சுமைகள் சுமக்கும் பெண்மைக்கு!
சுமைகள் சுமக்கும் உன்னை
சுமையாய் நினைக்கிறது
வையம்!
சுற்றும் வையத்தின்
மையம் நீ எனும்
சூட்சமம் அறியாதவன்!
உலகம்
உன்னைச் சுற்றுகிறது
நீயோ
தலை சுற்றி தள்ளாடுகிறாய்!
சுழலும் சக்கரத்தின்
அச்சாணி நீ...
உன் அச்சு முறிந்தால்
அத்தனையும் அம்போ!
நீ அறியாதபடி
பீலிபை ஏற்றுவதாய் ஏமாற்றி
பெரும் பாரம் ஏற்றுகின்றனர்...
நீயோ
கோவர்த்தனகிரி தாங்கும்
கோபாலன் என்று குதுாகலிக்கிறாய்!
உன்னை
பாதியாய் செதுக்கி
அர்த்தநாரி என்கின்றனர்...
நீ
அர்த்தம் புரியாமல்
ஆனந்திக்கிறாய்!
பெண்ணை மட்டும்
வழுக்கி விழ வைக்கிறது
பாசம்...
அது, தண்ணீரில் அல்ல
கண்ணீரில்
கபடமாய் மறைந்திருக்கிறது!
உன்
பலம் புரியாதது தவறில்லை...
யானைக்கும்
தன் பலம் தெரிவதில்லை!
பெண்ணே... இனியும்
பலவீனங்களை
புரியாமல் இருந்தால்...
உன்னை உலகம்
சுகமாக வாழ வைக்காது...
புது சரித்திரம் படைக்க
வீறு கொண்டு எழு!
எஸ். விஜயலட்சுமி, கடம்பூர்.