'அருணா, என் அறைக்கு உடனே வரவும்...' பிரின்ஸ்பலின் அழைப்பு, 'மைக்'கில் ஒலித்தது.
'மேடம்... உங்களை, பிரின்ஸி கூப்பிடறாங்க. உடனே போங்க...' மாணவியர் சொல்லவும் சிரித்தாள், அருணா.
''உங்களுக்கு கொஞ்சம், 'ப்ரீ டைம்' வேணும். அதனால் தானே என்னை போகச் சொல்றீங்க,'' என்றவள், பிரின்ஸ்பல் அறை நோக்கி நடந்தாள்.
''அருணா... எனக்கு சில விஷயங்கள், உங்களுடன் கலந்தாலோசிக்கணும்,'' என்றாள், பிரின்ஸ்பல், அனுபமா.
''மேடம், வகுப்பை நான் பாதியில் நிறுத்திட்டு வந்திருக்கேன். முழுமையா முடிச்சுட்டு வரவா?'' என்றாள், அருணா.
அவள் வெளியே வந்ததும், சக ஆசிரியைகளான கலாவும், உமாவும் கேலியாக சிரித்ததை, கண்டும் காணாமல் வகுப்புக்குள் சென்றாள்.
''தன் செல்ல பெண்ணை, தினம் ஒரு முறையாவது தரிசனம் செய்யாவிட்டால், பெரியம்மாவுக்கு துாக்கம் வராது,'' சொல்லி சிரித்தாள், கலா.
தலையாட்டி, அவள் பேச்சை ரசித்தாள், உமா.
பிரின்ஸ்பலின் செல்லப் பெண் என்று, அருணாவுக்கு பெயர் சூட்டியிருந்தனர், சக ஆசிரியைகள்.
''அதில் தவறென்ன... அருணா மாதிரி எல்லா பொறுப்பையும் ஏற்று, முகம் சுளிக்காமல் வேலை செய்ய நம்மால் முடியுமா,'' என்று, பார்வதி ஒருத்தி தான், அவளுக்கு பரிந்து பேசுவாள்.
'நீ, அருணாவின் கூஜா தான்...' என்று சிரித்தனர்.
இதெல்லாம் தெரிந்தும், ஒன்றும் தெரியாதவள் போல, தன் கடமையை, அப்பழுக்கில்லாமல் நேர்மையாக செய்தாள், அருணா.
அனுபமா, அவளிடம் அபிமானம் காண்பித்ததில் அதிசயமே இல்லை.
அந்த பள்ளியில் சேர்ந்த ஓர் ஆண்டிற்குள், தன் திறமையாலும், உழைப்பாலும் பள்ளிக்கு இன்றியமையாதவளாகி விட்டாள், அருணா.
திறமையான ஆசிரியை. உண்மையான அக்கறை காட்டிய அவளை, மாணவியர் மிகவும் நேசித்தனர். அருணாவின் கணவர், மும்பையில், ஒரு வங்கியில், பெரிய பதவியில் இருந்தார். பெரிய வீடு, கார் என, எல்லா வசதியும் இருந்தது. பள்ளிக்கு ஒருநாள் கூட தாமதமாக வரமாட்டாள்.
தினமும் காலையில் முதலாவதாக வருவது, அவள் தான். பிரின்ஸ்பல் அனுபமா வருவதற்குள், செய்ய வேண்டிய வேலைகளை முடித்து, தன் வகுப்பிற்குள் செல்வாள்.
தனக்கு, அனுபமா கொடுத்திருக்கும் உரிமையில், எந்த ஒரு ஆசிரியையும் அவமதித்து பேசியதில்லை. தவறை நிதானமாக எடுத்துச் சொல்லி, அவர்கள் மனம் புண்படாமல் சுட்டிக் காட்டுவாள். அப்படியும் சிலருக்கு, அவள் மேல் பொறாமை இருந்தது.
'அவளுக்கென்ன குறை... பக்கத்திலேயே வீடு. வேலை செய்ய ஆட்கள். போக, வர கார். சீக்கிரம் வர்றதிலே என்ன கஷ்டம்...' என்றனர், தினமும் தாமதமாக வரும், சில ஆசிரியைகள்.
''அவளுக்கு என்ன குறை. வாழ்க்கை நிறைஞ்சு இருக்கு,'' என்றாள், உமா.
அவளை பற்றி அவதுாறாக பேசும் கும்பலின் தலைவி, கலா தான்.
ஒருநாள், ஆசிரியர்களின் அறையில் அமர்ந்து தேர்வுத்தாள்களை திருத்திக் கொண்டிருந்தாள், அருணா.
''மேடம்... கலா டீச்சர், வகுப்பறையில் திடீரென்று மயங்கி விழுந்துட்டாங்க. தயவுசெய்து, வந்து பாருங்கள்,'' என, ஓடி வந்தாள், 10ம் வகுப்பு மாணவி ஒருத்தி.
அருணா, ஓடினாள். கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. முதலுதவி செய்து, மயக்கத்தை தெளிவித்து, சூடாக தேநீர் வாங்கி வரச்சொல்லி, பருகச் செய்தாள்.
தன் காரிலேயே டாக்டரிடம் அழைத்துச் சென்று, தலையில் தையல் போட்டதும், கலாவின் கணவர் வரும் வரை, அவள் அருகிலேயே உட்கார்ந்திருந்தாள்.
''மேடம்... உங்களுக்கு ரொம்ப நன்றி. கலாவை, நான் டாக்சியில் அழைத்து போகிறேன்,'' என்றார், கலாவின் கணவர்.
''ஆமாம் அருணா. நீங்கள் செய்த உதவியை மறக்க முடியாது,'' என்றாள், கலா. அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது.
''கலா... நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை. யாராக இருந்தாலும் இதை தான் செய்திருப்பர். நான் பள்ளியில் இறங்கிய பின், உங்களை கொண்டு விடச்சொல்றேன். கார் இருக்கும்போது, டாக்சியெல்லாம் வேண்டாம்,'' என்றாள், அருணா.
அதன்பின், கலாவும், அவள் தலைமை தாங்கிய குழுவும், அருணாவிடம் காட்டிய மரியாதைக்கு அளவில்லை.
நாட்கள் ஓடின. பழையபடியே எல்லாரிடமும் பழகினாள், அருணா. யாருக்கு என்ன உதவி தேவையென்றாலும், முன்னின்று செய்தாள். சில ஆசிரியைகள், எப்போதும் தம் கவலைகளை சொல்லி புலம்புவர். அனைவருக்கும் ஆறுதல் சொல்லி, யாருக்கு என்ன உதவி தேவையென்றாலும் முன்னின்று செய்தாள்.
அவளின் அருமை புரிந்து, எல்லாரும் மதிப்புடன் நடத்தினர். ஆனால், ஒருநாள் கூட அவள், அவர்களை, தன் வீட்டிற்கு அழைத்ததில்லை.
''நாமெல்லாரும் மற்றவர்கள் வீட்டிற்கு போயிருக்கோம். அருணா மட்டும் தான், நம்மை கூப்பிட்டதில்லை. நமக்கெல்லாம் இவ்வளவு கவலைகள் உள்ளன. ஆனால், அருணாவுக்கு கவலையே இல்லையா... புதிராக தான் இருக்கு,'' என்றாள், உமா.
''அவளுக்கென்ன குறை... நிறைய பணம், அழகான வீடு, பெரிய பதவியில் இருக்கும் கணவர்,'' என்றாள், சக ஆசிரியை.
''நாமெல்லாம் சொல்லாமல், ஒருநாள் அவள் வீட்டிற்கு போகலாம். 'சர்ப்ரைசாக' இருக்கும்,'' என்றாள், கலா.
அருணாவிடம், 'ஒருநாள், உங்கள் வீட்டிற்கு நாங்களெல்லாம் படையெடுக்கப் போகிறோம்...' என்றனர்.
''தாராளமாக வாருங்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை. என் வீட்டில் உங்கள் எல்லாருக்கும், 'லஞ்ச்!' 12:00 மணிக்கெல்லாம் வந்தால் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்,'' என்றாள், அருணா.
கலா, உமா, பார்வதி உட்பட ஆறு பேர், அருணா வீட்டிற்கு சென்றனர்.
சிட்டியில் பணக்காரர்கள் வசிக்கும் இடத்தில், அழகான அடுக்கு மாடி குடியிருப்பில், அவள் வசித்தாள். அவ்வளவு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, வீடு.
'ரொம்ப அழகான வீடு அருணா...' எல்லாரும் புகழ்ந்தனர்.
சப்பாத்தி - சென்னா, வெஜிடபுள் புலாவ் என, பல வகையான உணவு சாப்பிட்டனர். ஆனால், அருணாவை தவிர, வீட்டு மனிதர்கள் ஒருவர் கூட கண்ணில் படவில்லை.
''அருணா... வீட்டில் வேறு யாரும் இல்லையா,'' கேட்டாள், உமா.
''வாங்க... இது, என்னோட ஒரே மகன்,'' என்றாள்.
ஒன்பது வயது அழகிய சிறுவன், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான். பார்த்ததும், அனைவரும் திகைத்து நின்றனர்.
''ராஜ், என் பிரெண்ட்ஸ்...'' என்றாள், அருணா.
''ஹலோ...'' என்று, அழகாக கையசைத்தான்.
''ஒரு கார் விபத்தில், ஐந்து வயதில், முதுகு தண்டு பாதிக்கப்பட்டு, கால்களில் உணர்ச்சி போய்விட்டது. பார்க்காத வைத்தியம் இல்லை. இப்போதுதான் கொஞ்சம் முன்னேற்றம். புத்திசாலி.
''வீட்டிற்கே வந்து வாத்தியார் பாடம் சொல்லித் தருகிறார். நான் பள்ளிக்கு வருவதற்குள், இவனுக்கு தேவையானவற்றை செய்துட்டு வரேன். என்ன தான் இவனை பார்த்துக்கொள்ள ஆள் இருந்தாலும், ஒரு அம்மாவின் மனசு கேட்குமா?'' என்றாள், அருணா.
அப்போது, அங்கு வந்த வேலைக்காரி, ''அம்மா... பெரியம்மா கூப்பிடறாங்க,'' என்றாள்.
அடுத்த அறைக்கு சென்றதும், 70 வயது மூதாட்டி, படுக்கையிலிருந்து மெல்ல எழுந்திருக்க முயன்றதை பார்த்தனர். உதவிக்கு இருந்த பெண், பெரியம்மாவை பிடித்து உட்கார வைத்தாள்.
''இது, என் மாமியார். அம்மாவுக்கும்
மேல அன்பானவர். என் மகனை வாழ வைத்தவர். நான்கு மாதத்திற்கு முன், பாரிச வாய்வு வந்து படுத்து விட்டார். இப்போது தான் கொஞ்சம் நடமாட்டம்,'' என்றாள், அருணா.
''அருணா, இவ்வளவு பிரச்னைகளை வைத்துக் கொண்டு, ஒருநாள் கூட புலம்பாமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது... மற்றவர்களின் பிரச்னைகளை கேட்டு, எப்படி உதவி செய்ய முடிகிறது?'' ஆச்சரியத்துடன் கேட்டாள், ஒருத்தி.
''என் கணவர் ரொம்ப, 'பிசி!' மாதத்தில்,
15 நாட்கள் வெளியூர் பயணம். தனியே சமாளிக்க கற்றுக்கொண்டு விட்டேன்,'' என சொல்லி சிரித்தவள், தொடர்ந்தாள்...
''எனக்கு என்ன குறைச்சல் என்று, நீங்க எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு
தெரியும். யாருக்கு தான் பிரச்னை இல்லை... பிரச்னைகளின் தீவிரம் தான் மாறுபடுகிறது.
''மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, கிடைக்கும் நிம்மதியில் நம் பிரச்னைகளின் தீவிரம் குறையும். புலம்புவதால் மட்டும் பிரச்னைகளுக்கு தீர்வு காண இயலாது.
''பள்ளி குழந்தைகளின் அருகாமையில், என் கவலைகளை மறக்கிறேன். ஓரளவு பசுமை இருந்தாலும், வாடிய முழு மரமும் உயிர் பெற்றுவிடும். இதுதான் நம்பிக்கை. வாழ்க்கையும் இப்படித்தான்.''
எல்லார் கண்களிலும் நீர் நிறைந்தது.
அருணா, குழந்தைகளுக்கு மட்டும் ஆசிரியை அல்ல; அவர்களுக்கும் தான்!
பானு சந்திரன்