கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றேன்.
கணிதத்தில், 100 மதிப்பெண் எடுத்ததுடன், பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன்.
மாற்று சான்றிதழ் வாங்கச் சென்ற போது, கணித ஆசிரியர் அப்புராவ், 'அடுத்து என்ன செய்ய போகிறாய்...' என்றார்.
தயங்கியவாறு, 'துணிக்கடையில் அப்பாவுடன் கணக்கு எழுதப் போகிறேன்...' என்றேன்.
அவருக்கு வந்ததே கோபம். என்னை அழைத்தபடி, விறுவிறு என கடைக்கு வந்தார். என் அப்பாவிடம், 'நல்லா படிக்கிறவனை, கடையில உக்கார வெச்சு வீணாக்கிடாதீங்க... கணக்கு எழுத வேற ஆள் வெச்சுக்கோங்க...' என அறிவுரைத்து, என்னை படிக்க துாண்டினார்.
பின், திருச்சியில் அவர் வீட்டிலேயே தங்க வைத்து, கல்லுாரியில் சேர உதவினார்.
சேர்ந்த பின், 'தம்பி... இதுதான் உன் வாழ்க்கை பாதை... என்னால் வழிகாட்டத்தான் முடியும்; இனி உன் சாமர்த்தியம்...' என்றார்.
அவர் காட்டிய வழியில், முதுகலை விவசாயம் படித்தேன். பேங்க ஆப் இந்தியாவில், டி.ஜி.எம்., ஆக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். உடன் பணிபுரிந்த அலுவலர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்தேன்.
என் வயது, 65; உதவுவதை வாழ்க்கையாக கொண்டிருந்த அந்த ஆசிரியரிடம் பயின்றதை எண்ணி மகிழ்கிறேன்.
- கே.நாகராஜன், சென்னை.
தொடர்புக்கு: 99440 82444