முன்கதை சுருக்கம்:
அம்மா பூவாயி மற்றும் அத்தை செல்லாயியை சென்னைக்கு அழைத்து வந்தான், கார்த்திகேயன். இந்நிலையில், தலைவலி காரணமாக, மதியம் வீட்டுக்கு வந்த புவனா, மூவரும் அசைவம் சாப்பிடுவது குறித்து கோபப்பட, செல்லாயி ஆக்ரோஷமானாள்-
அதன்பின் நடந்ததெல்லாம் ரசாபாசமானவை. செல்லாயி, புவனாவை அடிக்க, புவனா, அவளை திருப்பி அடிக்க, புவனாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான், கார்த்திகேயன்.
''என்ன நினைச்சுக்கிட்டிருக்க. நீ எது செய்தாலும் பொறுத்துக்கிட்டு, உன் காலடியில் நாய் குட்டி மாதிரி சுருண்டுக்கிட்டு கிடப்பேன்னு நினைச்சியா... அது, உங்க பரம்பரை வழக்கமா இருக்கலாம். ஆனா, எங்க பரம்பரை வீரமான பரம்பரை.''
''உங்க வீரம் தான் தெரியுமே... எடுத்ததுக்கெல்லாம் அரிவாளை துாக்குற வீரம்... பொம்பளைங்களை கொலை செய்யுற வீரம்.''
''ஏய்... என்னடீ வாய் நீளுது.''
''டீ, கீன்னா மரியாதை கெட்டுடும்.''
''என்னடீ செய்வ?''
''இதுக்கு மேல தாங்கிக்க என்னால முடியாது. ஒண்ணு இந்த வீட்ல உங்க அத்தை இருக்கணும், இல்லைன்னா நா இருக்கணும்.''
''இது ஒண்ணும் உன் வீடு இல்ல, நீ சட்டம் போட. இது, என் வீடு. எங்கத்தை என் கூடத்தான் இருப்பாங்க... உனக்கு இஷ்டமிருந்தா இருக்கலாம், இல்லாட்டி வெளிய போகலாம்.''
''டேய், கார்த்தி... வேண்டாம்ப்பா...'' என்று பதறினாள், பூவாயி.
''நீ சும்மா இரும்மா... ஒரு பொட்டச்சிக்கு இவ்வளவு வாயும், கையும், திமிரும் இருந்தா எனக்கிருக்காதா?''
''பொட்டச்சி கிட்டச்சினெல்லாம் அசிங்கமாய் பேச வேணாம்.''
''அப்படித்தான் பேசுவேன். இனிமே, உனக்கு அடங்கி நடக்க முடியாது. எனக்கு அடங்கி நடக்கிறதுன்னா வீட்டுல இரு. இல்லாட்டி வெளிய போ.''
''அப்படியே அப்பன் ரத்தம்.''
''என்னடீ சொன்ன... எங்கப்பனை பத்தி பேச, நீ யாருடி?'' கொத்தாக அவள் தலைமுடியை பற்றி, 'தரதர'வென்று இழுத்து வந்து, வெளியில் தள்ளினான்.
''இனிமேல் என் மனசுலயும், இந்த வீட்டுலயும் உனக்கு இடமில்ல... எங்கயாச்சும் போ...''
''என் மனசுலயும் உங்களுக்கு இடமில்ல... இனி, உங்க மூஞ்சியில முழிப்பேன்னு நினைக்காதீங்க.''
''கார்த்தி... கார்த்தி... வேணாம்ப்பா...'' என்று, அம்மா கெஞ்ச கெஞ்ச, கதவை மூடி தாழிட்டான்.
இது நடந்த ஒரு மாதத்திற்கெல்லாம், தான் தங்கியிருந்த, 'லேடீஸ் ஹாஸ்டலில்' இருந்து, விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாள், புவனா. உடன்படுவதாக, பதிலுக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான், கார்த்திகேயன்.
குடும்ப நீதிமன்றத்திற்கு வந்தது, வழக்கு. விசாரித்த பெண் நீதிபதி, இருவரையும் சமரசம் செய்து வைக்க முயன்று, தோற்றுப் போனார்.
''கடைசி முயற்சியாக இருவருக்கும் ஒரு ஆண்டு அவகாசம் தருகிறேன். யோசித்து முடிவெடுங்கள்,'' என்றார், நீதிபதி.
'தேவையில்லை. இனி, எங்களால் ஒன்றாக வாழ முடியாது. எங்களுக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள்...' என, இருவரும் சேர்ந்தே கூறினர்.
''சரி புவனா... உங்களுக்கு ஜீவனாம்சமாக ஏதாவது...''
''வேண்டாம். என் தேவைகளை உழைத்து சம்பாதித்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்,'' என்றாள். வேறு வழியின்றி விவாகரத்து வழங்கினார், நீதிபதி.
இவை எதையுமே அறியாத, ராஜாராமன், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், பட்டுப் புடவை, 'பேன்ட் - சர்ட்' எல்லாம் வாங்கிக் கொண்டு, சென்னைக்கு வந்தான்.
மாலை, 4:00 மணி வாக்கில், கார்த்திகேயன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். கதவு திறந்த, பூவாயி, ஹீனமான குரலில், ''வாங்க தம்பி,'' என்றாள்.
அந்த முகத்தையும், குரலையும் கண்ட ராஜாராமன், ''என்னம்மா...'' என்று கேட்டான்.
அழுதுகொண்டே மொத்தத்தையும் கொட்டினாள், பூவாயி.
பேயறைந்தது போல ஆனான், ராஜாராமன். இவை எதையும் அவன் எதிர்பார்க்கவில்லை.
மெல்ல தன்னை
சமாளித்து, ''வரேம்மா...'' என, கிளம்பினான்.
காரில் அமர்ந்து யோசித்தான். பின்னர் ஒரு முடிவிற்கு வந்தவனாக, கார்த்திகேயனை மொபைலில் கூப்பிட்டான்.
''ஒரு விஷயமா சென்னை வந்தேன். அடையார் பார்க்குல இருக்கேன். இங்க வந்து என்னை பார்க்க முடியுமா?''
''இதோ வரேன்,'' என்றான், கார்த்திகேயன்.
புவனாவிற்கு போன் பண்ணி, அதையே கேட்டான். அவளும் வருவதாக சொன்னாள்.
அடையார் பார்க் போய், முதல் முதலாக சந்தித்த அதே இடத்தில் காத்துக் கொண்டிருந்தான், ராஜாராமன்.
அடுத்த, 15 நிமிடத்தில் இருவரும் வந்தனர். ஒருவரை ஒருவர் எதிர்பார்க்கவில்லை என்பது, ராஜாராமனுக்கு தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் தவிர்ப்பதை புரிந்துகொண்டான்.
''இங்கேயே பேசலாமா அல்லது 'ரெஸ்டாரென்ட்' போய் சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா?''
'இங்கேயே பேசலாம்...' இருவரும் சொல்லி வைத்த மாதிரி, ஒன்றாகவே பதில் கூறினர்.
ஒரு வினாடி அமைதியாக இருந்த, ராஜாராமன், பின், பேசப்போகும் விஷயத்தை தீர்மானித்து விட்டவனாக, சட்டென்று எடுத்த எடுப்பிலேயே, ''வெட்கமாக இல்லை உங்களுக்கு?'' என்று சுரீரென்று உறைக்கும்படி கேட்டான்.
''அசிங்கமாக இல்லை... இதற்கா ரெண்டு பேரும் காதலிச்சீங்க... இதையா காதல்ன்னு சொல்லிண்டீங்க... இதற்கா இத்தனை அமர்க்களம் பண்ணீங்க?''
இருவர் முகங்களும் தாழ்ந்தே இருந்தன. மேலே பேசினான், ராஜாராமன்.
''நீங்க வெட்கப்படறீங்களோ இல்லையோ... நான் வெட்கப்படறேன், வேதனைப்படறேன், அசிங்கப்படறேன். உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சதுக்கு துக்கப்படறேன்.''
இருவரும் கவிழ்ந்த தலை நிமிராமல், ஆசிரியரால் தண்டிக்கப்படும் மாணவர்களை போல் இருந்தனர்.
''உங்களால் பேச முடியாதுன்னு எனக்கு தெரியும். பேசற தகுதி உங்களுக்கு இல்லேன்னும் தெரியும். ஆனால், நான் பேசியே ஆகணும். எனக்குள் துக்கமாக அடைத்துக் கொண்டிருப்பதை வெளியில் கொட்டியே ஆகணும்...
''காதல்ன்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு... ஒரு நிஜமான காதல் என்னவெல்லாம் செய்யும்ன்னு தெரியுமா... எதையெல்லாம் விட்டுக் குடுக்கும்ன்னு தெரியுமா... தெரியாது, தெரிஞ்சிருந்தாத்தான் விட்டுக் குடுத்திருப்பீங்களே...
''மிஸ்டர் கார்த்திகேயன்... உங்க நல்ல வாழ்க்கைக்காக, நீங்க சந்தோஷமா இருக்கணும்கிறதுக்காக, விஷம் குடிச்சு உசுர விட்டாளே, படிப்பறிவில்லாத அந்த அப்பாவி பொண்ணு, ஜோதி... அவ, உங்க மேல வச்சிருந்தது காதல். உங்களுக்காக, அன்பை மட்டுமல்ல, தன்னையே விட்டுக் கொடுத்தாள்.
''அதே மாதிரி புவனா... உன்னை ஒரே ஒரு தரம் கோவில்ல பார்த்து, மனசால நினைச்சேனே... அதுக்காக ஆசைப்பட்டவனோட உன்னை சேர்த்து வைக்கணும்ன்னு, ஓடி ஓடி உழைச்சேனே... வெட்ட வந்தவன்கிட்டருந்து உன்னை காப்பாத்த, குறுக்க பாய்ந்து கை வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தேனே... அதெல்லாம் தான் காதல்.''
கண் கலங்க அவனை ஏறிட்டாள், புவனா.
ஆனால், அவன் அவளை, 'இவ்வளவுதானா நீ?' என்கிற மாதிரி துச்சமாக பார்த்தான்.
''ஆமாம்... தெரியாமத்தான் கேக்கறேன், புவனா... உனக்கும் அத்தை, சித்தி, பெரியம்மான்னு எல்லா சொந்தங்களும் இருக்காங்கதானே... அந்த மாதிரி உறவு முறைகளோட, சொந்தங்களுக்கு மத்தியில வளந்தவதானே நீ... அப்படியிருந்துமா, சொந்தம்ன்னா என்னன்னு தெரியல...
''உன் சொந்தம் வேற, கார்த்திகேயனுடைய சொந்தம் வேறன்னு பிரிச்சு பார்க்கிற மனசு எப்படி வந்தது... அவரோட அத்தையை வேணாம்ன்னு சொல்லக்கூடிய தைரியம் எங்கிருந்து, ஏன் வந்தது... சம்பாதிக்கிற தைரியமா, தனியாக கால் ஊன்றி நிற்க முடிகிற கொழுப்பா?''
திடுக்கிட்டு, கண்ணாலே அவனை பார்த்தாள்.
''என்ன அப்படி பார்க்கற... என்னடா இத்தனை நாளா மரியாதையா பேசிண்டிருந்தானே... இன்னிக்கு மரியாதை கெட்டு ஒருமையில் கூப்பிடுகிறானேன்னு, தானே பார்க்கற... உன் மேல நான் வச்ச மரியாதையெல்லாம் போயிடுத்து, புவனா... உன் மேல மட்டுமில்ல, கார்த்திகேயன் மேல் இருந்த மரியாதையும் கூடத்தான்...''
''ராஜாராமன்...'' என்று, எதையோ சொல்ல வந்தான், கார்த்திகேயன்.
''ஒரு நிமிஷம், கார்த்திகேயன்... நான் இன்னும் முடிக்கல. சொல்ல வந்ததை முழுசா சொல்லிடறேன். ஏன், மிஸ்டர் கார்த்திகேயன்... சரி, அவ தப்பு பண்ணிட்டா... உங்க அத்தையை, அவ அத்தையா ஏத்துக்கலை... அதை அமைதியாய் பேசி, சரி பண்ணியிருக்க முடியாதா...
''அவகிட்ட உண்மையை சொல்கிற குறைந்தபட்ச நேர்மையாவது, உங்ககிட்ட இருந்திருக்கணும். வீட்டுப் பெரியவங்க ஆசைப்பட்டா அல்லது நீங்களே கூட ஆசைப்பட்டிருந்தா, அவகிட்ட சொல்லிட்டே அசைவம் சமைத்திருக்கலாம். இல்லேன்னா ஓட்டலிலிருந்து வாங்கி வந்திருக்கலாம்.
''வெறும் சாப்பாட்டு பண்டம்தானேன்னு, விட்டுக்கொடுக்கிற மனசு புவனாவுக்கு இருந்திருக்கலாம். அவ மனசுக்கு பிடிக்காத பட்சத்தில், தனியாக சமையல் செய்து, அவ மட்டும் சாப்பிட்டிருக்கலாம்...
''மனசு இருந்தா எல்லாம் செய்திருக்கலாம்...'' என்ற ராஜாராமன், ஆழமான பெருமூச்சுடன், சிறிது நேரத்திற்கு பிறகு, ''ஆனால், நீங்க ரெண்டு பேருமே அதை செய்யல. உங்க ரெண்டு பேருக்கும் பொறுமை இல்ல. நீங்க ருசியிலும் நாக்க அடக்கல, பேச்சிலும் நாக்கை அடக்கல... நா காக்கணும்ன்னு தெரியல.
''அது மட்டுமா தெரியல... இன்னும் எத்தனையோ விஷயங்கள் தெரியல. வாழ்க்கையை அதன் போக்கில் அனுசரிச்சு போக தெரியல. யார் யார் எப்படி இருக்காங்களோ, அவங்களை அப்படியே ஏத்துக்க தெரியல. அதுக்கெல்லாம் மனசு ரொம்ப பக்குவப்பட்டிருக்கணும். பழம் மாதிரி கனிஞ்சிருக்கணும். நுட்பமான உணர்வுகள் பிடிபட்டிருக்கணும்.
''கடவுள் படைத்த மனிதர்களை, நம் விருப்பத்திற்கு வளைக்கவோ, மாத்தவோ, நாம் யார் என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்திருந்தால், இந்த மாதிரி நடந்திருக்க மாட்டீங்க... பிரிஞ்சு தனித்தனியா வாழ மாட்டீங்க...
''சரி, இதையெல்லாம் கூட விடுங்க. உங்களால் மூணு உயிரு போச்சே, அதையெல்லாம் நினைச்சு பார்த்தீங்களா... அதற்காவது மரியாதை குடுத்தீங்களா... நீங்க மட்டும் வாழறது, வாழ்க்கை இல்ல... நம்மைச் சுற்றி இருக்கிறவங்களை சந்தோஷமா வச்சுக்கிறது தான், வாழ்க்கை. பார்க்க போனால் வாழ்க்கையே அதற்காக தான்.''
உறைக்க உறைக்க சொல்லி, அலுத்துப் போனவனாக எழுந்து நின்றான்.
''உங்களை மாதிரி நாலு பேர்... ஏன், நீங்க ரெண்டு பேர் போதும்... காதல் மீது ஜனங்களுக்கு ரொம்ப மரியாதை வந்துடும்... அட்டகாசமாக, ஆர்ப்பாட்டமாக, டைட்டானிக் கப்பல் மாதிரி காதலிக்க ஆரம்பிக்கிறது. கல்யாணம் வரை சந்தோஷமாக சீராக கொண்டு போறது...
''கல்யாணத்துக்கு அப்புறம் அந்த கப்பல், கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் விட ஆரம்பிச்சு, அது பெரிதாகி, உடைந்து, சிதறி மூழ்கிப் போச்சோ... அப்படி, ஒவ்வொரு குறையா தெரிய ஆரம்பிச்சு, அதை பெரிதாக்கி, சண்டை போட்டு, விவாகரத்து வரை வந்து பிரிந்து போய், தனித்தனி தீவு மாதிரி வாழறது...''
கடைசியாக அவர்களை வேதனையாக பார்த்து, விரக்தியோடு, ''ச்சீ... போங்க, நீங்களும் உங்க காதலும்...'' என்ற ராஜாராமன், அவர்களிடம் விடைபெற்றுக் கொள்ளாமல், திரும்பிக்கூட பார்க்காமல் வேகமாக நடந்து, காரில் ஏறி ஓட்டலை விட்டு வெளியேறினான்.
— முற்றும்
இந்துமதி