப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில், மரகதம், ஓவியாவின் அறைக்குள் சென்று பீரோவைத் திறந்து, அவளது நகைகளை எடுத்து, ஒரு கைப்பையில் பத்திரப்படுத்தினாள்.
அதேவேளையில், காரின் டிக்கியைத் திறந்து, நீண்ட வெட்டரிவாள் ஒன்றை யாருக்கும் தெரியாமல் வைத்து
மூடினார், மாணிக்கவேல்.-
ஓவியாவின் வீட்டு வாசலில் காரை
நிறுத்தி இறங்கினர், மாணிக்கவேலும், மரகதமும்.
''இந்த வீடுதானா... நல்லா தெரியுமா?'' என்றார், மாணிக்கவேல்.
''வீட்டு நம்பர் சரியாத்தான் இருக்கு. பழைய ஓட்டு வீடு. வாசல்ல வேப்ப மரம். இந்த வீடு தான்,'' என்று சொல்லியபடி, மணிக்கவேலை முந்தியபடி, முன் சென்று மூடியிருந்த வாசல் கதவைத் தள்ள, திறந்து கொண்டது.
வீட்டின் கூடத்தில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த ஓவியா, சலனம் கேட்டுத் திரும்பினாள்.
அம்மா, அப்பாவை ஒருசேரப் பார்த்ததில், அவளுள் எழுந்த உணர்வு மகிழ்ச்சியா, அதிர்ச்சியா- அல்லது
இரண்டும்
கலந்த கலவையா என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
''வாங்கம்மா... வாங்கப்பா... உட்காருங்க,'' என்று, அங்கிருந்த மர நாற்காலியை நகர்த்தி, அப்பாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க, சக்தியற்றவளாகத் தலை குனிந்து நின்றாள்.
'ஓவியாவா இது?'
சுடிதாரிலும், பட்டுப் புடவையிலும் உலா வந்த ஓவியா, நுால் புடவை அணிந்து, கழுத்தில் வெறும் மஞ்சள் தாலிக் கயிறைத்தவிர வேறு நகை ஏதும் இல்லாமல் இருந்ததைப் பார்த்து, மரகதத்தின் மனம் கலங்கியது.
நாற்காலியில் அமர்ந்த மாணிக்கவேலின் விழிகள், அந்த வீட்டைச் சுற்றி வட்டமிட்டன.
ஓட்டு வீடானாலும், சற்று விசாலமான வீடு தான். பெரிய கூடம், கூடத்தை ஒட்டி ஓர் அறை. கூடத்தின் மூலையில் ஒரு பீரோ, அடுத்து, 'டிவி' இருந்தது.
''காபி சாப்பிடுங்கப்பா...''
நீட்டினாள், ஓவியா.
மாணிக்கவேல் பெற்றுக் கொண்டதும், அடுத்து, அம்மாவிடம் கொடுத்தாள்.
''உன் புருஷன் என்ன வேலை பார்க்கிறார் ஓவியா?'' என்று கேட்டார், மாணிக்கவேல்.
''கால் டாக்சி ஓட்டிக்கிட்டு இருக்கார்; சொந்தக் கார்.''
''டிரைவர்ன்-னு சொல்லு... அவன் யார், எந்த ஊர், என்ன பேர் -எதுவும் சொல்ல மாட்டியா?''
''அவர் வந்ததும், நீங்களே தெரிஞ்சுக்குவீங்க. போன் பண்ணியிருக்கேன்; இப்ப வந்துடுவார். நீங்க காபி சாப்பிடுங்க,'' என்றவள், வாசல்புறம் பார்த்து, ''இதோ,- அவரே வந்துட்டார்,'' என்றாள்.
தன் வெட்டரிவாளுக்கு இரையாகப் போகும் அந்த வெள்ளாடு எதுவாயிருக்கும் என்ற எதிர்பார்ப்பில், நிமிர்ந்து பார்த்த மாணிக்கவேல், அதிர்ந்தார்.
''நீயா... நீயா?''
மாணிக்கவேலுவின் குரலுடன், மரகதத்தின் குரலும் ஒரு சேர இணைந்து எதிரொலித்தது.
அவர் மனதில் மின்னல் வெட்டினால் போன்ற காட்சி நினைவில் பளிச்சிட்டது.
ஓவியாவைப் போலவே,
30 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போன அவரது தங்கை செண்பகம், இரண்டு மாதங்களுக்கு முன், -மகன் சம்பத்துடன் வந்தாள்.
ஓவியாவை, தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டதும், செண்பகத்தை நா கூசும் வார்த்தைகளால் மாணிக்கவேல் திட்டி அனுப்பியதும் நினைவில் மோதியது.
''சம்பத்... நீயா, ஓவியாவை கூட்டி வந்தே... எங்கே அந்த ஓடுகாலிக் கழுதை செண்பகம்?''
''செத்துப் போனவங்க, தெய்வத்துக்கு சமம். அம்மாவைத் திட்டாதீங்க மாமா,'' என்றான், சம்பத்.
இப்போது மாணிக்கவேலும், மரகதமும் ஒரு சேர அதிர்ந்தனர்.
''என்ன... செண்பகம் செத்துட்டாளா?''
''ஆமாம் மாமா... எங்க அப்பா திடீர்னு இறந்ததும், நிர்க்கதியா ஆயிட்டதா நினைச்ச அம்மா, பிறந்த வீட்டு ஆதரவைத் தேடி, உங்களைப் பார்க்க வந்தாங்க...
''ஓவியாவைப் பார்த்ததும், இழந்த சொந்தத்தைப் புதுப்பிச்சுக்கலாம்கிற எண்ணத்திலே, அவளை தன் மருமகளாக்கிக்க ஆசைப்பட்டு, தன் தகுதியையும் மறந்து, பெண் கேட்டாங்க.
''ஆனா, நீங்க, பெண் தரமாட்டேன்னு ஒத்தை வரியில சொல்லி இருந்தால் கூட பரவாயில்லே. தகாத வார்த்தைகளால் திட்டினீங்க... அந்த அவமானம் தாங்காம, அம்மா, விஷம் குடித்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்க,'' என்றான், சம்பத்.
''செண்பகம் இறந்த விஷயத்தை நீ, என்கிட்ட சொல்லி இருக்கலாமே... ஏன் சொல்லல?''
''உங்க வீட்டுக்கு போன் பண்ணினேன். நீங்க வீட்டில இல்லாததால, போனை எடுத்துப் பேசிய ஓவியாகிட்ட விஷயத்தை சொன்னேன். அப்பத்தான் ஓவியா இந்த முடிவை சொல்லிச்சு...''
''முடிவா... என்ன முடிவு?''
''உங்களுடைய வசவால மனசு உடைஞ்சு போய்த்தான் அத்தை இறந்தாங்க. அதுக்குப் பிராயச்சித்தம் தேடிக்கிற விதமா அத்தான்கிட்ட, 'நான் வீட்டை விட்டு ஓடி வந்துடுறேன். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்காணாத இடத்துக்குப் போய் வாழலாம்'ன்னு, நான் தான் சொன்னேன். அத்தானும் சம்மதிச்சார்,'' என்றாள், ஓவியா.
''ஓ... இதுதான் அந்தக் கண்காணாத இடமா... சரி, சரி... மரகதம், புறப்படு.''
''கொஞ்சம் பொறுங்க...'' என்ற மரகதத்தின் குரலை காதில் வாங்காதவராக, காரில் ஏறி அமர்ந்து கொண்டார்.
மரகதம் தன் கையில் இருந்த பையை ஓவியாவிடம் கொடுத்தாள்.
''என்னம்மா இது?''
''உன் நகைகள். இதை, பெத்தவங்களோட சீர்வரிசையா நினைச்சு வாங்கிக்க. நான் வர்றேன்,'' என்று புறப்படத் தயாரானாள்.
''வேண்டாம்மா,'' என, பையை மரகதத்திடம் திருப்பித் தந்த ஓவியா, ''கொஞ்சம் பொறுங்கம்மா...'' என்று, பீரோவைத் திறந்து, சிறு பையை எடுத்து தந்தாள்.
''இது என்ன ஓவியா?''
''பெத்தவங்களுக்கு, பெண்ணோட அன்பளிப்பு. இதை வீட்டுக்குப் போய், பிரிச்சு பாருங்கம்மா.''
விழிநீரை துடைத்தபடி, ஓவியா கொடுத்த பையுடன் வெளியேறி, காரில் அமர்ந்தாள், மரகதம்.
ஊர் எல்லையைக் கடக்கும் வரை, மாணிக்கவேலும், மரகதமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
'ஓவியா கொடுத்த பையில் என்ன தான் இருக்கும்?' என, ஆவலை அடக்க முடியாமல் பிரித்துப் பார்க்க முயன்றாள், மரகதம்.
அருகில் அமர்ந்திருந்த மாணிக்கவேல், ''என்ன இது?'' என கேட்டபடி, அவளிடமிருந்த பையை பிரித்துப் பார்த்தார்.
அதனுள், ஓவியாவுக்கு அணிவித்த தங்க அரைஞாண் கயிறு இருந்தது.
அதைப் பார்த்த மாணிக்கவேலுக்கு,
தன் கன்னத்தில் யாரோ அறைந்தாற்
போன்ற உணர்வு ஏற்பட, பையை, மரகதத்திடம் கொடுத்து, கண்களை மூடிக் கொண்டார்.
டிக்கியில் இருந்த வெட்டரிவாளை எடுத்து, தன் கழுத்தை தானே வெட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
காரும், பங்களாவும் மட்டுமல்ல வாழ்கை. செருக்கு இல்லாத செயல், ஏற்றத்தாழ்வை எண்ணாத சிந்தனை, பிடிவாதம் பிடிக்காத உறவு. -இவையே நிதர்சன வாழ்க்கை
என்பதை நிரூபித்துக்காட்டி விட்டாள்,
மகள் ஓவியா.
தம்பி பன்னீர்செல்வம்