முன்கதை: சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிய மகன், திரும்பி வந்தது கண்டு மகிழ்ந்தார் லட்சுமி. ஆனால், அவனோ தாய்ப்பாசம் இல்லாமல், பணம் மீது குறியாக இருந்தான். அது பற்றியே விசாரித்து கொண்டிருந்தான். இனி -
திங்கள் கிழமை -
வானத்து சூரியன், புவியின் மறுபாதிக்கு விஜயம் செய்ய ஆயத்தமாகிய காலை வேளை!
விழிப்பு தட்ட, அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்த லட்சுமி, அருகில் படுத்திருந்த சூரியராஜாவை காணாது திகைத்தார். அடி வயிற்றிலிருந்து, பய பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன.
சிறிதும் தாமதிக்காமல், வெளியில் வந்து தேடிப் பார்த்தார்; எங்கும் தென்படவில்லை.
பின், அவசரமாக உள்ளே வந்து, அவன் கொண்டுவந்திருந்த பையை தேடினார்; அதையும் காணவில்லை.
அடுத்த நொடியே புரிந்து விட்டது.
பணம் கிடைக்காது என்று தெரிந்ததும் மறைந்தோடி விட்டான் சூரியராஜா. துக்கம் தொண்டையை அடைத்து, கண்ணீர் வடிய ஆரம்பித்தது. தாய் மீது மேலிட்ட அன்பின் காரணமாக திரும்ப வரவில்லை மகன். உறவை பயன்படுத்தி பணத்தை சூறையாடவே வந்திருக்கிறான்.
'தவமாய் தவமிருந்து, 10 மாதம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்து, அன்பையும், பாசத்தையும் கொட்டி கொட்டி வளர்த்த மகன், கல் நெஞ்சம் உடையவனா... கடவுளே, இது என்ன சோதனை. என்னை ஏன் படைத்தாய்...' குழப்ப மனதுடன் லட்சுமியின் தேகம் நடுங்கியது!
'இனி, அவனால் எந்த நிம்மதியும் கிடைக்க போவதில்லை... நிம்மதியை தேட வேண்டியது தான்... எல்லாத்தையும் விடிஞ்சா பார்த்துக்கலாம்...' மனம் அமைதி நிலைக்கு சென்றது.
சற்று தயங்கியபடி, அடுத்த செயலுக்கு தயாரானார்.
இரவோடு இரவாக மகன் ஓடிய தகவல், ஊர் முழுதும் பரவியது.
சற்று நேரத்தில், பக்கத்து வீட்டு தோழி பத்மா வந்து, நம்பிக்கை சொற்களால் ஆறுதல் கூறினார்.
காலை உணவை எடுத்து வந்து பறிமாறியபடியே, ''பையனோட குணாதிசயம் இப்ப நல்லா தெரிஞ்சு போச்சு... புரியாத வரைக்கும் தான் கொழம்பிக்கணும்! தெரிஞ்சிட்டா, தெளிஞ்சிக்க வேண்டியது தான்...'' என்றார் பத்மா.
மறுநாள் -
செவ்வாய் கிழமை -
லட்சுமிக்கு மிகுந்த சோர்வாக விடிந்தது. மனமும், உடலும் தளர்ந்த நிலையில் திண்ணையில் அமர்ந்து, வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் வந்தார் ஆசிரியர் பழனிதுரை.
லட்சுமியை கண்டதும், ''மனசை தளர விடாதீங்க... 10 நாள் போகட்டும்... நேரா மும்பைக்கு போய், பையனை கண்டுபிடிச்சிடலாம்... இப்பதான் நமக்கு இடம் தெரிஞ்சு போச்சே...'' என நம்பிக்கை ஊட்டும் வகையில் கூறினார்.
லட்சுமி பதில் சொல்ல முயன்றார்.
அதற்குள் -
வீட்டு முன் சைக்கிள் வந்தது.
அதிலிருந்து இறங்கிய மணவன் பன்னீர் செல்வம், ''காலை வணக்கம் ஐயா...'' என, வணங்கினான். அதை ஏற்று புன்னகைத்தார் பழனிதுரை.
அவனை அன்புடன் வரவேற்றபடி, ''வாப்பா... நாம பார்க்க நெனைச்ச அந்த ஐயாவை, நேத்தே கடைவீதியில் எதேச்சையாக பார்த்தேன். விஷயத்தை கூறினேன்; அவரும், சில காரணம் கூறி, கை விரிச்சிட்டாரு! எனக்கு ரொம்ப சங்கடமா போயிடுச்சு...'' என்றார்.
பன்னீர் செல்வத்தின் முகம் சற்று வாடியது.
''உங்க அம்மா யாருகிட்டயோ உதவி கேட்க போனாங்களே... அது என்னாச்சு...''
''அதுவும் கிடைக்கலீங்க ஐயா...''
''இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு... என்ன செய்ய போறோம்ன்னு தெரியல...''
இதை கேட்டதும் பன்னீரின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
''எப்படியாச்சும், என்னை கல்லுாரியில சேர்த்து விட்டுடுங்க ஐயா... நல்லபடியா படிச்சி முன்னேறி, கண்டிப்பா கடனை அடைச்சுடுவேன்... நன்றியா நடந்துக்குவேன்...''
''நீ சரியா நடந்துக்குவேன்னு தெரியும்... அதனால தானே, இவ்வளவு முயற்சியும் செய்து கிட்டிருக்கேன்... சாப்பிட்டியா...''
''இன்னும் இல்லீங்க...''
''இரு... என் கூடவே சாப்பிடு... வேற என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்... உள்ள வந்து உட்காரு...''
''பரவாயில்லங்க... எங்கம்மா ஒரு விஷயத்த உங்களிடம் சொல்ல சொன்னாங்க... உடனே வெளியில போற வேலை இருந்தா போ! இல்லைன்னா வீட்டுக்கு வா; நம்ம குலத்தெய்வம் கோவிலுக்கு போயி பிரார்த்தனை செய்து வரலாம்ன்னாங்க... அங்க போயி வரட்டுங்களா ஐயா...''
''அதை செய் முதல்ல... தெய்வ பலம் தான் இப்ப வேணும்...''
நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சொன்னார் ஆசிரியர்.
இந்த உரையாடலை கேட்டபடி நின்றார் லட்சுமி.
சிறிதும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடந்தது.
அந்த மாணவனுக்கு வேண்டிய தெய்வ பலம், சற்று நேரத்தில் மனித உருவில் வந்து சேர்ந்தது!
- தொடரும்...
நெய்வேலி ராமன்ஜி