டைட்டானிக் காதல்! (26)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2021
00:00

முன்கதை சுருக்கம்:
குருமூர்த்தி சிவாச்சாரியார், ஜோதி மற்றும் பொன்னப்பர் இறந்த செய்தி அறிந்து, முதலில் சென்னை சென்றனர். அங்கு புவனாவை வீட்டுக்குள் சேர்க்காததால், அடுத்து, கார்த்திகேயனின் வீட்டுக்கு சென்றனர். புவனாவை அரிவாளால் வெட்ட வர, தடுத்த ராஜாராமன், கையில் வெட்டுப்பட்டு சரிந்தான்-


ராஜாராமனின் கை ஒன்று சேர, மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது. ஊருக்கு போயும் இரண்டு மாதங்கள் ஓய்வில் இருந்தான். அதற்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.
கிராமத்து வீட்டை பூட்டி, காவலுக்கு ஆட்களை வைத்து, அம்மாவையும், அத்தையையும் தன்னுடன் சென்னைக்கு கூட்டி வந்து விட்டான், கார்த்திகேயன். உடன் வர கொஞ்சத்தில் சம்மதிக்கவில்லை, செல்லாயி. அவளை அழைத்து வருவதில், புவனாவுக்கும் விருப்பமில்லை.
''அம்மாவை மட்டும் கூட்டிட்டு வாங்களேன்,'' என்றாள், கார்த்திகேயனிடம்.
''அத்தையை விட்டுட்டு வரமுடியாது. பாவம் அவங்க. நம்மால மகள இழந்து தவிக்கிறாங்க.''
''அம்மா கூடத்தான், உங்க அப்பாவை இழந்து தவிக்கிறாங்க. வாயை திறந்து நம்மை ஒரு வார்த்தை சொன்னாங்களா?''
''அம்மா, பாவம். வாயில்லாப் பூச்சி. ஆனா, அத்தை குளவி மாதிரி கொட்டிக்கிட்டே தான் இருப்பாங்க. அது, அவங்க பிறவிக்குணம்.''
''ஆனா, என்னால தாங்கிக்க முடியலையே.''
''தாங்கிக்கிட்டு தான் ஆகணும். என்ன செய்ய முடியும், கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும், புவனா,'' என்று, அவளை அமைதிப்படுத்தினான், கார்த்திகேயன்.
ஆனால், சரியாகவில்லை. செல்லாயியிக்கும், புவனாவிற்கும் கொஞ்சம் கூட ஒத்து வரவில்லை. புவனாவை பார்க்கும்போதெல்லாம் முணு முணுக்க ஆரம்பித்தாள்.
'மூதேவி... மொகத்தப் பாரு, வந்து தொலைச்சுச்சே வீட்டுக்கு... குடும்பத்த கெடுக்கிற கோடாரிக் காம்பு...' என, திட்டத் துவங்கினாள், செல்லாயி.
புவனாவின் காதுகளில் விழ வேண்டுமென்றே சொல்லுவாள்.
எல்லாவற்றையும் கார்த்திகேயனிடம் சொன்னாள், புவனா.
''விடு, புவனா... அவுங்க குணம்தான் தெரியுமில்ல...''
''எத்தனை நாளுக்குங்க கேட்டுக்க முடியும்...''
''நீ காலைல, 9:00 மணிக்கு ஆபீசுக்கு கிளம்பிடற, சாயந்தரம், 7:30 - 8:00 மணியாகுது திரும்பி வர... காலைல ஒரு மணி நேரம், சாயந்தரம் மிஞ்சிப் போனா ஒரு ரெண்டு மணி நேரம்... அவ்வளவுதானே?''
''நீங்க சுலபமா சொல்லிடறீங்க...'' என, சலித்துக் கொண்டாள்.
''சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசு படுத்தக்கூடாது, புவனா. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...''
''அது சரி...' என்று முடித்தாள்.

ஒருநாள் பகல் -
அவன் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது, ''என்ன சோறுடா தம்பி இது... தெனைக்கும் ஒரு சாம்பாரு, ரசம், தயிருன்னு... எப்படிடா ஒன் தொண்டையில எறங்குது... அவ வேணா ஐயிறு வூட்டு பொண்ணா இருக்கலாம். அதுக்காக நீயும் அந்த வேஷம் போடணுமா என்ன?'' என்றாள், செல்லாயி.
''என்ன அத்தை சொல்றீங்க?''
''நாம நித்தம் கோழியடிச்சு, கொழம்பு வச்சவங்க... ஆட்டுக்கறி இல்லாம துன்னவங்க இல்ல...
ரா சோறுக்கு கூட முட்ட வறுத்தாத்தா சோறு எறங்கும்...''
பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.
''இதோ பாருப்பா... அவ வேணுமின்னா தயிர் சோத்த தின்னட்டும்; நம்மால முடியாது. இதோ இன்னிக்கு வந்திருக்கியே இந்த மாதிரி தெனைக்கும் பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துரு. நண்டு, எறான்னு செய்து வைக்கிறோம். சாப்ட்டு போயிரு...''
அவனுக்கும் ஆசையாக தான் இருந்தது. நாக்கில் எச்சில் ஊறிற்று. ஐயர் வேஷம் அலுத்துப் போயிற்று. ஆகவே, அத்தை சொல்கிற மாதிரி கேட்டால் என்ன என்று யோசித்தான்.
''என்னம்மா சொல்றீங்க?'' என்று, அம்மாவை பார்த்தான்.
''நீ எது சொன்னாலும் சரிப்பா,'' என்றாள், பூவாயி.
''ஆனா, அத்தை... சாயந்தரம் நானும், புவனாவும் ஆபீசிலிருந்து வருவதற்குள், வீடு சுத்தமாயிரணும். ஒரு வாசனை வரக்கூடாது.''
''கலி காலம்டா சாமி. ஒங்கம்மா காலமெல்லாம் ஒங்கப்பனுக்கு பயந்துக்கிட்டு கெடந்தா... நீ பொண்டாட்டிக்கு பயப்படுற...'' அப்போதும் குத்தலை மறக்கவில்லை, செல்லாயி.
மறுநாள் காலை -
புவனாவை ஆபீசில் விடும் முன், காரை ஓட்டிக்கொண்டே ஆரம்பித்தான், கார்த்திகேயன்.
''நா ஒண்ணு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே, புவனா...''
''சொல்லுங்க.''
''தினமும் பகல் நேரத்துக்கு, டிபன் பாக்சில் எடுத்து வர்ற தயிர் சாதம் உனக்கு பிடிக்குது, பழகிப் போச்சு.''
''ஆமா... நான் தயிர் சாதங்கிறது தெரிஞ்ச விஷயம்தானே... அதுக்கு என்ன செய்யணும்ங்கறீங்க?''
''உன்ன ஒண்ணும் செய்யச் சொல்லல... பகல்ல நா வேணா வீட்டுக்கு வந்து சூடா சாம்பார், ரசம்ன்னு சாப்பிட்டு போகட்டா?''
''இவ்வளவு தானே... போய் சாப்பிட்டு வாங்க... இதுக்கு என்கிட்ட ஏன், 'பர்மிஷன்' கேக்குறீங்க?''
'அப்பாடி...' என்றிருந்தது அவனுக்கு. விஷயம் அவ்வளவு சுலபமாக முடியும் என்று அவன் நினைக்கவில்லை. சந்தோஷமாக சீட்டியடித்தான்.
''என்ன, இன்னிக்கு ஐயாவுக்கு உற்சாகம் பொங்கி வருது?''
''இன்னும் எத்தனை நாளுக்கு துக்கம் கொண்டாடிட்டு இருக்க முடியும்... ஆச்சு, ஆறு மாசம் ஓடிப் போயிடுச்சு...'' என்றான்.
''ஆமாங்க... பாவம், ராஜாராமன். நமக்காக ரொம்பவே கஷ்டப்பட்டுட்டார். இந்த சனி, ஞாயிறு போய் பார்த்துட்டு வரலாமா?''
''சனிக்கிழமை வகுப்பு இருக்கும், பார்க்கலாம்,'' என்றான்.
கார்த்திகேயனின் பகல் நேர சாப்பாடு நாளுக்கொரு வகையாக ஜோராக போய்க் கொண்டிருந்தது. மணக்க மணக்க தலைக்கறியும், கோழி காலையும் உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டான். இப்போதுதான் சாப்பிட்ட மாதிரி உணர்ந்தான்.
அதிகாலை காபி கலக்க தவிர மற்ற நேரங்களில், சமையல் அறையை எட்டிப் பார்ப்பதில்லை, புவனா.
''உனக்கு ஏம்மா இந்த கஷ்டம்... நான் தான் இருக்கேனே பார்த்துக்கிடறேன்,'' என்று சொல்லி விட்டாள், பூவாயி.
பில்டர் காபி போட வராததால், மணக்க மணக்க சாப்பிட்டு பழக்கப்பட்ட புவனா, அதை மட்டும் பூவாயிடம் விடுவதில்லை. தானே காபி போட்டாள்.
அப்படி ஒருநாள் வந்தபோது, மெல்ல மூக்கை உறிஞ்சி உறிஞ்சி பார்த்து, ''என்னம்மா... சமையலறைல ஏதோ நாத்தம் வருது...'' என்றாள், புவனா.
பக்கென்றது, பூவாயிக்கு.
''எனக்கு ஒண்ணும் தெரியலையே, புவனா,'' என்று சமாளித்தாள்.
''சமையல்கட்டை சுத்தம் பண்ணி ரொம்ப நாளாயிடுத்து. இந்த ஞாயிற்றுக்கிழமை பண்றேம்மா,'' என்றாள்.

மறுநாள் பகல், கார்த்திகேயன் சாப்பிட வந்தபோது, அதை சொன்னாள், பூவாயி.
''நீ கவலைப்படாதம்மா. ஊதுவத்திய கொளுத்தி வை. சரியா போயிடும்.''
ஆனால், எந்த திருட்டுத்தனமும் ஒருநாள் வெளிப்படும் என்கிறார் போல், அன்று, புவனாவிற்கு எல்லாம் தெரிய வந்தது. தலைவலியாக இருக்கவே அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு போட நினைத்து, கார்த்திகேயனுக்கு போன் பண்ணினாள்.
''பகல் சாப்பாட்டிற்கு, வீட்டிற்கு போகும்போது என்னை வந்து கூட்டிட்டு போறீங்களா... உடம்பு சரியில்லை...''
''என்ன புவனா?''
''ரொம்ப தலைவலியா இருக்கு. கொஞ்ச நாழி படுத்து துாங்கினா சரியா போயிடும்.''
''சரி புவனா,'' என்றான்.
அவளை அழைத்துப் போகும் முன், வீட்டிற்கு போய், அம்மா, அத்தையுடன் சாப்பிட உட்கார்ந்தான்.
அன்று, வீட்டில் நண்டு செய்திருந்தனர். மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தலைவலி தாங்க முடியாமல், ஆட்டோவில் கிளம்பி, வீட்டுக்கு வந்து விட்டாள், புவனா.
வீட்டினுள் நுழையும்போதே நாற்றம் அவளது குடலை புரட்டிற்று. உள்ளே வந்து அவர்கள் மூவரது தட்டை பார்த்ததும், வெகுண்டாள். குளியலறைக்கு போய் வாந்தி எடுத்து விட்டு வந்தவள், அருவருப்புடன் கார்த்திகேயனை ஏறிட்டாள்.
''இதுக்குதான் மத்தியான சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றதா சொன்னீங்களா?''
''அதில்ல புவனா... வந்து...''
''ச்சீ... வெக்கமாயில்ல உங்களுக்கு?''
''இதுல வெக்கப்பட என்ன இருக்குது?'' என்றான் கார்த்திகேயன்.
''நான் ஒரு பிராமண பொண்ணுன்னு தெரியுமில்ல... சுத்த சைவம்ங்கிறதும் தெரியும்.''
''அதே மாதிரி நான், சுத்த அசைவம்ங்கிறதும் உனக்கும் தெரியும். கல்யாணத்துக்கு முன்னாலயே நான் சொல்லியிருக்கேன். நாங்க அமாவாசை, கிருத்திகை கூட பார்க்காதவங்க; கிடா வெட்டி விருந்து வைக்கிறவங்கன்னு...''
''அசைவம் சாப்பிடறவங்களால் சைவம் சாப்பிட முடியும். ஆனா, சைவம் சாப்பிடறவங்களால் அசைவம் சாப்பிட முடியாது.''
''நீ நினைக்கிறது தப்பு, புவனா... நாள் தவறாமல், வேளை தவறாமல் அசைவம் சாப்பிட்டவங்களால் ரொம்ப நாள் சைவம் சாப்பிட முடியாது.''
சட்டென்று பூவாயியை ஏறிட்டாள், புவனா.
''ஏம்மா... நீங்க கூட என்னை ஏமாத்திட்டீங்கல்ல... அன்னிக்கு சமையல்கட்டு நாத்தம் அடிக்குதுன்னு சொன்னப்போ, மழுப்பிட்டீங்கல்ல?''
''இப்ப அதனால என்னடீ... நாங்க இப்படித்தான் சாப்புடுவோம். இது, எங்க பழக்கம்,'' என்று, இடையில் புகுந்த, செல்லாயி பக்கம் திரும்பினாள், புவனா.
''நான், உங்ககிட்ட பேசல... ஊர்லருந்து கூட்டிண்டு வரும்போதே நீங்க வேணாம்ன்னு தான் அவர்கிட்ட சொன்னேன். அவர் தான் கேக்கல...'' பாட்டிலை திறந்த பூதமானாள், செல்லாயி.
தொடரும்
இந்துமதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-பிப்-202106:01:29 IST Report Abuse
Prasanna Krishnan Why to love such idiots? Brahmin girls dont like Brahmin boys huh. Saavu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X