சின்னப்பா - பானுமதி மோதல்!
'தமிழில் நடிக்க வந்தபோது, ஸ்வர்க்கசீமா படத்தை, நான் ஐந்து முறை பார்த்தேன், 10 முறை பார்த்தேன். சுஜாதா பாத்திரத்தில் நீங்க அபாரமாக நடித்திருந்தீர்கள்.
'அந்த படம் பார்த்து, உங்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்...' என்று சொல்லி, தன்னுடன் நடித்த முன்னணி நடிகர்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், என்.எஸ்.கே., தங்கவேலு மற்றும் பாலையா போன்றோர், தன்னுடைய நடிப்பை சிலாகித்து பேசியதாக, ஒரு நேர்காணலில் பதிவு செய்திருந்தார், பானுமதி.
தமிழுக்கு வந்த பானுமதியின் முதல் படம், ரத்னகுமார்.
அன்றைய, 'டாப் ஸ்டார்' பி.யு.சின்னப்பாவுக்கு ஜோடி. நட்சத்திர இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு இயக்க, 'முருகன் டாக்கீஸ்' என்ற பெரிய நிறுவனம், பிரமாண்டமாக தயாரித்தது.
இதன் படப்பிடிப்பு தான் முதலில் துவங்கியது. ஆனால், இதற்கு பின்னால், தியாகராஜபாகவதருடன் ஜோடியாக நடித்த, 1947ல் ஆரம்பித்த, ராஜமுக்தி படம், 1948ல் வெளியானது; வெற்றி பெறவில்லை. ரத்னகுமார் படம், 1949ல் வெளியாகி, வெற்றி பெற்றது.
ரத்னகுமார் பட வேலைகள், நான்கு ஆண்டுகள் வரை இழுபறியானதற்கு முக்கிய காரணம், சின்னப்பா - பானுமதி இடையே ஏற்பட்ட முறைப்பு, முட்டல், மோதல்கள் தான்.
இன்றைக்கு நடிகர் ஒருவர், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழையும்போதே, அவருக்கு முன், 'பெர்பியூம்' நறுமணம் வந்து விடும். 'பாடி ஸ்பிரே' மற்றும் உடையின் மேல் நறுமணம் தெளித்து கொண்டு வருவார்.
'ஏசி' காரில் வந்து இறங்கி, 'ஏசி' கேரவனில் உட்கார்ந்து, 'மேக் - அப்' செய்து, 'ஷாட் ரெடி' என்றதும், கேமரா முன் தோன்றி, நடித்து விட்டு, உடனே கேரவனுக்குள் நுழைந்து விடுவார். அவருக்கு சாப்பாடு, ஓய்வு எல்லா வசதியும் அங்கேயே உண்டு.
காலையில் பூசி வந்த சந்தனம், எவ்வளவு நேரம் இருக்கும். வெயிலில், கேமரா முன் ஒளிவீசும் விளக்குகளில் நடிக்கும்போது, வியர்த்து கொட்டும். இந்த வியர்வை நாற்றமே, மோதலுக்கு அடிப்படை.
'ஹீரோ' சின்னப்பா, 'ஹீரோயின்' பானுமதி அருகில் வந்து, காதல் காட்சியில் நடிக்கும்போது, வியர்வை நாற்றம் வீசும். அவர் வாய் திறந்து, காதல் வசனம் பேசும்போது, பீடி நெடி அடிக்கும். இதனால் நெளிந்தார், பானுமதி.
வியர்வையும், பீடி நெடியும் அவரால் தாங்க முடியாமல், 'எனக்கு, தலைவலியாயிருக்கு...' என்று போய் விடுவார். அதோடு, 'ஷூட்டிங் பேக்கப்!'
'ஹீரோயின்' நல்ல, 'மூட்' இல்லாமல், காதல் காட்சி எப்படி எடுக்க முடியும்?
மதுவிலக்கு இல்லாத கால கட்டம் அது. ஒருநாள், மது அருந்தி வந்து விட்டார், சின்னப்பா.
பானுமதி அருகில் சென்று பேசும்போது, மது வாடை அடிக்க, அவருக்கு அதிர்ச்சி.
'எனக்கு தலை வலிக்கிறது...' என்று சொல்லி, கோபமாக, 'மேக் - அப்' அறைக்கு போனவர், அங்கிருந்து காரில் வீட்டுக்கு போய் விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகே, பானுமதி வீட்டுக்கு போய் விட்டது, இயக்குனர்களுக்கு தெரிய வந்தது.
இயக்குனர்களிடம், சற்று கோபமாக, 'நான் குடித்திருப்பது தவறு என்றால், என்னிடமே நேரில் சொல்லி இருக்கலாமே... யாரிடமும் சொல்லாமல் இப்படி போகலாமா...' என்றார், சின்னப்பா.
இயக்குனர்கள், கிருஷ்ணன் - பஞ்சு இருவரும், உடனே, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணாவை சந்தித்து, நிலைமையை விளக்கினர்; 'இனிமேல், இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்...' என்று, உறுதியளித்தனர்.
சினிமா உலகில் உள்ள கஷ்ட நஷ்டங்களை புரிந்தவரான, ராமகிருஷ்ணா, 'சரி... நாளைக்கு பேசி அனுப்பி வைக்கிறேன்...' என்று, அவர்களை அனுப்பி வைத்தார்.
எப்போதும் மது அருந்தி வரும், சின்னப்பாவிடம், இயக்குனர்கள் கேட்டுக் கொண்டதால், குடித்து வருவதையும், புகைப்பதையும் விட்டு, வந்து நடித்துக் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு நேர்காணலில், தஞ்சாவூர் கவிராயரிடம், பானுமதி கூறியதாவது:
இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இருவரும், சின்னப்பாவிடம் ஒரு விஷயத்தை கண்டிப்பாக சொல்லி விட்டனர்.
'படப்பிடிப்புக்கு வரும்போது, நீங்கள் குடித்து விட்டு வரக்கூடாது. குறிப்பாக, பானுமதியுடன் நடிக்கும்போது, அப்படி ஒரு நிலை வரவே கூடாது. அவருக்கு கோபம் அதிகம். கோபம் வந்தால், ஓங்கி அறைந்து விடுவார்...' என்று சொன்னது, சின்னப்பாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அவரால், குடிக்காமல் இருக்க முடியாது. என்னுடன் நடிக்க வேண்டிய பல, 'கால்ஷீட்'டுகளுக்கு, அவர் வருவதே இல்லை. அதனால், படம் இழு இழு என்று இழுத்துக் கொண்டிருந்தது என, கூறியிருந்தார்.
அஷ்டாவதானி பானுமதிக்கு, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்று, ஐந்து மொழிகளில் பேச, எழுத, படிக்க தெரியும். அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., - வி.என்.ஜானகி ஆகிய ஐந்து முதல்வர்களுடன் நடித்தும், பணியாற்றியும் உள்ளார்.
— தொடரும்
-சபீதா ஜோசப்