ஓ.பாவுரமா (மாடப்புறா) பானுமதி
பானுமதி நடித்த முதல் ஐந்து படங்கள், மிகப்பெரிய பெயரையோ, அடையாளத்தையோ ஏற்படுத்தவில்லை. தெலுங்கு சினிமாவில், ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் நடிகையாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,
18 வயதில் திருமணம் செய்து கொண்டார்.
கிருஷ்ண பிரேமா படத்திற்குப் பின், மூன்றாண்டுகள் அவர் நடிக்கவில்லை. அந்த காலகட்டங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள படங்கள் நிறைய பார்த்தனர்; கைகோர்த்து, காதலர்களாய் ராஜவீதியில் பவனி வந்தனர்.
பார்த்த படங்கள் பற்றி பேசினர்; கேட்ட பாடல்களை ரசித்து பாடினர்; நடிகர் -- நடிகையரின் நடிப்பை மதிப்பிட்டனர்; திரை இசையின் பங்களிப்பை சிலாகித்தனர்; திரைக் கதையின் நேர்த்தியை, தொய்வை அலசினர்; சில பொழுது, சூடாக விவாதித்தனர்.
இருவரும் தங்கள் சார்ந்த தொழில் குறித்து விவாதிப்பது போலவே, அது இருந்தன. பானுமதி என்ற புத்திஜீவிக்கு, நல்ல புரிதலை, சினிமா குறித்த தெளிவை கொடுத்தன.
இந்தத் தருணத்தில், 'வாஹினி' எனும் பெரிய பேனரில் நடிக்க வாய்ப்பு வந்தது.
'இனி, பானுமதி நடிக்க மாட்டார்...' என்று மறுத்த கணவர், 'ஒரே ஒரு படம் நடித்து போகட்டும்...' என, அனுமதித்த படம் தான், ஸ்வர்க்கசீமா.
சுஜாதா என்ற நவநாகரிக, பேராசை கொண்ட அழகான கிராமத்துப் பெண் ஒருத்தி, மோகனாஸ்திரம் வீசி, சமூகத்தில் வேகமாக உயர்வது போன்ற கதாபாத்திரத்தை, அசால்டாக ஊதி தள்ளியிருந்தார், பானுமதி. கதை நாயகன், சித்துார் நாகையா; படத்திற்கான இசையும் அவர் தான்.
பெர்னாட்ஷாவின், பிக்மேலியன் நாடகம் மற்றும் 1941ல் வெளியான, ஆங்கிலப் படமான, பிளாட் அண்ட் சாண்ட் ஆகியவற்றால் உந்தப்பட்டு, ஸ்வர்க்கசீமா என்ற படத்தை எடுத்தார், பி.என்.ரெட்டி.
'ஆங்கிலப் படத்தில், ரீட்டா ஹேவர்த் செய்த கதாபாத்திரத்தில் நடித்த பானுமதி, ரீட்டா, 'ஹம்' செய்த ஒரு மெட்டையும் தனதாக்கிக் கொண்டார்...' என்கிறார், இசை ஆய்வாளர் வாமனன். அதை இந்திய கலாசாரத்திற்கேற்ப மாற்றி மேஜிக் செய்திருந்தார், பானுமதி.
'ஹீரோ'வை மயக்கும் காட்சியில், ரீட்டா முணுமுணுத்த, 'ஸ்பானிஷ்' ராகத்தை பாடலாக்கினால் என்னவென்று,
தனக்குள் அசைப் போட்டார், பானுமதி. காரணம், அந்த முணு முணுப்பில் அப்படியொரு மயக்கும் தொனி இருந்தது.
ஒருநாள், 'வாஹினி ஸ்டூடியோ'வில், படப்பிடிப்பின் போது, ரீட்டாவின் அந்த முணுமுணுப்புக்கு, சுந்தரத் தெலுங்கு வார்த்தைகளை போட்டு, 'ஓஹ்ஹோ பாவுரமா' என்று மேல் நோக்கி, இழுத்து பாடினார்.
அருகிலிருந்த படத்தின் நாயகனும், இசையமைப்பாளருமான நாகையா, ஆர்வம் பொங்க, 'அற்புதம், இதையே பல்லவியாக வைத்து பாடல் உருவாக்கி விடலாம்...' என்றார்.
அதே சிந்தனையில் லயித்து இருந்த சங்கீத வாணி பானுமதி, அனுபல்லவி பாட, கை தட்டி, 'பிரமாதம்...' என்றார். இசை அறிந்த இருவரும் சேர்ந்து மனதை மயக்கும், 'ஓ... பாவுரமா' பாடலை உருவாக்கினர்.
படப்பிடிப்பு, 85 சதவிகிதம் முடிந்த நிலையில், பானுமதி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, தயாரிப்பாளர் நாகி ரெட்டியிடம், அந்த நல்ல சேதியை கூறினார், கணவர் ராமகிருஷ்ணா.
'ரொம்ப மகிழ்ச்சி... மகள் பானுமதிக்கு வாழ்த்துகள்... முக்கியமான எல்லா காட்சிகளும் எடுத்தாச்சு... நடன காட்சியை மட்டும், 'டூப்' வைத்து எடுத்து விடுவோம்...' என்றார்.
கடந்த, 1945ல், ஸ்வர்க்கசீமா படம், வரலாறு காணாத வெற்றி கண்டது.
'ஓ பாவுரமா' என்ற பாடலை பாடி, அனைவரையும் கவர்ந்தார், பானுமதி.
'தமிழகத்தில், அந்த படம், 100 நாள் ஓடியதற்கு, அந்தப் பாடல் தான் முக்கிய காரணமாயிற்று...' என்கிறது, 'தமிழ் சினிமாவின் கதை' எனும் நுால்.
தெலுங்கு, தமிழ் ரசிகர்களின் உதடுகளின் உதயகீதமாக, 'ஓ... பாவுரமா' பாடல் உட்கார்ந்திருந்தது; பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. 'ஓ... பாவுரமா பானுமதி' என்று கூப்பிட்டனர், ரசிகர்கள்.
ஸ்வர்க்கசீமா படத்தின் வெற்றி, பானுமதிக்கு, நட்சத்திர நாயகி
அந்தஸ்தை தந்தது. பானுமதி நடித்தால், படம், 'சக்சஸ்' ஆகும் என்று, அவரை, தங்கள் படங்களில் நடிக்க வைக்க தமிழ் பட தயாரிப்பாளர்கள், ராமகிருஷ்ணாவை சூழ்ந்து கொண்டனர்.
பானுமதியை முதலில் யார் தமிழில் அறிமுகபடுத்துவது என்ற போட்டியை கண்டு, மிரண்டு போனார், ராமகிருஷ்ணா.
பக்ததுருவ மார்க்கண்டேயா என்ற படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் இயக்கி, தயாரித்தார், பானுமதி. படத்தின் கதாபாத்திரங்களுக்கு,
16 வயதுக்குள் உள்ள வாலிபர்களை தேர்வு செய்து, நடிக்க வைத்திருந்தார்.
— தொடரும்
சபீதா ஜோசப்