அன்புள்ள அம்மா —
எனக்கு வயது: 26. முதுகலை தாவரவியல் பட்டபடிப்பை முடித்துள்ளேன். என் பெற்றோருக்கு ஒரே மகள். நான் மிகவும் அழகாக இருப்பேன். 'மாடலிங்' பண்ணவோ, சினிமாவில் நடிக்கவோ போயிருந்தால் மிகப்பெரிய வெற்றியடைந்திருப்பேன்.
எனக்கிருக்கும், 100 நண்பர்களில், 99 பேர் ஆண்கள். நான் காலால் சொல்லும் வேலைகளை தலையால் அவர்கள் முடித்துக் கொடுப்பர். ஆண் நண்பர்களில் வயது வித்தியாசம் பார்க்க மாட்டேன்.
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பி, கடந்த ஒரு ஆண்டாக என் பெற்றோரிடம் படையெடுத்தார். ஆள் பார்க்க நன்றாக இருந்தார். நிறைய சம்பாதிக்கிறார் என்ற காரணங்களுக்காக, திருமணத்துக்கு ஒத்துக்கொண்டேன்.
திருமணமும் நடந்தது. என்னை நன்றாக தான் பார்த்துக்கொள்கிறார், கணவர். இருந்தும், எனக்குள் ஏதோ ஒரு அதிருப்தி.
போன மாதம் மும்பையிலிருந்து, அத்தை மகன், என்னை பார்க்க வந்தான். என்னை விட ஒரு வயது இளையவன். 'விஷுவல் கம்யூனிகேஷன்' முடித்து, மும்பையில், கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறான்.
வழக்கம்போல, நான் அவனுடன் சிரித்து பேசினேன். அப்போதுதான் ஒரு குண்டை போட்டான்.
என்னை, கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு தலையாய் அவன் காதலித்ததாகவும், என்னையே திருமணம் செய்து கொள்ள துடித்ததாகவும் கூறினான்.
அவனை சமாதானபடுத்தினேன்.
'நீ, ஒரே முறை என்னுடன் இருந்தால் போதும். அது, என் ஏமாற்றத்துக்கான மருந்தாக போகும். அதன்பின், நான் உன் வாழ்க்கையில் குறுக்கிடவே மாட்டேன்...' என, கெஞ்சினான்.
நான், எந்த பதிலும் கூறவில்லை.
'உன், 'பாசிடிவ்'வான பதிலை ஒரு மாதத்திற்குள் சொல்...' எனக் கூறி, போய் விட்டான்.
இருபது நாட்களுக்கு முன், வயிற்று உபாதைக்காக, 'கைனகாலஜிஸ்ட்' ஆண் மருத்துவரை போய் பார்த்தேன். மிகவும் இளமையானவராக தெரிந்தார். என்னை, 'குறுகுறு'வென பார்த்தார். என் பிரச்னையை கூறினேன். மருந்து எழுதி கொடுத்தார். என்னை பற்றி ஆர்வமாக விசாரித்தார்.
'உங்க கணவர் ரொம்ப, 'லக்கி!' ஒரு ஆண்டுக்கு முன் பார்த்திருந்தால், நான் உங்களை கல்யாணம் செய்து, தங்க தட்டில் வைத்து தாங்கியிருப்பேன்...' என்றார்.
மவுனமாக இருந்தேன்.
'ஆட்சேபனை இல்லையெனில், உங்க மொபைல் நம்பரை எனக்கு தர முடியுமா?' என, கெஞ்சினார்.
பலத்த யோசனைக்கு பின் தந்தேன். இரண்டு நாட்கள் நல விசாரிப்பு,
எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பினார்.
ஒருமுறை போனில், 'ஐ லவ் யூ... உங்களை பார்த்ததிலிருந்து துாக்கம் வராமல் தவிக்கிறேன். டாக்டர் தொழில் கசக்கிறது. என்னுடன் ஒரே ஒருமுறை படுக்கையை பகிர்ந்து, என் பெரும் தவிப்பை மட்டுப்படுத்துவீர்களா, காத்திருக்கிறேன்...' என்றார்.
நான் பதில் சொல்லவில்லை.
கல்யாணம் ஆன முதல் மாதத்தில், கெஞ்சி, என் அனுமதியுடன், என்னை பல அந்தரங்கமான நிலைகளில் படம் எடுத்திருந்தார், கணவர். அந்த மொபைல், 'ரிப்பேர்' ஆனது. அதை சரி செய்ய, மொபைல் பழுது நீக்குபவரிடம் கொடுத்திருந்தார்.
அவன், என் படங்களை பார்த்து, தொலைபேசியில் இருந்த என் எண்ணை கண்டுபிடித்து, 'உன் அற்புத அழகை
பார்த்து மயங்கி விட்டேன். நான்,
30 வயது இளைஞன். என் ஆசைக்கு, நீ ஒரே ஒருமுறை இணங்காவிட்டால், 'டவுண்லோடு' பண்ணிய படங்களை, 'நெட்'டில் போட்டு நாறடித்து விடுவேன்.
'உனக்கு, 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள், எனக்கு சாதகமான முடிவை எடு...' என்றான்.
திகைத்தேன். இதுபற்றி கணவரிடம் பேசவில்லை. நடப்பது எனக்கு மட்டும்தானா, இல்லை எல்லா இள வயது பெண்களுக்குமா என, மருகினேன்.
இந்த மும்முனை தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என, சரியான ஆலோசனை தாருங்கள் அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும்... ஆண்-, பெண் பாகுபாடு காட்டாமல், பாசம் கொட்டி வளர்க்கும் ஒரு பெற்றோர் வேண்டும். விருப்பப்பட்ட படிப்பை படித்து, தேர்ச்சி பெறும் சூழல் வேண்டும். படித்த படிப்புக்கு பொருத்தமான வேலை அமைய வேண்டும்.
'கேரியருக்கும்' தனித்தன்மைக்கும் குறுக்கே நிற்காத, மனைவியின் இருப்பை அங்கீகரிக்கும் அனுசரணையான கணவனும், இரு அழகிய குழந்தைகளும் வேண்டும். அவ்வளவு தான், ஒரு பெண் பூரித நிலை அடைந்து விடுவாள். ஆனால், இப்போதைய பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறியுள்ளன.
மனைவியின் ஆண் நண்பர்களை, கணவன் கண்டுகொள்ளக் கூடாது. திருமண பந்தம் மீறிய உறவுகளில், சில போனஸ் தாம்பத்யங்கள் அனுபவித்தல் தப்பில்லை. கணவனை தவிர பிற ஆண்கள், 'நீ அழகாய் இருக்கிறாய்...' என, பாராட்டினால் பத்மபூஷண் கிடைத்த திருப்தி.
சிறுசிறு சலுகைகளுக்காக ஆண்களின் இச்சையை துாண்டுவது போல், பேசினால் தப்பில்லை. எல்லாம் கிடைத்தாலும் எதுவும் கிடைக்காத அதிருப்தி மனநிலை. அதற்கான சிறந்த உதாரணம், நீதான். உன் மீதான மும்முனை தாக்குதல்களை கவனிப்போம்.
உன் அத்தை மகனை அழைத்து, நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று.
'உன் ஆசை, ஒரு நாளும் நிறைவேறாது. கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். இனி, நீ எங்கள் வீட்டுக்கு வராதே. 'ஒன்ஸ் பார் ஆல் குட்பை!' மீறி, தொடர்ந்து முயன்றால், விஷயத்தை உன் பெற்றோரிடமும், கணவரிடமும் போட்டு உடைத்து விடுவேன்...'- எனக் கூறி, விஷயத்துக்கு முற்றுபுள்ளி வை.
தாக்குதல் இரண்டு: 'டாக்டருக்கும், நோயாளிக்கும் உள்ள உறவை கொச்சைப்படுத்தாதே. உன்னிடம் சிகிச்சை பெறும் எல்லா பெண் நோயாளிகளிடமும் இப்படிதான் நடந்து கொள்வாயா... உன் மனைவியிடம், யாராவது இதுபோல் நடந்து கொள்ள அனுமதிப்பாயா?
'இதோடு நிறுத்திக் கொள். இல்லையென்றால், உன் துர் நடத்தையை, கணவரிடமும், காவல்துறையிடமும் புகார் கூறுவேன்...'- எனக் கூறி, இப்பிரச்னைக்கும் முற்றுபுள்ளி வை.
தாக்குதல் மூன்று: நிறைய கணவன்மார்கள், தங்கள் மனைவியரின் அந்தரங்க அழகுகளை புகைப்படம் எடுத்து ரசிக்கின்றனர். இது, ஒரு ஆபத்தான பொழுதுபோக்கு; ஒரு வகை, 'எக்ஸிபினிஸம்!' சற்றும் தாமதிக்காமல் மொபைல், 'ரிப்பேர்' ஆசாமியின் சீண்டலை கணவரிடம் கூறி, மேல் நடவடிக்கை எடுக்க வை.
உன் கைபேசி எண்ணை மாற்று. 'எந்த அந்தரங்க படமும் எடுக்கக் கூடாது...' என, கணவரிடம் கண்டிப்பாக கூறி விடு.
உனக்கு பாதிப்பு வரும் வகையில் யாராவது பேசினால், மவுனமாக இருக்காதே. வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி, உன் எதிர்ப்பை பதிவு செய்.
உடல் அழகு அநித்தியமானது. ஒரு குழந்தை பெற்ற பின் மறைந்து விடும். உள்ள அழகை பிரகாசமாக்கு. ஒருவனுக்கு ஒருத்தி என்பதை, தாரக மந்திரமாக கொள்.
அலையும் மனதை நங்கூரமிட்டு, வாழ்க்கை பயணத்தை பாதுகாப்பாக்கு மகளே!
— -என்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்