தேயிலையின் பூர்வீகம்!
தென்கிழக்கு ஆசியா தான் தேயிலை செடியின் பூர்விகம். ஆசிய நாடான சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சியில் தேயிலை முதன்முறையாக பயிரிடப்பட்டது.
உலக அளவில் தேயிலை உற்பத்தியில், சீனா முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. வட கிழக்கு மாநிலங்களான அசாம், மேற்கு வங்கம் ஆகியவை உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றன.
கேரளாவில், 'கட்டஞ்சாயா' என்ற பானம் பிரசித்தி பெற்றது. கொதிக்கும் நீரில், தேயிலைத் துளை கொட்டி இனிப்பு கலந்தால் இந்த சுடுபானம் தயார்.
கடல்நீர் உப்பு!
பூமியின் பரப்பளவில், 71 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதில், 98.5 சதவீதம் உப்பு தண்ணீர். மழைநீர், பாறை, மணல்வெளியில் விழுந்து ஓடுகிறது. அப்போது நிலத்தில் உள்ள உப்பை கரைத்து எடுத்து செல்கிறது.
கடலில் சேரும் நீர், வெப்பத்தால் ஆவியாகிறது. உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விடுகிறது. ஆவியாகும் நீர் மீண்டும் மழையாக பொழிகிறது. சுழற்சியில் வரும் உப்பு, கடலில் தங்கிவிடுவதால், கடல்நீர் உப்பாக இருக்கிறது.
பிறந்தவுடன் ஓடும்!
விலங்குகளில் உயரமானது ஓட்டக சிவிங்கி. ஆப்பிரிக்க காடுகளில் அதிகம் காணப்படுகின்றன. ஒட்டகம் மாதிரி உயரமாகவும், சிறுத்தை மாதிரி உடல் வண்ணமும் பெற்றிருப்பதால் ஒட்டக சிவிங்கி என பெயர் வந்தது.
இது, 16 முதல் 18 அடி உயரம் வரை இருக்கும். நீண்ட கழுத்தை உடையது. வெப்பமான பகுதியில் வாழ்கிறது. தோலுக்காக அதிகளவில் வேட்டையாடப்படுகிறது. ஒட்டக சிவிங்கியின் குட்டிகள் பிறந்த சில மணி நேரங்களில் எழுந்து ஓடும்.
துாண்டில் கொக்கு!
துாண்டில் போட்டு மீன் பிடிப்பது மனிதனின் அறிவு உத்தியால் நடக்கிறது. இதுபோல சில பறவைகளும் உத்தியை கடைபிடித்து வேட்டையில் ஈடுபடுகின்றன.
பறவை இனத்தில், 'ஹெரான்' என்ற கொக்கு வகையும் ஒன்று. இதை தமிழகத்தில், குருகு என்றழைப்பர். மீன்களை வேட்டையாட, இது நுாதன உத்தியை கடைபிடிக்கிறது. சிறிய வண்டு அல்லது பூச்சியை, தண்ணீரில் போட்டு கவனித்தபடி காத்திருக்கும்.
எறும்பை பிடிக்க, நீரின் மேல்பகுதிக்கு வரும் மீன்களை, பாய்ந்து வேட்டையாடி இரையாக்கும்.
பெரிய விஷயங்களை செய்ய, சிறியதை விட்டுக் கொடுப்பவரை, 'கிரீன் ஹெரான்' என, ஆங்கிலேயர் அழைப்பர்.
டைனோசர் முட்டை!
கிழக்கு ஆசியாவில் மிகப் பெரியது கோபி பாலைவனம். இது, ஆசிய நாடான சீனாவின் வடகிழக்குப் பகுதி முதல் கிழக்காசிய நாடான மங்கோலியாவின் தெற்குப்பகுதி வரை பரவி உள்ளது. பெரும்பாலும், மணல் பாங்காக இல்லாமல், கற்களாக உள்ளது.
இதன் நீளம், 1500 கிலோ மீட்டர்; அகலம், 800 கிலோ மீட்டர். பரப்பளவு, 12.95 லட்சம் சதுர கிலோ மீட்டர்; கடல் மட்டத்திலிருந்து, 2990 முதல், 4990 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
சராசரியாக ஆண்டுக்கு, 194 மி.மீ., மழை பொழியும். இங்கு, தொல்லுயிரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், டைனோசர் முட்டையும் அடங்கும்.
அலையாத்தி!
கடல் அரிப்பைத் தடுக்க, 'மாங்குரோவ்' என்ற அலையாத்தி காடுகள் பயன்படுகின்றன. இந்த வகை காட்டு மரங்கள், கடல் நீரில் வளர்வதில்லை. கடல் நீரை உறிஞ்சி, உப்பை பிரித்து நல்ல நீரை எடுத்து தான் வளர்கின்றன.
இந்த மரங்களின் விழுது, ஆல் போல படரும். முகத்துவார பகுதிகளில் அலையாத்தி காட்டு தாவரங்கள் வளரும்.
- ஜோ.ஜெயக்குமார்