விதையொன்று போட்டால் வேறொன்று வளரக்கூடாது. நெல் வளரும் இடத்தில் மக்காச்சோளம், கம்பு வளர்ந்தால் அது கூட களைச்செடிகள் தான். பயிர்ச் செடிகளின் இடையே வேண்டாதது உருவானால் அது களைச்செடி. இவற்றை முறையான நேரத்தில் அகற்றி பயிரை பாதுகாப்பது அவசியம்.நெல், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் தண்ணீரை உறிஞ்ச 8 மணி நேரமாகிறது என்றால் களைச்செடி அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் உறிஞ்சி விடும். இது ஒரு உதாரண அளவு தான். பயிர் எடுப்பதற்கு முன்பாகவே விரைவாக களைச்செடி தண்ணீரை உறிஞ்சிவிடும். அதே போல பயிர்களுக்கு இடும் உரத்தையும் வேகமாக எடுத்து வளரும். இதனால் பயிர்களுக்கு தேவையான தண்ணீரும், சத்துக்களும் குறைந்துவிடும்.அதுமட்டுமின்றி களைத்தாவரத்தின் விதை உற்பத்தித் திறன் மற்ற தாவரங்களை விட அதிகம். நெல், கம்பு, சோளம் போன்றவற்றின் ஒரு செடியில் இருந்து 500 - 600 விதைகள் உற்பத்தியாகிறது எனில் பார்த்தீனியம் போன்ற களைச் செடி ஒன்றிலிருந்து மட்டும் 10ஆயிரம் முதல் 50 ஆயிரம் விதைகள் உற்பத்தியாகும். இவை மண்ணில் விழும் போது போதுமான உயிர்த்தண்ணீர் கிடைக்காத சூழலில் 20 ஆண்டுகள் வரை கூட உறக்க நிலையில் இருக்கும். பின் மீண்டும் முளைக்கும். பயிர்ச்செடிகள் இரண்டாண்டுகள் கூட தாக்குப்பிடிக்காது. நெல்லின் வயது 120 நாட்கள் எனில், அதில் 3ல் ஒரு பகுதி நாட்கள் அதாவது 40 நாட்கள் செடியை சுற்றி களை இல்லாமல் அகற்ற வேண்டும். விதைத்த அல்லது நாற்று நட்ட 3ம் நாளில் களை எடுக்க வேண்டும். களைகள் பூப்பதற்கு முன்பாக அகற்றுவது அவசியம். பூக்க ஆரம்பித்தால் அவற்றில் விதை உருவாகி விடும். அடுத்து ஏழாண்டுகள் வரை களையை கட்டுப்படுத்த முடியாது.நெல், சோளம், மக்காச்சோளம், பருத்தி என ஒவ்வொரு பயிருக்கும் தனியான களைக்கொல்லிகள் உள்ளன. நெல்லுக்கு என உருவாக்கப்பட்ட களைக்கொல்லியை நெல் விதைத்த அல்லது நாற்று நட்ட 3ம் நாளில் 'ஹேண்ட் ஸ்பிரேயர்' கொண்டு துாவ வேண்டும். களைச்செடி இறந்து விடும். அதன் பின் 15 - 20 நாட்கள் களை வளராது. பிறகு களைச்செடிகள் மூன்று, நான்கு இலைகள் தோன்றும் போது தெளிக்க வேண்டும். பழமரக்கன்றுகள் நட்ட ஓராண்டு வரை களை இல்லாமல் கவனிக்க வேண்டும்.நெல்லுக்கு உள்ளதை பருத்திக்கு மாற்றி தெளித்தால் களையும், பருத்தியும் சேர்ந்து வாடிவிடும். 'பவர் ஸ்பிரேயர்' பயன்படுத்தினால் 15 - 20 சதவீதம் தான் களைகளின் மீது படியும். மீதியுள்ள மருந்துகள் காற்றில் பரவி பக்கத்து வயல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் 'ேஹண்ட் ஸ்பிரேயர்' தான் பரிந்துரைக்கப்படுகிறது.பயிர் அறுவடைக்கு பின்பும், தோட்டக்கலை பயிர்களில் நன்கு வளர்ந்த மரங்களின் இடைவெளியில் உள்ள களைகளை அகற்றுவதற்கு 'டோட்டல் கில்லர்' மருந்து உள்ளது. இதை மரத்தில் படாமல் தெளிப்பதன் மூலம் ஒட்டுமொத்த களையை அகற்றலாம்.வேளாண் விஞ்ஞானிகள் ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற களைக்கொல்லி மற்றும் மருந்தின் அளவை பரிந்துரை செய்துள்ளனர். கடைகளில் எந்த பயிருக்கு, எவ்வளவு என்கிற அளவையும் தெளிவாக கேட்டு பயன்படுத்தினால் மட்டுமே மகசூல் இழப்பின்றி லாபம் பெறலாம்.
-முரளி அர்த்தநாரி, இணைப்பேராசிரியர் உழவியல் துறை, கோவை வேளாண் பல்கலை,agronmurali@gmail.com