மனிதனையும், மற்ற உயிரினங்களையும் பணிய வைக்கும் ஓர் அருஞ்சாதனம், இசை. ஒவ்வொரு மனிதனின் மனோநிலையையும் இசை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும், அதன் நிகழ்வுகளையும், இசை மீட்டெடுக்கக் கூடிய வல்லமை பெற்றது.
இசை என்பது உணர்வுகளுக்குள் உயிர் வாழ்கிறது என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், 'கலைமாமணி' ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்.வடவள்ளியை சேர்ந்தவர் ரத்னகுமாரி கல்யாணசுந்தரம்,82. எதிர்பாராத விதமாக, சிறு வயதிலேயே, பார்வை இழந்தபோதிலும், தன்னம்பிக்கையுடன் சங்கீதம் கற்றார். விடாமுயற்சியால், சங்கீதத்தில் தேர்ச்சியடைந்து, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கச்சேரி நடத்தியுள்ளார். 75 ஆண்டுகள் அவரது இசை வாழ்க்கைக்கு, மகுடம் சூட்டும் விதமாக, தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்றுள்ளார்.
இதுகுறித்து, ரத்னகுமாரி கல்யாணசுந்தரம் நம்மிடம் பகிர்ந்தவை:எனது தந்தை பெரியசாமி; வேலுாரில் சப்-ரிஜிஸ்டராக பணிபுரிந்தார். நான், மூத்தவள்; ஒரு தம்பி, தங்கை உள்ளனர். எனது தந்தை, சங்கீதத்திலும், நாடகத்திலும் சிறந்து விளங்கினார். எனது ஐந்தாவது வயதில், பெரியம்மை நோய் தாக்கியது. அதில், எனது இரு விழிகளிலும் பார்வை முற்றிலும் பறிபோனது; பல சிகிச்சை மேற்கொண்டும் பயனில்லை.பார்வையற்ற நிலையில் இருந்த எனக்கு, ஏழாம் வயதில், தந்தை, சங்கீதம் கற்றுக்கொடுத்தார். அதன்பின், நடேஷ் ஐயர், கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றேன். 8ம் வயதில், வேலுாரில் உள்ள பிள்ளையார் கோவிலில் முதல் அரங்கேற்றம் நடத்தினேன். தொடர் பயிற்சி விளைவாக, 11வது வயதில், விஜயவாடாவில் உள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடினேன். தொடர்ந்து, சென்னை, திருச்சி, கோவையிலுள்ள, 'ஆல் இந்தியா ரேடியோ'விலும் பாடினேன். 28வது வயதில், சேலத்தில் நடந்த கச்சேரியில் பாடினேன்.அக்கச்சேரிக்கு வந்திருந்த கணவர், என் இசையில் ஈர்த்து, திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு முன்பு வரை, என் தம்பியும், தங்கையும், கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வர். திருமணத்துக்கு பின், கச்சேரிகளுக்கு கணவர் அழைத்துச் சென்றார். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளேன். 1972ல், நெல்லை ஞானசம்பந்தி ஆதீனம் சார்பில், யாழ்ப்பாணத்தில் நடந்த கச்சேரியில், 'கானமிர்தவானி' பட்டம் பெற்றேன். தற்போது, தமிழக அரசின், 2020ம் ஆண்டு, 'குரலிசை கலைஞர்' என்பதற்கான 'கலைமாமணி' விருது பெற்றுள்ளேன்.நம்மிடம் குறை உள்ளதை நினைக்காமல், திறமையை கண்டறிந்து, முழு கவனத்தையும் செலுத்தி, விடா முயற்சி செய்தால், வெற்றி பெறலாம், என்றார் அவர்.நிஜம்தானே!