புதுச்சேரி, இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
தமிழ் ஆசிரியை கலைவாணி, செய்யுளை, பொருள் விளக்கத்துடன் தருவது ரசிக்கும்படி இருக்கும்.
ஒரு நாள் மனப்பாடப்பகுதி நடத்தினார். அதை கவனித்து, முதலில் தவறின்றி கூறி, பரிசும், பாராட்டும் பெற்றேன். ஒரு நாள், செய்யுளுக்கு பொருள் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த செய்யுளை மனப்பாடம் செய்வதில், மும்முரமாக இருந்தேன். அவர் கூறிய பொருளைக் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில், 'யார் முதலில் பொருள் கூறப் போவது...' என்றார்.
வழக்கம் போல, மனம் பாடம் செய்த செய்யுளை கூற துவங்கியதும், சக மாணவியர் கிண்டலாக சிரித்தனர். காரணம் புரியாமல் திகைத்தேன். என்னை தட்டிக் கொடுத்தவர், 'மனப்பாடம் மட்டுமல்ல, பொருளையும் அறிந்து, புரிந்து படிக்க வேண்டும்...' என்றார். கவனத்துடன் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றேன்.
என் வயது, 54; பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். வகுப்புகளில், ஆச்சரியப்படும் வகையில் பாடம் நடத்துவேன். மாணவ, மாணவியர், 'எப்படி மிஸ்...' என வியக்கும் போது, மானசீகமாக அந்த ஆசிரியைக்கு நன்றி கூறுகிறேன்.
- சி.உமா மகேஸ்வரி, விழுப்புரம்.
தொடர்புக்கு: 94893 63774