பா-கே
அலுவலகத்துக்கு வந்த லென்ஸ் மாமா, ஒரு பக்க காதை பொத்தியபடி வந்து, என் எதிரில் அமர்ந்தார்.
'என்ன மாமா... காதை பொத்தியபடி வர்றீர். அதிக சத்தம் கூட இல்லையே...' என்றேன்.
'நிலைமை தெரியாம பேசாத மணி... காது வலிக்கிறது. டாக்டரிடம் போகணும். துணைக்கு நீயும் வா...' என்று வலுக்கட்டாயமாக என்னையும் இழுத்துச் சென்றார்.
நகரின் புகழ்பெற்ற, ஈ.என்.டி., மருத்துவர், அவர். முன்கூட்டியே அவரிடம் அனுமதி வாங்கியிருந்தார், மாமா.
உள்ளே அழைத்துச் சென்று, பரிசோதனை செய்தார், டாக்டர்.
'காதை சும்மா குடைந்து கொண்டே இருக்கக் கூடாது. அடிக்கடி, 'பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது. குளிக்கும்போது தண்ணீர் காதினுள் சென்று விட்டால், உடனே, கை விரலால் குடையக் கூடாது. எந்த காதில் தண்ணீர் புகுந்ததோ, அந்த பக்கமாக சிறிது நேரம் தலையை சாய்த்து வைத்திருந்தால் போதும், தண்ணீர் வடிந்து விடும்...'
இப்படி, பல, 'அட்வைஸ்'கள் கூறியது, என் காதில் விழுந்தது.
வெளியே வந்து சொட்டு மருந்து எழுதிக் கொடுத்தார்.
'நம் காதுகளை பற்றி சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்...' என்று, தொடர்ந்து கூற ஆரம்பித்தார்:
காது எதுக்கு இருக்கு என்று, யாரையாவது கேட்டால், கேட்பதற்கு என்பர். ஆனால், காது இன்னொரு முக்கியமான விஷயத்தையும் செய்கிறது. நம் கால்கள் தரையில் ஊன்றி நிற்பதற்கு காரணம், காது தான். மனிதன் மயங்கி சரிந்து விடாமல் மொத்த உடல் அமைப்பையும் சமநிலைப்படுத்த, காது அவசியம்.
இரு சக்கர வாகனத்தில், அதன் இரண்டு டயர்களால் நிற்க முடிவதில்லை. ஆனால், மனிதன் மட்டும் எப்படி இரு கால்களால் நிற்கிறான்?
பைக் நிற்க கூடுதலாக, 'ஸ்டாண்ட்' தேவைப்படுகிறது. அதனால், தன்னை தானே சமநிலைபடுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆனால், மனிதனால் அது முடியும். அவன் வடிவம் நிற்க முடியாத நிலையில் இருந்தாலும், காதில் உள்ள, காக்லியா திரவம், அவனை சம நிலையுடன் நிற்க வைக்கிறது.
'டெட் பாடி'யை நிற்க வைக்க முடியாது. ஏனென்றால், அது சமநிலை தவறி விட்டது. அதேநேரம், உயிருடன் இருப்பவனால் நிற்க முடிகிறது.
காது கேட்பதற்கும், காக்லியா திரவம் உதவுகிறது. ஒலி அலைகளை காது மடல்கள் உள்வாங்கி, காக்லியாவை அதிர்வடைய வைத்து, அந்த அலைகள் பல ஆயிரம் வழிகளில் அலைந்து, திரிந்து, மைக்ரோ நொடியில், நம் மூளைக்கு சத்தங்களை உணர வைக்கிறது.
10 அல்லது 15 டெசிபல் சத்தங்கள் வரை, காது கேட்க போதுமானது. அதை மீறும்போது, காதில் பிரச்னை வரும்.
முதலில் மயக்கம், தலை சுற்றல், வாந்தி, மண்டை வலி என தொடர்ந்து, இறுதியில், காது கேட்கும் திறன் குறைந்து விடும்.
மிக அற்புதமான வடிவம் கொண்டது, காதின் மடல்கள். மண்ணெண்ணெய் அடுப்பில் புனல் வைக்காமல், அப்படியே எண்ணெயை ஊற்றினால் எப்படி சிதறி போகும். அதே போன்று தான், காது மடல்கள்.
இல்லாவிடில், சத்தங்கள் நேரடியாக மண்டைக்குள் மோதி, அதுவே நம்மை கொன்று விடும். அவ்வளவு வலிமையுடையதாக இருக்கும். அதை தான், காது மடல்களும் அதை சுற்றியுள்ள சிக்கலான அமைப்புகளும், 'பில்டர்' செய்கிறது.
- இவ்வாறு கூறி முடித்தார், டாக்டர்.
'அப்பாடா... இவ்வளவு விஷயங்கள் உள்ளதா... லென்ஸ் மாமாவால், இன்று ஒரு நல்ல, 'மேட்டர்' கிடைத்தது...' என்று நினைத்து, லென்ஸ் மாமாவின் கையிலிருந்த, 'பிரிஸ்கிரிப்ஷனை' வாங்கி, மருந்து கடைக்கு சென்றேன்.
ப
ஒருசமயம், தன் அமைச்சர் பெருமக்களுடன் பொழுது போக்காக பேசிக் கொண்டிருந்தார், அக்பர். அப்போது, 'எது சிறந்த பொருள்... உண்மையான பொருளா, போலியான பொருளா...' என்று கேட்டார்.
அனைவருமே, 'இதில் என்ன சந்தேகம்... நிச்சயம் உண்மையான பொருள்தான் உயர்ந்தது. அதற்கு தான் மதிப்பு அதிகம்...' என்றனர்.
பேசாமல் இருந்த பீர்பாலிடம், 'என்ன, நீ ஒன்றுமே சொல்லவில்லை...' என்றார், அக்பர்.
'என்னைக் கேட்டால், போலியான பொருளுக்குதான் மதிப்பு அதிகம்...' என்றார், பீர்பால்.
'பீர்பால்... நீ எப்போது பார்த்தாலும் மற்றவர்கள் கூறுவதை எதிர்த்தே, உன் கருத்தை கூறுகிறாய். ஏன் அப்படி... சரி சரி... நீ சொன்னது சரி என்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா...' என்று கேட்டார், அக்பர்.
அதற்கு ஒப்புக்கொண்டார், பீர்பால்.
'ஆஹா... தொலைந்தான் பீர்பால்...' என, சபையில் இருந்த சிலர் மகிழ்ந்தனர்.
மறுநாள், கைவினைப்பொருள் தயாரிக்கும் கலைஞரிடம் சென்றார், பீர்பால். அழகான மலர்கள், காய்கறிகளை செயற்கையாக தயாரித்து வருமாறு கூறி அனுப்பினார்.
அவனும், அதன்படி கண்ணைக் கவரும் விதத்தில் தயாரித்து எடுத்து வந்தான். அவை நிஜம் போலவே இருந்தன.
'இதை, நாளை அரண்மனைக்கு எடுத்து வா... மன்னர், விலை என்ன என்று கேட்டால், 1,000 மொகராக்கள் என்று சொல்...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.
பிறகு, தோட்டக்காரன் ஒருவனிடம், 'நாளை காலை, ஒரு கூடை நிறைய பூக்களும், பழங்களும் எடுத்து போய் மன்னரிடம் கொடு...' என்றார், பீர்பால்.
'சரி...' என்று சொல்லி, அவன் சென்றான்.
மறுநாள், கைவினை கலைஞன், தான் எடுத்து வந்ததைக் கொடுத்தான்.
அதை பார்த்து, பாராட்டி விட்டு, 'என்ன விலை...' எனக் கேட்டார், அக்பர்.
அவனும், பீர்பால் சொன்னது போல், '1,000 மொகராக்கள்...' என்றதும், கொடுத்து விட்டார், அக்பர்.
அடுத்து, தோட்டக்காரன், பூக்கள், பழங்கள், காய்கறிகள் எடுத்து வந்து, அக்பரை பார்த்தான்.
அவனுக்கு, 100 மொகராக்கள் தரச்சொன்னார், அக்பர்.
அப்போது, 'அரசே... தாங்கள் அசல் பொருளுக்கு, 100ம், நகல் பொருளுக்கு, 1,000மும் பணம் கொடுத்தீர்கள். இப்போது சொல்லுங்கள், எதற்கு மதிப்பு அதிகம்... எது வென்றது... போலிதானே...' என்று கேட்டார், பீர்பால்.
யோசிக்கலானார், அக்பர்.
இதில், இப்போது நாமும் யோசித்து அறிய வேண்டியது என்னவென்றால், போலிக்கு கிடைத்தது, தற்காலிக மதிப்பு தான். அதை வேண்டுமானால், வரவேற்பறையில் வைக்கலாம். ஆனால், வீட்டிற்குள் உள்ள பூஜை அறைக்கும், சமையலறைக்கும் வந்து பயன்படுவது என்னவோ, உண்மையான பொருட்கள் தானே!