தமிழகத்தில், மாரியம்மன் வழிபாடு பிரபலம். யார் இந்த மாரியம்மன்?
திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான, பரசுராமரின் அம்மா, ரேணுகா தான், மாரியம்மனாக பரிணாமம் பெற்றாள். இவளுக்கு, பல இடங்களில் கோவில்கள் உள்ளன. அப்படியானால், மூல தேவியான ரேணுகாவுக்கும் கோவில் இருக்க வேண்டும் அல்லவா!
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகிலுள்ள நரசிங்கம்பேட்டை, மகா மாரியம்மன் கோவிலில், ரேணுகாதேவி அருள்பாலிக்கிறாள்.
பரசுராமரின் அப்பா, ஜமதக்னி. இவரது மனைவி, ரேணுகா.
இவள், தினமும் கணவர் நடத்தும் பூஜைக்கு ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவாள். தன் கற்புத்திறனால், ஆற்று மணலில் குடம் செய்து விடுவாள். ஒரு பாம்பை சுருட்டி தலையில் வைத்து, அதன்மேல் குடத்தை வைப்பாள். பாம்பு, குடத்தை சிக்கென பிடித்துக் கொள்ளும்.
ஒருநாள், தேவலோக கந்தர்வர்கள் சிலரது அழகு கண்டு வியந்தாள். பிற ஆண்களை மனதில் எண்ணிய ஒரே காரணத்திற்காக, அவளது கற்புத்திறன் அழிந்து, குடம் உடைந்தது. தண்ணீர் இன்றி வெறுங்கையுடன் ஆஸ்ரமம் திரும்பியதுமே, ஜமதக்னிக்கு, விஷயம் புரிந்து விட்டது.
வசு, விஸ்வாவசு, பிருகத்யானு, பிருத்வான் கண்வர், பரசுராமர் என, ஐந்து புதல்வர்கள், ஜமதக்னிக்கு.
மூத்தவனை அழைத்து, கற்புக்கு களங்கம் கற்பித்த, அம்மாவை வெட்டச் சொன்னார். அவன் மட்டுமல்ல, அடுத்த மூன்று புதல்வர்களும் மறுத்து விட்டனர். தன் பேச்சைக் கேட்காதவர்களை, சாம்பலாக்கி விட்டார், ஜமதக்னி.
கடைசி புதல்வரான பரசுராமர், அப்பா சொன்னதைச் செய்தார்.
மகனை பாராட்டிய ஜமதக்னியிடம், 'அப்பா... நான் செய்தது பாவம். என் அம்மா, மீண்டும் உயிர் பெற வழி செய்யுங்கள். மரணத்துக்கு பின் எழுவதால், அவள் மறு பிறவி எடுத்தவளாகிறாள். அவளை மன்னியுங்கள்...' என்றார்.
அதற்கு சம்மதித்த ஜமதக்னி, அவளுக்கும், மற்ற மகன்களுக்கும், உயிர் பிச்சை அளித்தார். ஆயினும், தன் மனைவியாக ஏற்கவில்லை. 'நீ, மழை தரும் தெய்வமாக இருந்து, பயிர்த்தொழிலை விருத்தி செய்...' என்றார்.
மழையை, மாரி என்பர். எனவே, அவள் மாரியம்மன் ஆனாள். வடமாநிலங்களில், இவளை, 'எல்லம்மா' என்பர். அங்கே, கதையில் சற்று மாற்றம் உண்டு.கணவரால் துரத்தப்பட்டு, சில முனிவர்களின் உதவியோடு, சிவ பூஜை செய்து, சாபம் நீங்கி, சிவனருளால் தெய்வ சக்தி பெற்றாள் என்றும் கூறுவர்.
ரேணுகா எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, 'மணலில் இருந்து' என, பொருள். ஒரு மன்னனின் மகளாக, யாக குண்டத்தில் இருந்து பிறந்தவள். பின், ஜமதக்னிக்கு சேவை செய்து, அவரையே கணவனாக அடைந்தவள் என்பது, வடமாநிலங்களில் உலவும் வரலாறு.
தஞ்சாவூரில் இருந்து ஆடுதுறை, 55 கி.மீ., இங்கிருந்து, சீர்காழி செல்லும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில், நரசிங்கம்பேட்டை. இங்குள்ள, மகா மாரியம்மன் கோவிலில், பரிவார தேவதையாக, ரேணுகா தேவியை தரிசிக்கலாம்.
தி. செல்லப்பா