நிறம் மாறும் முகங்கள்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:00

''இவங்க சொல்றதெல்லாம் பொய்யின்னு சொல்லுங்க... நான், உங்க பொண்ணுதான்னு சொல்லுங்கம்மா...'' சுபாங்கியை பிடித்து உலுக்கினாள், அபிநந்தனா.
வெறுமையாய் அவளை பார்த்தாள், சுபாங்கி.
''அப்பா... நீங்களாவது சொல்லுங்கப்பா...''
இறுகி கிடந்தான், தீனு.
ஆணும், பெண்ணுமாய், பெரியவர், சிறியவர்களாய் இரண்டு, மூன்று குடும்பம் அந்த ஹாலை நிறைத்திருந்தது.
வக்கீல் என்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெரியவரும், அவருடன் வந்த இளைஞனும்... இந்த கூட்டம் பேசுவது வேறு பாஷையோ என்ற குழப்பம் ஏற்பட்டது, அபிநந்தனாவுக்கு.
மிரட்சியுடன் நின்றாள்.
அபிநந்தனாவை நெருங்கிய முதியவள் ஒருத்தி, அவளின் கன்னத்தை வழித்து, ''அதான், இம்மாம் பெரிய லாயரு சொல்றாருல்லே... நீ, எங்க வீட்டு மகாலட்சுமி. ஏதோ, போதாத நேரம் பிரிஞ்சு போய் கிடந்தோம்.
''இப்போ நேரம் கூடி வரவே, ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். நீ, கிளம்பி வாடி கண்ணு. கண்ணுக்குள்ளேயே வச்சு பார்த்துக்கிடுறேன்...'' அவள் முடிக்கும் முன்னே, இன்னொரு பெண்மணி பாய்ந்து வந்தாள்.
''எங்களை பார்த்தா எப்படி தோணுது. நானு, இவ அப்பனுடன் கூடப் பிறந்த அக்கா. இவன், இவளுக்கு முறை மாப்பிள்ளை. இதை விட உசந்த உறவுமுறையோ உன்னுது?''
''படிப்புலே, வேலையிலே... நான் தான் அபிக்கு சரியான ஜோடி. நான் அமெரிக்காவுல வேலை செய்றேன். நானும் கட்டிக்கிற முறை தான்...'' துள்ளியது, இன்னொரு காளை.
''உஷ்... இதென்ன மார்க்கெட் மாதிரி சத்தம். இப்படியெல்லாம் இங்கே பேசக்கூடாது. பொண்ணு மேஜர். அவளை பெத்த பொண்ணை விட மேலா வளர்த்திருக்கு, இந்த குடும்பம். ஒரு அறிமுகத்துக்காக தான் வரச்சொன்னேன்.
''அதிலும், இந்த சொத்துக்கு உரிமையான அபிநந்தனாவை தேடி கண்டுபிடிக்கிறப்போ தான், உங்களையெல்லாம் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இப்போதான் இந்த விஷயமே, இவங்களுக்கு தெரியும்.
''அவங்களுக்கும், 'டைம்' தரணும். அதனால, நான் திரும்ப அழைக்கிற வரை, இவங்களை பார்ப்பதோ, பேசுவதோ கூடாது. இப்போ கிளம்பலாம்,'' விரட்டாத குறையாக, வக்கீல் பேச, மொத்த கும்பலும் முணுமுணுத்தபடி நகர்ந்தது.
வக்கீலும் விடைபெற்று போய்விட, அமைதியில் உறைந்தது, வீடு.

தன் மடியிலேயே சுருண்டு கிடந்த அபிநந்தனாவின் தலையை வருடின, செண்பகாவின் விரல்கள்.
இந்த வீட்டுக்கு ஆனந்தத்தை எடுத்து வந்த தேவதையல்லவா இவள். முதன் முதலாய் இவளை பார்த்தது, கண்ணில் விரிந்தது.
மருமகள் சுபாங்கி, மூன்று முறை கரு தரித்தும், நிற்கவில்லை. இனி, குழந்தையை சுமக்க தன்னால் இயலாது என்ற உண்மை தெரிந்ததுமே, மிகவும் இளகிப் போனாள்.
மன அழுத்தம், உடல் பலவீனம், தாழ்வு மனப்பான்மை எல்லாமுமாய் சேர, சுபாங்கியின் நிலைமை மோசமாகியது. மனதளவில் பாதிக்கப்பட்டாள். அதிலிருந்து அவளை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதே தீனுவுக்கும், செண்பகாவுக்கும் பெரும்பாடாகி விட்டது.
மருத்துவர் யோசனைப்படி, ஒரு முடிவை எடுத்தான், தீனு. செண்பகாவுக்கு துணுக்கென்றிருந்தாலும், ஒரு மனுஷியாக, மகனின் மனசு புரிந்தவளாக, தன்னை சமன் செய்து கொண்டாள்.
குழந்தை தானே தெய்வத்துக்கு சமம். அதை குறையாய் நினைக்கலாமா... சுபாங்கியின் நிலைமையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
தலையை அசைத்தாள்.
தீனு தான், எப்படியோ, எங்கேயோ விசாரித்து, திருச்சி அருகே உள்ள ஒரு மிஷினரியை தொடர்பு கொண்டதில், 'குழந்தைகளை பார்வையிட வரலாம்...' என்று, ஒருநாளை கூறி, அனுமதி தந்தது.
'அத்தை... நாமே தேர்வு செய்து விடலாமாம்...' மகிழ்ச்சியோடு கூறினாள், சுபாங்கி.
'ஆமாம்மா... சுபாங்கி ஆசைப்பட்டாற்போல கைக் குழந்தைகளும் இருக்காம்...' என்றான், தீனு.
சிரித்தாள், செண்பகா.
'தீனு... சுபாங்கி... இதென்ன புடவை சமாசாரமா... கலர் நல்லாயிருக்கா, பார்டர் நல்லாயிருக்கான்னு பார்க்க. குழந்தைடா... இது, நமக்கு வரமா கிடைக்கப் போற சாமி. சாமியை குற்றம் குறை பார்ப்பதா...
'அந்த சிஸ்டர், எந்த குழந்தையை முதலில் நமக்கு காட்டுறாங்களோ, அதுவே நம் குல சாமி; இந்த வீட்டு வாரிசு...'
வெட்கத்துடன் தலையாட்டினர், தீனுவும், சுபாங்கியும்.

மூவரும் அந்த மிஷினரிக்கு போய் சேர்ந்தனர். உடனே கையில் துாக்கி தந்து விடவில்லை, மதர். மூவரிடமும் தனித் தனியாகவும், சேர்த்தும் பலவிதமான கேள்விகளை முன் வைத்தார். உண்மையில் அவர்களின் மனோபாவத்தை சோதித்து அறியவும், ஆழம் காணவும் வைக்கப்பட்ட கேள்விகள்.
எல்லாம் திருப்தியானதும், 'வாங்க, குழந்தைகள் உள்ள இடத்துக்கு போகலாம். நீங்களே பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள்...' என்றார்.
உடனே, தன் அம்மா சொன்னதை சொல்லி, 'நீங்களே ஒரு குழந்தையை தாருங்கள். அதையே கடவுளின் பரிசாக பெற்றுக் கொள்கிறோம்...' என்றான், தீனு.
இருவர் தலை மீதும் கை வைத்து ஆசிர்வதித்தார், மதர். செண்பகாவின் கைகளை பற்றிக்கொண்டார். அபரிமிதமான வாஞ்சை, அந்த கைப்பற்றலில் வழிந்தது.
ரோஜாப் பூந்தோட்டம் போல அத்தனை அழகு. சிணுங்கலாய், அழுகையாய், விழி விரித்தலாய், கைச்சப்புதலாய், கண்
மூடி உறக்கமாய் குழந்தைகள்... ஒரு
வயது கூட நிரம்பாத மொட்டுக்கள்.
மதர் முன்னே நடக்க, அடுத்து, தீனு, சுபாங்கி, செண்பகாவுடன் இளைய சிஸ்டர் ஒருவரும் அந்த இடத்தை கடந்தனர். சீரான இடைவெளியில், தொட்டில்களும், சிறு பாய் விரிப்பும். கைக் குழந்தைகள் தனியே. சுமார், 10 குழந்தைகள் இருக்கும்.
முன்னே போன சுபாங்கி, தன் சேலை தலைப்பை யாரோ இழுத்து பிடித்ததில், லேசாய் தடுமாறினாள். செண்பகாவும், சிஸ்டரும் தடைபட்டு நின்றனர். எதுவோ சொல்வதற்காக திரும்பிய தீனுவின் கண்களிலும் அந்தக் காட்சி விழுந்தது.
வரிசை தப்பி வந்தாற்போல், வழியோரமாய் இருந்த தொட்டிலில் கிடந்த குழந்தை ஒன்று, சுபாங்கியின் சேலை தலைப்பை கையில் பிடித்து, வாயில் வைத்து சுவைக்க முயன்றது.
ஓரடி பின்னே வந்து, அந்த தொட்டிலின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள், இமைகள் விரிய வியப்புடன் பார்த்தாள். பாப்பாவின் குண்டுமணி கண்கள், சிரிப்பை சிந்தின. செப்பு இதழோரம் அமுதம் வடிந்தது. குறு விரல்கள் தலைப்பை விடவில்லை. சேலை துணியை மெதுவாக உருவியவள், 'என் கண்ணே...' என்றபடி குனிந்து முத்தமிட்டாள்.
உள்ளுக்குள்ளே ஓராயிரம் ஊற்றுக் கண்கள் ஒரே சமயத்தில் கண் திறந்து, 'குபு குபு'வென பொங்கி பிரவகித்தது.
'எனக்கு, இந்த பாப்பா தான் வேணும். கருவறை தேடி வந்த சிசுவாய், இவள் என்னை தேர்ந்தெடுத்து விட்டாள். எனக்கு, இவ போதும்...' என்றாள், சுபாங்கி.
பிறகென்ன...
'மடமட'வென விதிமுறைகள் முடிய, சட்டப்படியே நடந்தது, தத்தெடுப்பு.
குழந்தையை, கையில் எடுத்த மதர், சுபாங்கி முன் நீட்ட, பெருமிதமும், கண்ணீருமாய், தன் புடவை தலைப்பை ஏந்தி விரித்து, கைகளில் வாங்கிய கணம், அனைவரையுமே நெக்குருக வைத்தது.
அப்படி வரமாய் வந்தவளை... இப்படியோர் தீர்ப்பு வந்து அவஸ்தைப்படுத்தும் என்று யார் கண்டது?
எப்போதோ கோர்ட்டுக்கு போன வழக்கு... உடையவர் மண்ணுக்கு போன பின், இன்று உயிர்த்தெழுந்து உரிய நீதியை வழங்கி, வாயை மூடிக்கொண்டு விட்டது.
நந்தகோபால் - அபிராமியை தேட, அவர்கள் மறைவும், அவர்களுக்கு ஒரு பெண் வாரிசு இருக்கிற விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது.
உறவுக் கூட்டத்துக்கு எச்சில் ஒழுகியது.
பின்னே... கோடிக்கணக்கான மதிப்பு சொத்துக்காரியாயிற்றே... அவளுக்கு கல்யாணமாகாமல் இருக்கணுமே என்று உறவு அலமந்தது. துப்பு துலங்கியதில், அவள், தீனு - சுபாங்கியின் வளர்ப்பு பெண்ணாக இருப்பது தெரிந்ததும், ரத்த வாடையை முகர்ந்த சுறா கூட்டமாய் கூடியது.
எல்லாம் பணம் படுத்தும் பாடு. விபத்துக்கு பின், பெண் குழந்தை வளர்ப்பு, தன் தலையில் எங்கே விழுந்து விடுமோ என்று பறந்தோடிய காக்கை கூட்டம், இன்று, ஆவலாதியாய் சுற்றி நிற்கிறது.
தீனு - சுபாங்கி... ஏன் செண்பகாவுமே, இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை தான். படிப்பை முடித்ததுமே, திருமணம் செய்கிற எண்ணத்தில் கனவை வளர்த்திருக்க... அஸ்திவாரமே, 'கிடுகிடு'வென ஆடியது.

யாருக்காகவும் காத்திருக்கவில்லை, நாள். சொன்னது போல, வக்கீலும், அவர் உதவியாளனும் வந்துவிட, அன்றைக்கு போலவே இன்றும் கூட்டம்.
வக்கீலுடன் எதுவோ பேசியபடி நின்றிருந்தாள், அபிநந்தனா.
ஒரு பெண்மணி, அபிநந்தனாவின் கூந்தலில் பூச்சூட வர, விலகி நின்றாள்,
மற்றொருத்தியோ, தங்க காசு மாலை ஒன்றை, அவள் கழுத்தில் பூட்ட வர, துள்ளி, நகர்ந்தாள்.
வக்கீலை சங்கடமாய் பார்க்க, தன் உதவியாளனை அவர் பார்த்ததும் அமைதிப்படுத்தினான்.
தொண்டையை செருமியபடியே, ''நந்தகோபால் - அபிராமியின் வாரிசு அபிநந்தனாவுக்கு, இந்த வழக்கின் வெற்றியாக, ஏற்காடு எஸ்டேட்டும்; திருச்சி, பொன்மலை பகுதி தோப்பு, தோட்டமும்; கொடைக்கானல் பங்களாவும் சொந்தமாகிறது. கோடிக்கணக்கான மதிப்புள்ளது.
''இது அனைத்தும், அபிநந்தனாவை சேருகிறது. இவரே இனி பாத்யதைக்காரர். அவர் விருப்பப்படியே எதை வேண்டுமானாலும் செய்யலாம். விற்கலாம், அனுபவிக்கலாம். முழு உரிமையாளர் இவரே,'' என்றார், வக்கீல்.
அங்கே, சலசலப்பு எழுந்தது. மூச்சடைத்தது பலருக்கு.
அபி என்னவோ சொல்ல, மறுப்பாய் தலையாட்டினார், வக்கீல்.
உறுதியுடன் இருந்தாள், அபி.
கூட்டம் கவனிக்க ஆரம்பித்தது.
''சார்... நான், இப்போது கோடீஸ்வரியா?''
''ஆமாங்கண்ணு... நீ, கோடீஸ்வரி! ஸ்வீட் எடுத்துக்க,'' என்று, ஒருத்தி ஊட்டி விட வர, நாசூக்காய் விலகினாள்.
''என்ன சார், தயக்கம்... நான் முழு மனசாய் தான் சொன்னேன்; கையெழுத்தும் போட்டிருக்கேன்.''
''என்ன சார் விஷயம்... அபி என்ன சொல்றா... எங்களில் ஒருத்தரை கணவனா தேர்ந்தெடுத்துட்டாளா... அதை சொல்லத்தான் வெட்கப்படறாளா?'' என்று கேட்டவனை, அற்பப் புழுவைப் போல பார்த்தார், வக்கீல்.
''ப்ச்... அதெல்லாம் இல்லை. அபிக்கு இந்த சொத்து வேண்டாமாம்?''
''ஹான்ங்.''
''அய்யோ.''
''ஏன், எதுக்கு?''
''அவங்க, வேற முடிவு எடுத்துருக்காங்க.''
கூட்டம் விழித்தது.
''அபி, தன் சொத்தை விற்று, பணமாக்கி, அதை, தன்னை சிறிது காலம் பராமரித்த மிஷினரிக்கும், முதியோர் இல்லத்திற்கும் பிரிச்சு தர்றதா சொல்லி, எழுதி கையெழுத்து போட்டுட்டாங்க.''
''ஹாங்... பைத்தியக்காரியா... திமிருடி... சொந்தத்துக்கு தராம, அனாதை இல்லத்துக்கு தர்றாளாம்.''
''கொழுப்பு பிடிச்சவ... நம்மை பார்த்தா எப்படி தோணுது?''
குமுறிய கூட்டத்தை இன்னும் அதிர வைத்தது, அபியின் குரல்.
''வக்கீல் சார்... யார் யாரோ என்னை கட்டிக்கிடுறேன்னு சொன்னாங்களே... கூப்பிடுங்க சார், கல்யாணம் செஞ்சுக்க, நான் தயார். என்ன சார்... பேச்சு, மூச்சையே காணோம். வெறும் அபிக்கு இதுதான் வரவேற்பா?''
ஏளனம் வழிந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை.
''அம்மாடீ... மூணா பிரிச்சு, ஒரு பகுதியை உனக்காக வெச்சுக்கம்மா... படிப்பு, கல்யாணம்ன்னு, உன் வருங்காலத்துக்கு உதவும்.''
''இருக்கட்டும் சார்... எனக்கு பார்த்து பார்த்து செய்யத்தான் எங்கப்பா இருக்காரே... இதுல இருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கிட்டாலும், எங்கப்பாவை நான் கேவலப்படுத்தின மாதிரியாகும். கருப்பையில இருக்கிற சிசு ஆணா, பெண்ணா, சிவப்பா, கறுப்பா, நல்லதா, கெட்டதா எதுவுமே தெரியாமதான் ஒவ்வொரு அம்மாவுமே சந்தோஷமா சுமக்கிறா...
''அது போலவே, வேறொரு கருவறை சுமந்த என்னை, விதி விசிறிட்டு போக, இவங்க எடுத்து வந்து கொண்டாடினாங்க. நான் யாரு, சொத்து வருமா எதுவுமே தெரியாது. அன்பு... அன்பு மட்டுமே. பேரன்பு வச்சு சீராட்டினாங்க...
''இந்த பணத்தை எடுத்துக்கிட்டா, இதை எதிர்பார்த்து தான் என்னை வளர்த்ததா, உலகமும், உறவும் வண்ணம் பூசி, பேசி, அசிங்கப்படுத்தும்; கொச்சைப்படுத்தும். இந்த வீட்டோட இளவரசி, நான். இது போதும்.
''நல்லவேளை, சார்... இவங்கள்ல யாரும் என்னை வளர்க்கலை. என் பிழைப்பை நாறடிச்சிருப்பாங்க. பாருங்க, பைசா பிரயோஜனம் இல்லேன்னதும் பேயடிச்சாற் போலானதை...
''நான், தீனதயாளன் பொண்ணு. சொன்ன சொல் மாற மாட்டேன். சொன்னபடியே செய்யுங்க.''
''அம்மாடி... தெரிஞ்சோ, தெரியாமலோ உன் பெற்றோர் பேரையே உன் வளர்ப்பு அம்மா - அப்பா தேர்வு பண்ணி சூட்டியிருக்கிறாங்க. இதுவே ஆசிர்வாதம் தான். உனக்கு பெரிய மனசும்மா... யாருக்கு இப்படிப்பட்ட மனசு வரும்... நல்லாயிரும்மா,'' விடைபெற்றார்,
வக்கீல்.
தீனுவும், சுபாங்கியும் மகளை இறுக்கி அணைத்தனர்.
மகளை முத்தமிட்டாள், சுபாங்கி; கண்ணீரை துடைத்துக் கொண்டாள், செண்பகா; தீனுவின் முகத்தில் பெருமித கர்வம் சுடர் விட்டது.
பூஜை அறையில் விளக்கேற்ற, வயதை மறந்து ஓடினார், செண்பகா.
நிம்மதியாக சிரித்தாள், அபிநந்தனா.

ஜே. செல்லம் ஜெரினா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X