அக்பர் அரசவையில் பாடகராக இருந்தவர் தான்சேன்.
அன்று பொருள் நிறைந்த பாடல் ஒன்றை இசையுடன் பாடி, அக்பரை மகிழ்வித்தார்.
அதைக் கேட்டு, 'மிக இனிமையாக இருக்கிறது; ஆனாலும், ஒரு வினா எழுகிறது; உங்களை விட இனிமையாக பாடக்கூடிய யாராவது இருக்கின்றனரா...' என்று கேட்டார் அக்பர்.
'என் குரு ஹரிதாஸ் பாடுவார்; ஆனால், உங்கள் தர்பாருக்கு வர மாட்டார்; யாருடைய கட்டளைக்கும் இணங்கிப் பாடக்கூடியவரல்ல...' என்று கூறினார் தான்சேன்.
'அப்படியா... ஹரிதாசின் பாடலை எப்படியாவது கேட்டாக வேண்டும்...' என்றபடி, யோசிக்க துவங்கினார்.
மறுநாள், ஹரிதாஸ் இருப்பிடத்திற்கு மாறுவேடத்தில் சென்றார் அக்பர்.
அப்போது, ஒரு பாடலைத் தவறாக பாடிக்கொண்டிருந்தார் தான்சேன்; அப்பாடலை செவியில் வாங்கி, தவறை திருத்தி மிக அழகாக பாடி பரவசத்தில் ஆழ்த்தினார் ஹரிதாஸ்.
தேவகானம் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளி, பரவசத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அக்பர்.
அரண்மனைக்கு திரும்பும் வழியில், 'உங்கள் குருவைப் போல ஏன் இனிமையாகப் பாட முடியவில்லை...' என்று கேட்டார் அக்பர்.
'பொருள் பெற வேண்டி, உங்கள் கட்டளைப்படி மகிழ்விக்கும் விதமாக பாடுகிறேன்; என் குருவோ, இறைவனை மகிழ்விக்கவே பாடுகிறார்; யாரும் அவருக்கு கட்டளை இடுவதில்லை; எதையும் எதிர்பார்ப்பதில்லை. அதனால்தான், அவரது பாடல் இனிமையாக அமைகிறது...' என்றார் தான்சேன்.
அந்த குருபக்தியை பாராட்டி மகிழ்ந்தார் அக்பர்.