முன்கதை சுருக்கம் : ஜோதி இறந்த துக்கத்தில் இருந்த, மாமா பொன்னப்பரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாங்களும் இங்கேயே வந்து கூட்டுக் குடும்பமாக இருப்பதாக, மச்சினர்கள் கூற, புது தெம்பு அடைந்தாள், பர்வதம் -
சாம்பசிவத்தின் கைபேசி ஒலித்தது. எடுத்து காதில் வைத்துக் கொண்டார். வந்த சேதியை கேட்டு, ''என்னப்பா... ஈஸ்வரா...'' என்று அரற்றினார்.
''எப்போ?'' என்று மட்டும் கேட்டார்.
''அப்படியா... அந்தம்மாவை பார்த்து விசாரிக்கணும். வரேன், வர முயற்சி பண்றேன்.''
கைபேசியை அணைத்து விட்டு, ஒரு விநாடி கண் மூடி அமைதியாக இருந்தார். எதேச்சையாக கூடத்திற்கு வந்த, ராஜாராமன், அவரை பார்த்து கேட்டான்.
''என்னப்பா?''
''புவனாவோட அப்பா போயிட்டாராம்.''
திடுக்கிட்டான், அவன்.
''என்னப்பா இது?''
''என்ன சொல்றது?''
''எப்போப்பா?''
''வெள்ளிக்கிழமை. புவனாவோட கல்யாணம் நடந்த அதே நாள், அதே நேரம்.''
''என்னப்பா ஆச்சு?''
''சாவு வர்றதுக்கு ஏதோ ஒரு காரணம். மகா மானஸ்தன். கவரி மான். போய் விட்டார்.''
''புவனாகிட்ட இதை எப்படிப்பா சொல்றது?''
''சொல்லித்தானே ஆகணும். வா, மாந்தோப்பு வீட்டுக்கு போகலாம்.''
''அப்பா, புதுசா கல்யாணம் ஆனவாப்பா.''
''அதுக்கென்ன பண்ண முடியும். ஈஸ்வர சங்கல்பத்தை யாரால மாத்த முடியும்... கர்மவினையை அனுபவிச்சு தானே ஆகணும்.''
இருவரும் போனபோது, புவனாவும், கார்த்திகேயனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
சாம்பசிவத்தை கண்டதும், மிக இயல்பாக, ''வாங்கப்பா...'' என்றாள், புவனா.
அதையே, சொல்ல வந்த செய்திக்கான வாய்ப்பாக்கிக் கொண்டார்.
''இனிமே, நான் மட்டும் தான் உனக்கு நிரந்தர அப்பா.''
''என்னப்பா சொல்றீங்க?''
''உன்னை பெத்த அப்பா போய்ட்டார்மா...'' சட்டென்று கொட்டி விட்டார், அவர்.
ஒரு வினாடி ஆடிப்போனாள், புவனா. பின்னர் துடித்துப் போனாள்.
''எப்போப்பா... என்ன ஆச்சு?''
எப்போ என்பதற்கு பதில் சொல்லவில்லை அவர். என்ன ஆச்சு என்பதற்கு மட்டும், ''ஹார்ட் அட்டாக்காம்மா... கிளம்புங்க ரெண்டு பேரும்... மெட்ராஸ் போகலாம்.''
அதற்குள், கையில் செய்தித்தாளுடன் ஓடி வந்தான், ஒருவன்.
''ஐயிரே...'' என்று தயங்கி நின்றான்.
''என்ன முருகா?''
''சித்தாம்பட்டி ஜமீந்தாரு உங்களுக்கு தெரியும்ன்னு சொல்லுவீங்கள்ல?''
''ஆமா, அதுக்கென்ன இப்ப?''
''ஒண்ணுமில்லீங்க சாமி...'' என்று தயங்கினான்.
''எந்த ஊர் ஜமீந்தாருன்னு சொன்னப்பா?'' என, பதட்டத்தோடு கேட்டான், கார்த்திகேயன்.
''சித்தாம்பட்டிங்க...''
''என்ன அவருக்கு?''
''துாக்கு மாட்டிக்கிட்டு செத்துட்டாராம். பேப்பர்ல போட்டோவோட வந்திருக்குது.''
பரபரப்புடன் செய்தித்தாளை அவன் கையிலிருந்து வாங்கிப் பார்த்த கார்த்திகேயன், ''ஐயோ, அப்பா...'' என்று கதறினான்.
இரட்டை மரணம் என்ற தலைப்பில், பொன்னப்பர், ஜோதி இருவரின் புகைப்படங்களோடு முழு செய்தியும் வெளியாகி இருந்தது.
'தான் வளர்த்த தங்கை மகளின் மரணத்தை தாங்க முடியாத பொன்னப்பர், துாக்கிட்டு தற்கொலை...'
''ஐயோ... ஐயோ...'' என்று, செய்தித்தாளை, ராஜாராமனிடம் நீட்டினான்.
அவசர அவசரமாக படித்த ராஜாராமன், செய்வதறியாது தடுமாறினான்.
இப்போது யாருக்கு ஆறுதல் சொல்வது, புவனாவுக்கா, கார்த்திகேயனுக்கா... ஒன்றின் மீது ஒன்றாக இது என்ன பேரிடி. எப்படி தாங்க முடியும். அதிலும், இரண்டு பேரை பறி கொடுத்திருக்கும், கார்த்திகேயன் நிலமை இன்னும் மோசம்.
மெல்ல கார்த்திகேயன் தோளை தொட்டான்.
''முடியல, ராஜாராமன்... என்னால தாங்க முடியல...'' கதறியவனின் அருகில் போனாள், புவனா.
''எழுந்திருங்க... முதல்ல ஊருக்கு கிளம்பலாம்...''
அவர்களோடு, ராஜாராமன் மட்டுமே வந்தான்.
முதலில் சென்னைக்கு போய், பின்னர் கார்த்திகேயனின் கிராமத்துக்கு போவதென தீர்மானிக்கப்பட்டது. வழியில் எங்கும் நிறுத்தாமல், மூன்று மணி நேரத்தில் சென்னை வந்தடைந்தனர்.
வீட்டுப்படி ஏறியவர்களை, முதல் சித்தப்பாவின் குரல் தடுத்து நிறுத்தியது.
''எங்க வந்தீங்க... அங்கேயே நில்லுங்க...''
ரேழிக்குள் அதிர்ச்சியோடு நின்றனர்.
''சித்தப்பா... அப்பா...'' என்றாள்.
''உனக்கு, இந்த வீட்ல சித்தப்பாவுமில்ல... அப்பாவுமில்ல...''
தாங்க முடியாமல் அழத் துவங்கினாள், புவனா.
''என்ன சித்தப்பா, இப்படி நிர்தாட்சண்யமா பேசறீங்க?''
''அன்னிக்கு நீ செஞ்சது மட்டும் என்ன... தாட்சண்யமா?''
அதற்குள் கூடத்திற்குள் சொந்தங்கள் கூடின. பர்வதத்தை தவிர, அத்தனை பேரும் வந்தனர்.
''சின்ன சித்தப்பா... நீங்களாவது சொல்லுங்க...''
''அன்னிக்கு, இத்தன சொந்தமும் பெரிசாத் தெரியல. வேணாம்ன்னுதான முடிவெடுத்த... இன்னிக்கு மட்டும் என்ன வேண்டிக்கிடக்கு?
''உன்னாலத்தான் அண்ணாவுக்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்தது. எல்லாரையும் அம்போன்னு உட்டுட்டு போனார். எந்த மூஞ்சிய வச்சுண்டு இங்க வந்து நிக்கற?''
''பெரியம்மா...''
பெரிய மன்னி முன்னால் வந்தாள். கோபம் காட்டாமல் அமைதியாக, ஆனால், ஒவ்வொரு வார்த்தைகளும் அழுத்தமாக வந்தன.
''இதப்பாரு புவனா... இந்த குடும்பத்தால உன் துரோகத்த மறக்க முடியாது. அதை தாங்கிக்க முடியாம தான், உங்கப்பா உசுர விட்டார். உறவுங்கிறது கண்ணாடி பாத்திரம் மாதிரி. கை நழுவ விட்டா, விழுந்து உடைஞ்சிடும். அப்புறம் ஒட்ட வைக்க முடியாது. இதுக்கு மேல சங்கடப்படுத்தாம கிளம்பிப் போயிடு.''
''பெரியம்மா... அம்மாவ ஒரு தரம் பார்த்துட்டு போயிடறேன்.''
''பர்வதம், உன்னை எப்படி பார்ப்பா... உன் கழுத்துல திருமாங்கல்யம் ஏறணும்ன்னு, அவ கழுத்து திருமாங்கல்யத்தை கழட்டி, பால்ல போட வச்சவ நீதானே...''
''பெரி... ய... ம்மா...''
''இதை கேட்டுக்கிற உனக்கே அதிர்ச்சியா இருந்தா, அனுபவிச்ச அவளுக்கு எப்படி இருக்கும்?''
கரகரவென்று கண்ணீர் வடித்தாள், புவனா.
''அழாத. இப்போ அழுது என்ன பிரயோஜனம். அதுவுமில்லாம உங்கம்மா, உன்னை இப்போ பார்க்க கூடாது. புதுசா கல்யாணம் ஆனவ. உங்கம்மா, என்னை மாதிரி நிக்கறவ. அப்படி பார்க்கக் கூடாதுங்கிறது சாங்கியம்...''
சிறிது நேரம் தயங்கி நின்றாள், புவனா.
''வெறும ஏன் கால் கடுக்க நிக்கிற... உன்னால புருஷாள்லாம் நிக்கறா பாரு... கிளம்பும்மா.''
அதற்கு மேல் நின்று பயனில்லை என்றுணர்ந்தவள், திரும்பி, கார்த்திகேயனையும், ராஜாராமனையும் பார்த்தாள்.
''போகலாம், வாங்க.''
அடுத்த நிமிடம் கார் கிளம்பிற்று.
எல்லையில் நுழைந்தபோதே வித்தியாசம் தெரிந்தது. வழக்கத்திற்கு மாறாக அமைதியாக கிடந்தது, ஊர். கார் வருவதை கண்ட சிலர், எழுந்து நின்றனர். காரின் பின்னாலேயே சிலர் வந்தனர்.
வீட்டு வாசலில் நின்ற காரிலிருந்து இறங்கிய கார்த்திகேயனை பார்த்ததும், தோளில் கிடந்த துண்டை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டனர், சிலர். பின்னாலேயே வந்த புவனா, கண்ணில் பட்டதும், ஒட்டு மொத்தமாக அத்தனை பேர் முகங்களும் சுருங்கின.
'நம்ம சின்னம்மாவும், பெரிய ஐயாவும் சாக காரணமானவ இவதானே...' என்ற வன்மம் தலை துாக்கிற்று.
கார்த்திகேயன் படிகளில் ஏறியதும், தலைவிரி கோலமாக உள்ளேயிருந்து ஓடி வந்தாள், பூவாயி.
''கார்த்தி... ஒங்கொப்பாரு, நம்மளயெல்லாம் உட்டுட்டு போயிட்டாரேடா...''
அதற்குள் வாசலுக்கு வந்த, செல்லாயி, ஆவேசமாக புவனாவை நெருங்கி, அவளது கன்னங்களில் மாறி மாறி அறைந்தாள்.
''அடிப்பாவி, ஒன்னாலத்தானேடி எம் மவ வெஷங் குடிச்சு செத்தா... எம்புட்டு தைரியமிருந்தா இந்த வூட்ல காலடி எடுத்து வப்ப?''
புவனாவின் தலைமுடியை பற்றி உலுக்கத் துவங்கியபோது, இடையில் புகுந்தான், கார்த்திகேயன்.
''அத்தை... என்ன வேலை செய்யுறீங்க?''
''ஆமாண்டா... எப்பேர்பட்டவன் உங்கொப்பன். அவனையே நாண்டுக்கிட்டு சாகடிச்சவ இவ... இவளுக்கு பரிஞ்சுக்கிட்டு வர்றியா... ஆச காட்டி, எம்மவள மோசம் பண்ணியே... ஒங்கிட்ட வேற எதடா எதிர்பாக்க முடியும்?''
''அத்தை... ஒங்க மகளுக்கு என்னிக்குமே நா ஆச காட்டுனதில்ல...''
''இப்ப பேசுவடா... ஏண்டா பேச மாட்ட... வெள்ளையும் சொள்ளையுமா இவளக் கண்டதும், மனசு மாறிட்ட... இதப்
பாருடா, எம் மவ செத்த மாதிரி, இவ துடி துடிச்சு செத்தாதாண்டா எம் மனசு
ஆறும்...''
''அத்தை, கொஞ்சம் பேசாம இருங்க...''
''நா எதுக்குடா பேசாம இருக்கணும்... அடேய் ஏழுமல, வரதா... என்னடா பாத்துக்கிட்டு நிக்கறீங்க... இவள வெட்டி பொலி போடுங்கடா...''
அடுத்த நிமிடம் அதற்கெனவே காத்திருந்தவன் போல, கூட்டத்தில் ஒருவன் அரிவாளுடன் புவனாவை நோக்கி ஓடி
வந்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில், சரேலென்று இடையில் புகுந்து தடுத்த ராஜாராமனின்
கையில், அரிவாள் விழுந்தது. வெட்டுப்பட்ட ராஜாராமன், ரத்த வெள்ளத்தில்
சரிந்தான்.
— தொடரும்
இந்துமதி