பாசிப்பயறில் 24 சதவீதம் புரதச்சத்து உள்ளது. அதை முழு தானியமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். மாவுச்சத்து, கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது. அசைவ உணவை குறைக்க விரும்புபவர்கள் பாசிப்பயறை ஈரல் போன்று உருமாற்றி அசைவ உணவு போல சாப்பிடலாம் என்கின்றனர், மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி உணவியல் மற்றும் சத்தியல் துறைத் தலைவர் ேஹமலதா மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் செந்தாமரைச் செல்வி. கனடா பயிர் வளர்ச்சி குழுமத்துடன் இணைந்து புதுமையான உணவு தயாரிப்பு தொழில் நுட்பத்தில் இந்த சைவ ஈரல் உணவை தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பாசிப்பயறை ஆறு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதை வடிகட்டி மிக்சியில் அரைத்து இட்லி போல வேகவைத்து எடுக்க வேண்டும். ஆறிய பின் ஈரல் போன்று வெட்ட வேண்டும். இதனுடன் வெங்காயம், தக்காளி வதக்க வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, முந்திரிபருப்பு, பொரிகடலை, தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய் அரைத்து மசாலா தயாரிக்க வேண்டும். மசாலா சேர்த்து வெட்டி வைத்த துண்டுகளை பிரட்டி சமைத்தால் சைவ ஈரல் தயாராகி விடும்.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்துகள் இருப்பதால் எலும்பு தேய்மான குறைபாடுகள் நீங்கும். சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சாப்பிடும் வகையில் எளிதில் ஜீரணமாகும் என்றனர்.
எம்.எம்.ஜெ.,