பழைய கதைகளை துாசி தட்டும், ரஜினி!
அண்ணாத்த படத்தில் நடித்து வரும், ரஜினி, அரசியல் பிரவேசம் இல்லை என்றாகி விட்டதால், 'இனிமேல், சினிமாவில் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போகிறேன்...' என்கிறார். அந்த வகையில், தனக்கு ஏற்கனவே, 'ஹிட்' கொடுத்த சில இயக்குனர்களை அழைத்து, கதை கேட்டு வருகிறார். 2012ல், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தான் நடிக்க இருந்து, பின்னர், 'டிராப்' ஆன, ராணா படத்தின் கதையை, மீண்டும், அவரை அழைத்து கேட்டுள்ளார். அதேபோல், இன்னும் சில இயக்குனர்களிடமும் நிலுவையில் வைத்திருந்த கதைகளையும் கேட்டு, நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.
சினிமா பொன்னையா
ராசி கண்ணாவின், புதிய தர்பார்!
'விஜய்சேதுபதியுடன், துக்ளக் தர்பார் படத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு, நடிப்பு பிளஸ் கவர்ச்சி என, இரண்டிலுமே புதிய தர்பார் செய்திருக்கிறேன். அதனால், இந்த படம், திரைக்கு வரும்போது, தமிழக ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து விடுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோலிவுட்டின் நம்பர்- ஒன் நாற்காலியில் உட்காருவதே, என் அடுத்த டார்க்கெட்...' என்று சொல்லி, சில மேல்தட்டு நடிகையரை கலவரப்படுத்தியுள்ளார், ராசி கண்ணா. அலை எப்போது ஓயும்; தலை எப்போது முழுகுவது!
- எலீசா
பிரியா பவானி சங்கரின் அடுத்த, 'டார்கெட்!'
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ள பிரியா பவானி சங்கர், கமலின், இந்தியன் - - 2
படத்தை அடுத்து, சிம்புவுடன், பத்து தல மற்றும் ராகவா லாரன்சுடன், ருத்ரன் என, பல மெகா படங்களை கைப்பற்றி, கோலிவுட்டின் முன்வரிசையை எட்டிப்பிடித்துள்ளார். இந்நிலையில், சில மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களின் பட வாய்ப்புகளுடன் தன்னைத் தேடி வந்தவர்களை, 'என்னோட அடுத்த டார்கெட், விஜய், -அஜீத் தான். அதனால், இனிமேல் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுடன் தப்பித்தவறி கூட, என் வீட்டுப்பக்கம் வராதீங்க...' என்று, துரத்தி விட்டுள்ளார்.நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது!
— எலீசா
சிம்புவின் அரசியல், 'பஞ்ச்!'
தொடர்ந்து காதல் கதைகளாக நடிப்பதால், அடுத்த, 'லெவல்' நடிகராக முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளார், சிம்பு. மாநாடு படத்தில், அதிரடி அரசியல் கதையில் நடிப்பவர், 'இனி, பரபரப்பு சம்பவங்களை கொண்ட கதைகளாக நடிக்க முடிவெடுத்துள்ளேன்...' என்கிறார். அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், காதல் காட்சிகளை கால்வாசி வைத்து, அரசியல் கலந்த ஆக் ஷனை முக்கால்வாசி வைக்குமாறு கேட்டுள்ளார். சிம்புவின் படங்களில், இனி, அதிரடியான அரசியல், 'பஞ்ச்' வசனங்கள் இடம் பெறப்போகிறது.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
தல நடிகர் படத்தில் நடித்து வரும், காலா நடிகை, கோலிவுட்டில் கவர்ச்சி கொடி நாட்டி விடவேண்டும் என்பதற்காக, 'டீசன்ட்' உடை அணிந்து வரச்சொன்னாலும், 'துக்கடா உடையணிந்து தான் நடிப்பேன்...' என்று, அடம் பிடித்துள்ளார். ஆனால், தல நடிகர், 'என் படங்களில் நடிக்கும் நடிகையர், 'டீசன்ட்' ஆன உடை அணிந்து தான் நடிக்க வேண்டும்...' என்பதில் உறுதியாக இருப்பதோடு, 'சிங்கிள் ஷாட்'டில் கூட, அவர் துக்கடா உடையணிந்து வர அனுமதிக்கவில்லை. இதனால், தல நடிகர் மீது, செம கோபத்தில் இருக்கிறார், மும்பை புயல்.
'டேய்... நாம, 'கிரிக்கெட் மாட்ச்' பார்க்க போனப்ப, ஒரு பொண்ணு அரைகுறையா, 'டிரஸ்' செஞ்சுக்கிட்டு வந்துச்சே... ஞாபகம் இருக்கா...'
'ஆமா... அதுக்கென்ன இப்ப...'
'அந்த பொண்ணு, என் பெரியம்மா வீடு இருக்கிற ஏரியாவுல தான் இருக்கிறாள். ஏதோ, 'ஸ்டார்ட் - அப்' கம்பெனி நடத்தறதா சொன்னாங்க, எங்க பெரியம்மா. அவ பேரு, ஹூமாகுரோஷி...'
'என்னடா இது, ஏதோ ஜப்பான் நாட்டு பேர் மாதிரி இருக்கு...'
'அவள பத்தி இன்னொரு விஷயம்... அவ கவர்ச்சியா, 'டிரஸ்' போட்டுட்டு போறதை கண்டிச்சு, அந்த தெரு நலவாழ்வு சங்கத்துல இருந்து, 'இப்படியெல்லாம் அலங்கோலமா, 'டிரஸ்' செஞ்சுக்கக் கூடாது. அப்படி இல்லைன்னா, அங்கிருந்து காலி செஞ்சுடணும்'ன்னு, எச்சரிக்கை கொடுத்திருக்காங்களாம்...' என, இரு நண்பர்கள் பேசிக்கொண்டனர்.
சினி துளிகள்!
* காலா படத்தையடுத்து, அஜீத்துடன், வலிமை படத்தில் நடித்து வரும், மும்பை நடிகை, ஹூமாகுரேஷி, தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்பதற்காக, தீவிர பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார்.
அவ்ளோதான்!