பிப்., 24 ஜெயலலிதா பிறந்தநாள்
எஸ்.கிருபாகரன் எழுதிய, 'ஜெ., ஜெயலலிதா என்னும் நான்... அம்மாவின் கதை!' நுாலிலிருந்து:
தன் அரசியல் பயணம் குறித்து, ஒருமுறை பேட்டியில், ஜெயலலிதா கூறியது:
ஒரு பெண்ணாக, தமிழகத்தில் அரசியல் பயணம் நடத்துவது, எளிதான பணி அல்ல. இது, நெருப்பாறு. வஞ்சகம், சூழ்ச்சியுடன் நன்றி மறந்த பலரும் எழுதும், திரைக்கதை வசனங்கள் நிறைந்தது. இருப்பினும், இவற்றுக்கு அஞ்சி இந்த கடமையை கைவிட்டு விடக்கூடாது என்பதை, பொதுவாழ்வின் துவக்கத்திலேயே தெரிந்து கொண்டேன்.
என் அரசியல் குரு எம்.ஜி.ஆருக்கு, நான் அளித்த வாக்குறுதியை, என் மனசாட்சிக்கு சரியென்று தெரிந்தவரை, இதுவரை நிறைவேற்றி விட்டேன் என்ற மன நிலையும், நிம்மதியும் இப்போது எனக்கு இருக்கிறது, என்றார்.
அவர் பேசிய இந்தப் பேச்சு, பொதுவாழ்வில் தான் வெற்றி பெற்றதைப் பிரகடனப்படுத்தியது போல் இருந்தது. ஆனால், தனிப்பட்ட வாழ்வில் அவருக்கு இந்த வெற்றியை, விதி கொடுக்கவில்லை.
ஒரு பெண்ணுக்கென இயற்கை அளித்த எந்த குறைந்தபட்ச சலுகைகளைக்கூட, அவர் பெற முடியாமல் தான், தன் வாழ்க்கையை நிறைவு செய்தார்.
'என் வாழ்வை வழிநடத்துவது விதிதான்...' என, ஒருமுறை சொல்லியிருக்கிறார், ஜெயலலிதா.
கடந்த, 1973-ல், 'சாமான்யன்' என்ற பத்திரிகையின் பேட்டியில், 'நீங்க முதல்வராக வந்தால், மக்களுக்கு என்னென்ன செய்வீங்க?' என, கேட்கப்பட்டது.
அதற்கு அவர், 'கேட்கறது தான் கேட்கறீங்க... பிரதமரானால் என்ன செய்வீங்கன்னு கேளுங்க...' என்றார், கிண்டலாக.
அவ்வாறே கேள்வி கேட்க, 'முதல்ல மக்கள் மீது போடப்பட்டுள்ள வரிச்சுமையை குறைப்பேன். அதோடு, ஆட்சி அதிகாரத்தில் மேல்மட்டத்தில் நிலவும் லஞ்ச ஊழலை அடியோடு குறைப்பேன்...' என்றார்.
ஆங்கில,'டிவி' ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தன் வாழ்வின் கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டவர், தன் திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசினார்:
நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?
அப்படி ஒன்று நடக்கவில்லை.
திருமணம் செய்து கொள்ளக்கூடிய தகுதியுடன் யாரையாவது சந்தித்திருக்கிறீர்களா... இவரை
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, எப்போதாவது தோன்றியது உண்டா?
இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், எல்லா இளம்பெண்களைப் போலவே எனக்கும் திருமணம் குறித்த கனவுகள் இருந்ததுண்டு. எனக்கான இளவரசர், தகுதியுடைய ஒருவரை கற்பனையில் நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.
என், 18 வயதில், அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால் மிக மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கி இருப்பேன். குடும்பம், குழந்தை என, அந்த வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன். வீட்டை விட்டு வெளியுலகுக்கு வந்திருக்கவே மாட்டேன். ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே...
திருமண வாழ்க்கை அமையாதது குறித்து, எனக்கு எப்போதும் வருத்தம் இருந்ததில்லை. என் சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன். தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகள் உள்ளிட்ட, மணவாழ்வின் பிரச்னைகளை கேள்விப்படும் போது, திருமணம் ஆகாதது குறித்து சந்தோஷப்படவே செய்கிறேன்.
இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை, யாருக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வலிந்து வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை, நான் விரும்பவே செய்கிறேன்.
— இவ்வாறு கூறியுள்ளார்.
நடுத்தெரு நாராயணன்