அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 மார்
2021
00:00

குழாய் பத்திரம் !
மனித உடலுக்குள் ஏராளமான குழாய்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது உணவுக்குழாய். வாழ்வதே அந்த குழாயால் தான். அதை முறையாக பேணிப் பாதுகாக்க வேண்டும்.
உணவை விழுங்கும்போது உணவுக் குழாயின் அடிப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள தசை விரிந்து, மெல்லும் உணவு இரைப்பைக்குள் செல்ல அனுமதிக்கும். உணவு உள்ளே சென்றதும் தானாக மூடிக்கொள்ளும்.
இந்த அமைப்பு பல காரணங்களால் பாதிக்கப்படலாம்...
* உடல் பருமன்
* இரைப்பையின் மேல் பகுதி வீக்கம்
* புகை பிடித்தல்
* கர்ப்பம்
* உலர் வாய்
* ஆஸ்துமா
* சர்க்கரை நோய்
* திசுவில் வரும் நோய்கள்
* மது அருந்துதல் போன்ற காரணங்களால் உணவுக் குழாயின் உள் சுவர் பாதித்து, வீக்கம் ஏற்படலாம். ஒரு கட்டத்தில் ரத்தக் கசிவு, உணவுக் குழாய் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
வாழ்க்கை நடைமுறையில் மாற்றம் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்.
அதிகப்படியான உடல் எடை, வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த அழுத்தத்தின் எதிர்மறையாக, இரைப்பையில் சுரக்கும் அமிலம், உணவுக் குழாய்க்கு வந்து பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இந்த பாதிப்பை தவிர்க்கலாம்.
இடுப்பில் இறுக்கமான உடை அணியும்போது அழுத்தம் அதிகரிக்கும்.
கொழுப்பு நிறைந்த, வறுத்த உணவுகள் நெஞ்சு எரிச்சலை துாண்டும்.
மது, தக்காளி சாஸ், சாக்லெட், பூண்டு, வெங்காயம், காபின் பொருட்கள் நெஞ்சு எரிச்சலை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இவற்றைத் தவிர்க்க...
* சாப்பிட்டவுடனே துாங்கக் கூடாது
* உணவு உண்டு குறைந்தது, மூன்று மணி நேரத்துக்குப் பின் துாங்கச் செல்ல வேண்டும்
* படுக்கையில் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும்.
சிகரெட் புகைப்பது உணவுக் குழாய் செயல்பாட்டை பாதிக்கும். இதை தவிர்த்துவிடுவது நல்லது.

சமுதாய ஓவியர்!
சுவர், தாள் என எதைக் கண்டாலும், கிறுக்கும் பழக்கம் பல சிறுவர், சிறுமியருக்கு உண்டு. இதைக் கண்டு கவலைப்பட வேண்டாம்.
சிறுவயதில் கிறுக்கி பெற்றோரை கிறுக்குப்பிடிக்க வைத்தவர்கள் தான், பிற்காலத்தில் பெரிய பெரிய ஓவியராக புகழ் பெற்றுள்ளனர்.
அப்படிப்பட்ட ஒருவரை அறிவோம்.
ஓவியர் சல்வடார் டாலி. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் பிறந்தார். அடி மனதில் ஆழ்ந்திருக்கும் ரகசியத்தை வரையும் ஓவியராக மிளிர்ந்தார். மாய யதார்த்த வகை ஓவியத்தின் பிரதிநிதியாக கருதப்படுகிறார்.
சிறுவயதிலேயே துாரிகையை துாக்கியவர். புத்தகம், காகிதம், சுவர் என கிடைக்கும் இடத்திலெல்லாம் வரைந்தார் சால்வடார். இவர் வரைந்ததில் கார்ட்டூன் என்ற கருத்துப்பட பாணி ஓவியங்களே அதிகம்.
தாயார் தான் சால்வடாருக்கு வழிகாட்டியாக இருந்தார். இளம் வயதிலே ஓவியம் கற்றுக்கொண்டார். படைப்பாற்றலை பல்வேறு எல்லைகளில் விரித்தார். அவரது திறன் கண்டு வியந்தார் தந்தை. அவர் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்தார்.
பின், மரிஸ்டா அகாடமியில் கலை வேலைப்பாடுகளின் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.
சமுதாயத்தில் நிலவிய பிரச்னைகளை ஆய்வு செய்து, அதில் உள்ள முரண்பாடுகளை கண்டார். அதன் அடிப்படையில் ஓவியங்களை உருவாக்கினார். அவை பெரும்பாலும் மாய யதார்த்தவாத வகையில் அமைந்தன.
ஓவியத்தில் மட்டுமல்ல, சிற்பம் வடிப்பது, புகைப்படம் எடுப்பது, கலைஞர்களுக்கு உதவுவது என பல வகைகளிலும் அர்ப்பணித்து செயல்பட்டார் சால்வடார்.
ஐரோப்பிய நாடான பிரான்சில், பிரபல ஓவியர் பிகாசோவை சந்தித்தார். அவரது ஓவிய நுணுக்கங்களையும் கிரகித்து கொண்டார். இதனால் கியூபிசம், டாடயிசம் போன்ற புதிய வகை போக்குகளை ஓவியங்களில் அதிகமாக கையாண்டார்.
புராணங்களையும், நடைமுறை வாழ்க்கையையும் பிணைக்கும் வகையில் ஓவியங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டினார். அது அவருக்கு இயல்பாக அமைந்தது.
இவர் வரைந்த ஓவியங்கள் பிரபலமாகின. பலரின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தன.
மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற பிரபல ஓவியங்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னியுடன் இணைந்து பணியாற்றினார். ஓவியங்களில் குழந்தைத்தனமும், கிறுக்குத் தனமும் குடியிருக்கும். அவரது நடத்தையும் அதுபோலவே அமைந்திருக்கும்.
ஓவியத்தில் மட்டுமல்ல; இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார் சால்வடார். மிகச்சிறந்த வாசகராகவும் இருந்தார்.
இவர் வரைந்த ஓவியங்களும், செதுக்கியச் சிற்பங்களும், உலகின் முன்னணி ஓவியக் கல்லுாரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X