சுவரில் தொங்கிய தினசரி நாட்காட்டி, ஜூன் 25 என்று காட்டியது.
பொழுது விடிந்ததும் முதல் வேலையாக, காலண்டரில் தேதி தாளை கிழித்து விடுவாள், ஷிவானியின் அம்மா. எந்த நாளை தன் நினைவிலிருந்து துாக்கி எறிய நினைத்திருந்தாளோ, அந்த நாள் - ஜூன் 25; ஷிவானியின் திருமண நாள்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில், சுதாகரின் கரம் பிடித்தாள், ஷிவானி.
ஷிவானியும், சுதாகரும் ஒரே மருத்துவ கல்லுாரியில் பயின்று, சென்னையில் உள்ள மருத்துவமனையில், வெவ்வேறு துறைகளில் டாக்டர்களாக பணிபுரிந்தனர்.
ஷிவானி - சுதாகரின் கல்லுாரி கால காதல், திருமணத்தில் முடிந்ததில், எந்த தடையும் இருக்கவில்லை. ஊரே திரண்டு, அவர்களை வாழ்த்தியது. ஒரு மாதம் வெளிநாடுகளில் தேனிலவை கொண்டாடினர்.
நினைத்ததை சாதித்த மகிழ்ச்சியில், தன்னைப்போல அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது என்ற களிப்பில் கொஞ்சம் கர்வம் இருந்தது, ஷிவானிக்கு.
மருத்துவ பணி நேரம் தவிர, சுதாகருடனேயே இருக்க ஆசைப்பட்டாள். அந்தளவு அவன் மேல், அவளுக்கு அப்படி ஒரு வெறித்தனமான காதல். குழந்தை வைஷாலி பிறந்து, ஐந்து ஆண்டுகள் வரை நன்றாக போன ஷிவானியின் வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டு நிலைகுலையச் செய்தது.
கணவன் - மனைவிக்கு இடையிலான இடைவெளி, நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவளால் உணர முடிந்தது. மனைவியாக, சுதாகருக்கு அவள் எந்த குறையும் வைக்கவில்லை. பின், ஏனிந்த விலகல்...
சில நாட்களாக, சுதாகர் வீட்டுக்கு வருவது குறைந்தது. மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை, 'எமர்ஜென்சி' என்று சொல்லி சமாளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
அவள் அறியாத, 'எமர்ஜென்சி'யா... சுதாகரிடம் மேலும் கேள்விகளை கேட்டு, குடும்ப அமைதியை குலைக்க அவள் விரும்பவில்லை. விட்டுப் பிடிப்போம் என, பொறுமை காத்தாள்.
'ஷிவானி... கொஞ்ச நாளா சுதாகரின் போக்கே சரியில்லையே... ராத்திரியானா வீட்டுக்கு வர்றதில்லை; வெளியில் தங்கறார் போல... உங்களுக்குள்ள ஏதாவது பிரச்னையா...' என, மகள் மேல் உள்ள அக்கறையில், அம்மா அவ்வப்போது கேட்பாள்.
'நீ நினைக்கிறாப்புல பிரச்னை ஒண்ணுமில்லேம்மா. ஆஸ்பத்திரியில் வேலை அதிகமா இருக்கும்...' என, கவலைப்படும் அம்மாவிடம், புருஷனை விட்டுக்கொடுக்காமல், ஏதாவது சொல்லி சமாளிப்பாள், ஷிவானி.
ஒருசமயம், சுதாகர் வீட்டுக்கு வந்து, 15 நாள் ஆனது. போனில் கூட தகவல் தெரிவிக்கவில்லை. போன் செய்தாலும், 'ஸ்விச்ட் ஆப்' செய்யப்பட்டதாக கூறியது. ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்தாள், ஷிவானி. சுதாகருடனில்லாத ஒவ்வொரு நாளும், ஒரு யுகமாய் நீண்டது.
ஒருநாள் இரவு, திடீரென்று காரில் வந்து இறங்கினான், சுதாகர். போன உயிர் திரும்பி வந்ததை போல் மகிழ்ந்தாள், ஷிவானி.
'வாங்க சுதாகர்... இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க... உங்களை பார்க்காம ஷிவானியும், வைஷாலியும் தவிச்சுப் போயிட்டாங்க தெரியுமா...' என, காரை விட்டு இறங்கிய மருமகனை முகம் மலர வரவேற்றாள், ஷிவானியின் அம்மா.
அடுத்த நிமிடம், சுதாகரை தொடர்ந்து ஒரு இளம் பெண்ணும் இறங்கினாள். அம்மா - பெண் இருவரும் அதிர்ந்து நின்றனர்.
'ஷிவானி... இது, ஷாலினி. எங்க ஆஸ்பிடல்ல வேலை பார்க்கிறா...' சுதாகர் மேலே பேசும் முன், 'இருக்கட்டுமே... இப்ப இங்க எதுக்கு வர்றாங்க?' பதைபதைப்போடு கேட்டாள், ஷிவானி.
ஷிவானியின் கேள்விக்கு பதிலளிக்காமல், மவுனமாய் தன் அறைக்கு போக முயன்றான், சுதாகர்.
அவனை தொடர்ந்து, ஷாலினியும் போக, 'நில்லுங்க சுதாகர்... இவங்களை இந்த நேரத்துல எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க... நாலு பேர் பார்த்தா என்ன நினைப்பாங்க...' அவளையும் மீறி வந்த கோபத்தை அடக்க முடியாமல் கத்தினாள்.
'கத்தாதே ஷிவானி. ஷாலினியை நான் விரும்பறேன்; அவளுந்தான். அந்த உரிமையோடு தான், அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். அதனால, உனக்கு என்ன ப்ராபளம்... நீ வா, ஷாலினி...' கைப்பற்றி அழைத்தான், சுதாகர்.
'அடப்பாவி... கட்டின மனைவி இருக்க, திடீர்ன்னு யாரோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்ததுமில்லாம, அதுல உனக்கு என்ன ப்ராபளம்ன்னு கேக்கறீங்களே, நீங்கள்லாம் ஒரு மனுஷனா... படிச்சவர்தானே... எனக்கு என்ன ப்ராபளம்ன்னு, உங்களுக்கு தெரியாதா... சொல்லுங்க...' ஆத்திரத்தில், சுதாகரின் சட்டையை பிடித்து கேட்டாள்.
'ஷட் அப், ஷிவானி... எனக்கு, ஷாலினியை பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு. சோ, சேர்ந்து வாழ்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். தட்ஸ் ஆல்...' தில்லாக சொன்னான், சுதாகர்.
'அப்ப, நான்... நம் குழந்தை வைஷாலி...' ஆத்திரம் அடங்காமல் கேட்டாள், ஷிவானி.
'நோ ப்ராபளம் டியர். ஷாலினி, நீ, நான், வைஷாலி நாலு பேரும் ஒரே குடும்பமாய் சேர்ந்து இருக்கலாம். உன்னை விட்டுடுவேனா... உன்னை என்னால எப்படி மறக்க முடியும்... ஐ ப்ராமிஸ். என்னை விடு ஷிவானி...'
சுதாகரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பேரிடியாக, எரிதணலாய் ஷிவானியின் இதயத்தில் இறங்கின.
'சே, என்ன மனுஷர் இவர்... 'டார்லிங் டார்லிங்'ன்னு, என் பின்னாலேயே இத்தனை நாட்களாக சுற்றி வந்த சுதாகர், ஏன் இப்படி மாறினார்...
'இம்மாதிரி கேவலமான புருஷனோடு இத்தனை காலம் மனைவியாய் வாழ்ந்ததை நினைக்க வெறுப்பாய் இருக்கிறதே... எத்தனை கொடிய துரோகம்... இதை சகித்து வாழ்வதும் ஒரு வாழ்க்கையா...' என, நினைத்துக் கொண்டாள்.
அன்று, ஷிவானி எடுத்த முடிவு தான், அவளை, 15 ஆண்டுகளாய் ஒரு வைராக்கியத்துடன் வாழ வைத்தது.
அவள் நினைத்திருந்தால், ஷாலினியை வீட்டுக்கு அழைத்து வந்த அடுத்த நாளே, சுதாகர் மேல், 'அடல்ட்ரி' குற்றம் சுமத்தி, அவனை பழிவாங்கி இருக்க முடியும். அதனால், அவளுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் சரியாகிவிடுமா... பறிபோன வாழ்க்கை மீண்டும் கிடைக்குமா?
டாக்டருக்கு படிக்கும் மகளின் வளர்ச்சி கண்டு பூரித்தாள், ஷிவானி. 15 ஆண்டுகள், அவள், அம்மா மற்றும் மகள் வைஷாலி என, ஒரு ஆண் துணையின்றி வாழ்ந்தனர்.
கால வெள்ளத்தில் சுதாகரை பற்றிய நினைவுகள் முற்றிலுமாய் அடித்துச் சென்றாலும், ஆண்டுதோறும், ஜூன் 25ம் நாள், அவளையும் அறியாமல் மனதை தடுமாற வைத்தது.
சுதாகர் என்ன ஆனான், எங்கிருக்கிறான் என்று நினைத்துப் பார்க்க கூட முயற்சித்ததில்லை, ஷிவானி. ஆனால், வாழவேண்டிய வயதில், வாழ்க்கையை பறிகொடுத்து தவிக்கும் மகளின் நிலையை காணச் சகிக்காமல், தினம் வேதனையில் துடித்தாள், அவளது அம்மா.
ஷிவானியின் பிரிவுக்கு பின், ஷாலினியுடனான சுதாகரின் புது வாழ்க்கையில், பாலும் - தேனும் ஓடவில்லை; வசந்தம் வீசவில்லை.
ஷாலினி - சுதாகருக்கிடையே ஈகோ, மோதல்கள், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகளால் சில ஆண்டுகளில் அவனுடனான உறவை முறித்து, வேறொரு துணையை தேடிப் போய் விட்டாள். மனம் நொறுங்கிப் போனான், சுதாகர்.
பல ஆண்டுகளுக்கு பின், ஷிவானியை பற்றி நினைவுகள் வலுக்க, அவளையும் மகளையும் பார்க்க, சுதாகரின் மனம் ஏங்கியது. ஆனால், ஷிவானிக்கு, அவன் இழைத்த துரோகத்தை மகள் அறிந்தால், அவனை அப்பாவாய் ஏற்பாளா என, அவன் மனதில் பலவாறாய் எண்ணங்கள் நர்த்தனமாடின.
ஷாலினியை போல் மோசமானவள் இல்லை, ஷிவானி; நல்லவள். நிச்சயம் தன்னை மன்னித்து கண்டிப்பாய் ஏற்பாள். அவன் கஷ்டப்படுவதை அவளால் ஒருநாளும் தாங்க முடியாது என்பதால், நிராகரிக்க மாட்டாள் என, உறுதியாய் நம்பினான், சுதாகர்.
அன்று மாலை, ஷிவானியின் வரவுக்காக வீட்டு வாசலிலேயே பரபரப்போடு காத்திருந்தாள், அவளது அம்மா.
காரை விட்டு இறங்கியதும், ''ஷிவானி, ஒரு சந்தோஷமான விஷயம். காலையில் சுதாகர் வந்திருந்தார்,'' என்றாள்.
''யாரு, சுதாகர்?''
''என்னடி அப்படி கேட்கறே... உன் புருஷன் சுதாகர் தான் வந்திருந்தார்.''
''எதுக்காகவாம்?'' அலட்சியமாக கேட்டாள், ஷிவானி.
''உன்னை தேடிண்டு தான். அந்த பொண்ணு, ஷாலினி, அவரை விட்டுட்டு போயிட்டாளாம். மனுஷர் ரொம்ப உடைஞ்சு போயிருக்கார். பார்க்க பாவமாயிருந்தது.''
''ஸோ... அந்த பொண்ணு விட்டுட்டு போயிட்டதால, இத்தனை ஆண்டுகள் கழித்து, என் ஞாபகம் வந்து, தேடிண்டு வந்திருக்காராக்கும்.''
''ஆமா ஷிவானி... அவர், இப்ப ரொம்பவே மாறிட்டார். உனக்கு செஞ்ச துரோகத்திற்கு மனம் வருந்தி, திருந்தி, பிராயச்சித்தம் தேடி வந்துருக்கார். உங்கூட பழையபடி சேர்ந்து வாழணும்ன்னு ஆசைப்படறார்.''
''சபாஷ்... அதுக்காக, மாமியார் உன் சிபாரிசு வேண்டி வந்திருக்கார்ன்னு சொல்லு,'' எகத்தாளமாய் கேட்டாள், ஷிவானி.
''அப்படியெல்லாம் பேசாத, ஷிவானி... என்ன இருந்தாலும், சுதாகர், உன் புருஷன்.''
''அவர் அப்படி நினைச்சிருந்தா, என்னை துடிதுடிக்க விட்டு வேறொருத்தியோட ஓடிப்போயிருக்க மாட்டார்.''
''ஆம்பளைங்கன்னா, அப்படி இப்படி இருக்கறது ஒண்ணும் புதுசுல்லயே,'' மகளை சமாதானப்படுத்தினாள், அம்மா.
''ஏம்மா... அப்ப பெண் என்றால் கேவலமா... பெண்ணுக்கும், தன்மானம், சுய கவுரவம் இருக்காதா... நீயும் ஒரு பொண்ணுதானே... சொல்லும்மா, என் நிலைமையில் நீயிருந்தா, இதை ஏத்துப்பியா,'' ஆத்திரத்தோடு கேட்டாள், ஷிவானி.
''வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லி வாதாட, இது கோர்ட் இல்லே... உன் வாழ்க்கை. பல ஆண்டுகளுக்கு முன் தொலைஞ்சு போன உன் வாழ்க்கை; இப்ப, திரும்ப கிடைக்க இருக்கிறதுக்கு நீ சந்தோஷப்படணும்.''
''போதும்மா... 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'கிறது அந்தக் காலம். சுதாகருக்கு இவ்வளவு பரிந்து பேசறியே, அவரை விட்டுட்டு நான், வேறொரு ஆம்பிளையோட ஓடி, அவரோட சில காலம் வாழ்ந்துட்டு திரும்பி வந்தா, என்னை, சுதாகர் ஏத்துப்பாரா...
''ஏத்துக்க சொல்லி நீ சிபாரிசு செய்வியாம்மா... ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா... சொல்லும்மா?''
''ஷிவானி... உனக்கு சரியா தர்க்கம் பண்ண, எனக்கு உடம்புல சக்தியில்லே. நான் அந்த காலத்து மனுஷி. படிக்காதவ. ஆனா, இல்லற வாழ்க்கையில இருக்கற யதார்த்தத்தை நல்லா புரிஞ்சுண்டவ. இந்த காலத்துல, உன்னைப் போல பெண்கள் ஆண் துணை இல்லாம தனியா வாழறது முடியாத காரியம்.''
''ஏம்மா... நான், ஒரு வயசு குழந்தையா இருக்கச்ச, அப்பா இறந்துட்டதா, நீ சொன்னே. அவர் போன பிறகு, ஒரு பெண்ணா தனியா நின்னு என்னை வளர்த்து படிக்க வச்சு, டாக்டர் ஆக்கலியா... நான், உன் பொண்ணும்மா. உனக்கிருந்த தன்னம்பிக்கையும், தைரியமும், மன உறுதியும் எனக்கும் இருக்கும்மா.''
''ஆயிரம் சொன்னாலும், நீ சொல்றதை என்னால ஏத்துக்க முடியலேம்மா. உன் மகள் வைஷாலியின் எதிர்காலம் கருதியாவது, நீ பழசை மறந்து, சுதாகருடன் சேர்ந்து வாழறதுதான் சரியா இருக்கும்ன்னு எனக்கு தோணுது.''
''சாரிம்மா... அது, என்னால முடியாது. வேத மந்திரங்கள் முழங்க, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பல பேர் முன்னிலையில் அக்னி சாட்சியா கைப்பிடித்த மனைவியை கைவிட்டு துரோகம் செய்துள்ளார். வேற ஒரு பெண்ணோட சேர்ந்து வாழ்ந்து முடிந்தபின், கைவிட்ட மனைவியை தேடி வரும் புருஷனை ஏற்க, நான் ஒண்ணும் கண்ணகி இல்லேம்மா... என்னை மன்னிச்சிடு.''
படபடவென பேசிச் செல்லும் மகளை, வேதனையோடு பார்த்தாள், ஷிவானியின் அம்மா.
சுதா ரவிச்சந்தர்